Published : 21 Feb 2020 07:16 PM
Last Updated : 21 Feb 2020 07:16 PM

நினைக்க நினைக்கக் கண்களில் நீர் முட்டிக் கொண்டு வருகிறது: 'இந்தியன் 2' விபத்து குறித்து சிம்பு உருக்கம்

பணமோ, வார்த்தைகளோ உயிரிழப்பை ஈடுசெய்துவிட முடியாது என்று 'இந்தியன் 2' படப்பிடிப்பில் நேர்ந்த விபத்து குறித்து சிம்பு தெரிவித்துள்ளார்.

'இந்தியன் 2' படப்பிடிப்பில் கிரேன் அறுந்து விழுந்ததில் கிருஷ்ணா, மதுசூதனராவ் மற்றும் சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 9 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஷங்கர், கமல், காஜல் அகர்வால் ஆகியோர் நூலிழையில் தப்பித்துள்ளனர். இதனால், படக்குழுவினர் பெரும் அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.

இந்த விபத்தால் திரையுலகினர் பலரும் 'இந்தியன் 2' படக்குழுவினருக்கு ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள்.

தற்போது 'இந்தியன் 2' விபத்து குறித்து சிம்பு வெளியிட்ட அறிக்கை:

"எமது சினிமா தொழிலாளர்களும், தொழில் நுட்பக் கலைஞர்களும் குறிப்பாக சண்டைக் காட்சி நடிகர்களும் நூலிழையில் உயிர் தப்பியே தினம் வீடு திரும்பிக் கொண்டிருக்கின்றனர். ஒவ்வொரு தொழிலாளரையும் நான் எங்களை ஏற்றி வைக்கும் ஏணியாகப் பார்க்கிறேன். அவர்களின் வியர்வையில்தான் எங்கள் உயரம் தீர்மானிக்கப்படுகிறது.

அவர்கள் ஒவ்வொருவரையும் என் குடும்பமாகவே பார்க்கிறேன். 'இந்தியன் 2' படப்பிடிப்பில் நேர்ந்த விபத்து என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கிவிட்டது. எத்தனைக் கனவுகளோடு விபத்தில் சிக்கியவர்களின் சினிமா பயணம் ஆரம்பித்திருக்கும்?. அவர்களின் குடும்பத்தின் கனவுகளும் சேர்ந்தே தொலைந்து போய்விட்டதே என்பதை நினைக்க நினைக்கக் கண்களில் நீர் முட்டிக் கொண்டு வருகிறது.

இறந்துபோன தொழிலாளர்கள், உதவி இயக்குநர்களின் குடும்பத்திற்கு என் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஈடுசெய்ய முடியாத இந்த இழப்பைத் தாங்கும் பலத்தை இறைவன் தர வேண்டிக் கொள்கிறேன். இறந்தவர்களின் ஆத்மா சாந்தியடையட்டும். மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்கள் நலமுடன் வீடு திரும்ப அந்த ஆண்டவன் துணை நிற்கட்டும்.

இனியொரு போதும் இப்படியொரு இழப்பு வேண்டாம். தொழிலாளர்களுக்கும், தொழில்நுட்பக் கலைஞர்களுக்குமான பாதுகாப்பை இன்னும் கவனமாகக் கையாள வேண்டும் என்பதை அமைப்புகள் உறுதிசெய்ய வேண்டும்.

பணமோ, வார்த்தைகளோ உயிரிழப்பை ஈடுசெய்துவிட முடியாது. அதனால் பணியின் போது ஒவ்வொருவரும் தங்கள் உயிரின் மீது கவனம் வைத்துப் பாதுகாப்பை உறுதிசெய்துகொண்டு வேலை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்”.

இவ்வாறு சிம்பு தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x