Published : 24 Feb 2020 02:06 PM
Last Updated : 24 Feb 2020 02:06 PM

மூளையில்லாத குரங்குகள்: பாகிஸ்தான் பேராசிரியரைச் சாடிய ஹ்ரித்திக் ரோஷன்

பாகிஸ்தானைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவர் அவரது மாணவரின் பேச்சுத் திறனை குறிப்பிட்டு, அவமானப்படுத்திய விவகாரத்துக்கு ஹ்ரித்திக் ரோஷன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் தனக்கு சிறுவயதில் சரளமாகப் பேசுவதில் பிரச்சனை இருந்ததாக பல்வேறு தருணங்களில் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்நிலையில் மரியம் ஜுல்ஃபிகர் என்பவர் ட்விட்டரில் இன்று ஒரு பதிவை எழுதியிருந்தார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:

''என் சகோதரருக்கு திக்குவாய் பிரச்சினை இருக்கிறது. அவர் தன் வகுப்பில் பாடம் குறித்து விளக்கிக் கொண்டிருந்தார். அப்போது அவருடைய துறைத் தலைவர்/ பேராசிரியர் ஒட்டுமொத்த மாணவர்கள் முன்னிலையிலும் ‘உன்னால் சரியாகப் பேச முடியவில்லை என்றால் நீ படிக்காமல் இருக்கலாம்’ என்று கூறினார். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அவர் தன்னுடைய அறையை விட்டு வெளியே வரவில்லை.

அவர் மீண்டும் பல்கலைக்கழகத்துக்குச் சென்று வகுப்பறையில் உள்ளவர்களை எதிர்கொள்ள மறுக்கிறார். அவருடைய தன்னம்பிக்கை சுக்குநூறாக நொறுங்கி விட்டது. நான் சொல்ல விரும்புவதெல்லாம் இதுபோன்ற ஒரு பதவியில் இருப்பவர் இவ்வளவு கீழிறங்கி ஒரு பதின்பருவ மாணவரின் தன்னம்பிக்கையை உடைக்கலாமா? அவர் பாகிஸ்தானில் உள்ள தேசிய பல்கலைகழகத்தின் பிபிஏ துறையின் தலைவர்''.

இவ்வாறு மரியம் ஜுல்ஃபிகர் கூறியுள்ளார்.

இந்தப் பதிவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஹ்ரித்திக் ரோஷன், ''அந்தப் பேராசிரியரின் இரண்டு ஒப்பீடும் பொருத்தமற்றவை என்று உங்கள் சகோதரரிடம் கூறுங்கள். அவருடைய திக்குவாய் பிரச்சினை ஒருபோதும் அவருடைய கனவைத் தடுத்துவிடக்கூடாது. இது அவருடைய தவறு அல்ல என்றும் இது வெட்கப்பட வேண்டிய விஷயம் இல்லை என்றும் அவரிடம் சொல்லுங்கள். அவரை அவமானப்படுத்துபவர்கள் மூளையில்லாத குரங்குகளைப் போன்றவர்கள்'' என்று சாடியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x