Published : 25 Feb 2020 01:41 PM
Last Updated : 25 Feb 2020 01:41 PM

தயாரிப்பாளர் வேண்டுகோள்: சர்ச்சைப் பதிவை நீக்கிய அஜயன் பாலா

'தலைவி' படத்தின் தயாரிப்பாளர் வேண்டுகோளை ஏற்று, தனது ஃபேஸ்புக் பதிவை நீக்கியுள்ளார் எழுத்தாளர் அஜயன் பாலா.

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு 'தலைவி' படத்தின் புதிய போஸ்டரை நேற்று (பிப்ரவரி 24) வெளியிட்டது படக்குழு. ஏ.எல்.விஜய் இயக்கி வரும் இந்தப் படத்தில் ஜெயலலிதாவாக கங்கணா ரணாவத் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் போஸ்டர்களில் எழுத்தாளர் அஜயன் பாலாவின் பெயர் இடம் பெறவில்லை.

ஏ.எல்.விஜய் படங்களின் கதை விவாதம் மற்றும் வசனங்களில் பணிபுரிந்து வருபவர் அஜயன் பாலா. தற்போது தன் பெயர் இல்லாதது தொடர்பாக இயக்குநர் ஏ.எல்.விஜய்யை கடுமையாகச் சாடி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டார் அஜயன் பாலா. அதில் "பத்தாண்டு நட்புக்காக இயக்குநர் விஜய்யிடம் பல இழப்புகளையும் துரோகங்களையும் அனுமதித்துக்கொண்டேன். இதை என்னால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை" என்று குறிப்பிட்டு இருந்தார். (அஜயன் பாலாவின் குற்றச்சாட்டை முழுமையாக வாசிக்க)

இந்தப் பதிவு வைரலாக பரவத் தொடங்கியது. இந்நிலையில் சில மணித்துளிகளில் இப்பதிவை நீக்கிவிட்டார். அதற்குள் பிரச்சினைக்கு முடிவா என்றெல்லாம் பலர் கேள்வி எழுப்பத் தொடங்கினர். தற்போது தன் பதிவை நீக்கியதற்கான காரணத்தைத் தெரிவித்துள்ளார் அஜயன் பாலா.

இது தொடர்பாக தன் ஃபேஸ்புக் பதிவில் ”இன்று காலை ’தலைவி’ பட பிரச்சினை தொடர்பாக முகநூலில் இட்ட பதிவுக்கு பலரும் ஆதரவும் வருத்தமும் தெரிவித்தனர். அவர்களுக்கும் தொடர்ந்து இது குறித்து அழைப்பு விடுத்துப் பேசும் ஊடக இதழியல் நண்பர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.

தயாரிப்பாளர் அழைத்து வருத்தம் தெரிவித்து நாளை நேரில் பேசித் தீர்க்க சென்னை வருவதாகவும் உறுதி கூறியதால் பதிவை நீக்கியுள்ளேன். நாளை சந்திப்புக்குப் பின் தொடர்பு கொள்கிறேன். அனைவருக்கும் நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார் அஜயன் பாலா.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x