

சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் 'அண்ணாத்த' படத்தின் கதை, முதலில் அஜித்துக்குச் சொல்லப்பட்டது என ட்விட்டரில் புது சர்ச்சை ஒன்று கிளம்பியுள்ளது.
'தர்பார்' படத்தை முடித்துவிட்டு, சிவா இயக்கத்தில் உருவாகும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் ரஜினி. இந்தப் படத்துக்கு முதலில் தலைப்பிடவில்லை. ஆகையால் படக்குழுவினரும் ரசிகர்களும் இப்படத்தை 'தலைவர் 168' என்று அழைத்து வந்தார்கள்.
இதனிடையே 'தலைவர் 168' படத்துக்கு 'அண்ணாத்த' என்று தலைப்பிடப்பட்டுள்ளதாக படக்குழு கடந்த 24.02.20 அன்று அதிகாரபூர்வமாக அறிவித்தது.
'அண்ணாத்த' படத்தில் குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ்ராஜ், சதீஷ் உள்ளிட்ட பலர் ரஜினியுடன் நடித்து வருகிறார்கள். வெற்றி ஒளிப்பதிவு செய்து வரும் இப்படத்துக்கு இமான் இசையமைத்து வருகிறார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இன்னும் படத்தின் வெளியீடு எப்போது என்பது உறுதியாகவில்லை.
இந்நிலையில் 'அண்ணாத்த' படம் குறித்து இணையத்தில் புதிய சர்ச்சை ஒன்று கிளம்பியுள்ளது. ‘விவேகம்’ படத்துக்குப் பிறகு 'அண்ணாத்த' படத்தின் கதையும், 'விஸ்வாசம்' படத்தின் கதையும் முதலில் அஜித்துக்குச் சொல்லப்பட்டது. ஆனால், அஜித் ‘விஸ்வாசம்’ படத்தைத் தேர்ந்தெடுத்துவிட்டார் என்று அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கூறி வருகின்றனர்.
அஜித் ரசிகர்களின் இந்தக் கருத்துகள் சமூக வலைதளங்களின் வைரலாகி வருகின்றன.