Published : 20 Feb 2020 09:01 PM
Last Updated : 20 Feb 2020 09:01 PM

சட்டமன்றத்தில் என்னை விடப் பலரும் நன்றாக நடிக்கிறார்கள்: கருணாஸ் கிண்டல்

என்னை விடச் சட்டமன்றத்தில் பலரும் நன்றாக நடிக்கிறார்கள் என்று 'சங்கத்தலைவன்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கருணாஸ் கிண்டலாகத் தெரிவித்தார்.

மணிமாறன் இயக்கத்தில் சமுத்திரக்கனி, ரம்யா, கருணாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'சங்கத்தலைவன்'. வெற்றிமாறன் மற்றும் உதயா இருவரும் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படம் விரைவில் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் இன்று (பிப்ரவரி 20) நடைபெற்றது.

இதில் படக்குழுவினருடன் இணைந்து இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், இயக்குநர் சுப்பிரமணிய சிவா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் கருணாஸ் பேசியதாவது:

இயக்குநர் வெற்றிமாறன், மணிமாறன் இருவரையுமே 'அது ஒரு கனா காலம்' படப்பிடிப்பிலிருந்து தெரியும். அன்று முதலே எங்களுடைய நட்பு தொடர்கிறது. வெற்றிமாறன் - மணிமாறன் நட்பு அப்படியே இன்னும் பல காலம் தொடர வேண்டும்.

என்னை விடச் சட்டமன்றத்தில் பலரும் நன்றாக நடிப்பதால், நாம் மீண்டும் நமது இடத்துக்கே போய்விடுவோம் என நினைத்தேன். சினிமாவில் எந்தவித போலித்தனம் இல்லாமல் பழகும் நபர்கள் சில பேரில் வெற்றிமாறனும் ஒருவர். அந்த விதத்தில் அவரிடம் நான் மறுபடியும் நடிக்கலாம் என்று இருக்கிறேன் என்று அவரிடம் கேட்டேன். அப்போது தான் 'தறி' நாவலைப் படமாகப் பண்ணலாம் என்று சொன்னார்கள்.

இந்தப் படத்தில் நீங்கள் எல்லாம் நடித்தால் சரியாக இருக்காது. சத்யராஜ் அல்லது சமுத்திரக்கனி நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்று சொன்னார். அப்போது இந்தப் படம் தொடங்கலாம் என்று முடிவு செய்து பண்ணினோம். சமுத்திரக்கனி இதில் நடிக்க ஒப்புக் கொண்டதால் மட்டுமே உருவாகியுள்ளது என்பது தான் உண்மை.

'சங்கத்தலைவன்' ஒரு நல்ல தரமான படமாக இருக்கும். அதில் மாற்றுக் கருத்தே இருக்காது. மத்திய, மாநில அரசால் ஒதுக்கிவைக்கப்பட்டுக் கொண்டே இருக்கும் தொழில் இருக்கும் தொழிலாளியைப் பற்றிய படம். எனக்கு நாளை 50-வது பிறந்த நாள். 'சூரரைப் போற்று' படத்தில் நன்றாக நடித்திருப்பதாக ஜி.வி.பிரகாஷ் சொன்னார். இதை ஏன் இங்குச் சொல்கிறேன் என்றால் அடுத்ததாக சூர்யாவை வைத்து வெற்றிமாறன் படம் பண்ணவுள்ளார். இப்போதே அதற்கான ஒரு பிட்டைப் போட்டுவிட்டேன்.

நான் நல்ல நடிகனா, பெரிய நடிகனா என்றெல்லாம் தெரியாது. கொடுக்கப்படும் வேடத்தை எவ்வளவு பெரிய நடிகர்கள் முன்னிலையில் தைரியமாக நடிக்க என்னுடைய இயக்குநர் பாலா கற்றுக் கொடுத்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x