Published : 24 Feb 2020 08:45 PM
Last Updated : 24 Feb 2020 08:45 PM

'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி நிறைவு: ரம்யா பாண்டியன் நெகிழ்ச்சி

'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி நிறைவடைந்ததை முன்னிட்டு, ரம்யா பாண்டியன் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

சமீபமாக விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சி 'குக் வித் கோமாளி'. பிரபலங்களுடன் இணைந்து தொலைக்காட்சியில் காமெடி செய்பவர்கள் இணைந்து ஒரு அணியாகப் பங்கேற்றுச் சமைப்பதே இந்த நிகழ்ச்சியின் சிறப்பு. சமையல் மற்றும் காமெடி கலந்த நிகழ்ச்சி என்பதால் இது மிகவும் வைரலானது.

இணையத்தில் புகைப்படங்கள் மூலம் வைரலான நடிகை ரம்யா பாண்டியன், இந்த நிகழ்ச்சியின் மூலம் தொலைக்காட்சி ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானார். இதன் இறுதிப் போட்டியில் 3-ம் இடத்தைப் பிடித்தார். தற்போது இந்த நிகழ்ச்சி முடிவு பெற்றதைத் தொடர்ந்து ரம்யா பாண்டியன் தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

'' 'குக் வித் கோமாளி' குடும்பத்தில் ஒரு பங்காக இருக்க வாய்ப்பு தந்த விஜய் தொலைக்காட்சிக்கு நான் என்றும் நன்றியுடன் இருப்பேன்.

இதுபோன்ற ஒரு நிகழ்ச்சி ஒரே இரவில் முடிவு செய்யப்படாது. மீடியா மேசன்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த ரவூஃபா, இயக்குநர் பார்த்திபன், நிர்வாகத் தயாரிப்பாளர் ப்ரியா, துணை இயக்குநர் விமல் மற்றும் அனைத்துத் தொழில்நுட்பக் கலைஞர்களின் துல்லியமான திட்டமிடல் மற்றும் கடின உழைப்பால்தான் இந்நிகழ்ச்சி பெரிய வெற்றி பெற்றது.

நல்ல ஆதரவு தந்த திறமையான சமையல் கலை நிபுணர்கள் வெங்கடேஷ் பட் மற்றும் தாமு ஆகியோரின் ஆக்கபூர்வமான கருத்துகளுக்கும், என்னைக் கற்றுக்கொள்ள ஊக்கப்படுத்தியதற்கும் நன்றி.

புகழ், பாலா, ஷிவாங்கி, மணிமேகலை, தங்கதுரை, பப்பு, சாய் சக்தி மற்றும் பிஜிலி ரமேஷ் உள்ளிட்ட என் அன்பார்ந்த கோமாளிகளுக்கும் பெரிய நன்றி. இவர்களால்தான் இந்நிகழ்ச்சி இன்று பெரிய அளவில் பேசப்படுகிறது. எனது சக போட்டியாளர்கள், அந்த சூழலை மகிழ்ச்சிகரமாக மாற்றிய உமா, வனிதா, ரேகா, பாலாஜி அண்ணா, ப்ரியங்கா அக்கா, ஞானசம்பந்தன் மற்றும் மோகன் வைத்யா ஆகியோருக்கும் நன்றி.

தொகுப்பாளர்கள் ரக்‌ஷன் மற்றும் நிஷாவின் பணியைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். எப்போதும் இந்த நிகழ்ச்சியை எனது மனத்துக்கு நெருக்கமாக வைத்திருப்பேன். பல குடும்பங்கள் மற்றும் குழந்தைகளின் அன்பையும் ஆதரவையும் இந்நிகழ்ச்சி பெற்றுத் தந்துள்ளது. தொடர்ந்து என்னைத் தொடர்பு கொண்டதற்கு, ஊக்கப்படுத்தியதற்கு, உங்களில் ஒருத்தியாக ஏற்றுக்கொண்டதற்கு நன்றி. என்றும் நன்றிக் கடன் பட்டுள்ளேன்”.

இவ்வாறு ரம்யா பாண்டியன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x