Published : 17 Feb 2020 11:13 AM
Last Updated : 17 Feb 2020 11:13 AM

ஜேம்ஸ் பாண்ட் டைட்டில் பாடல் வெளியானது: இணையத்தில் பெரும் வரவேற்பு

அடுத்த ஜேம்ஸ் பாண்ட் படமான ‘நோ டைம் டு டை’ படத்தில் இடம்பெறவுள்ள டைட்டில் பாடல் வெளியாகியுள்ளது.

1953 ஆம் ஆண்டு இயன் ஃப்ளெமிங் உருவாக்கிய ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரம் உலகம் முழுவதும் மிகவும் பிரபலம். 1962 ஆம் ஆண்டு முதல் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு இதுவரை 24 படங்கள் வெளியாகியுள்ளன. வியக்கவைக்கும் ஆக்‌ஷன் காட்சிகள், புதிய தொழில்நுட்பங்கள், விறுவிறுப்பான திரைக்கதைகளைக் கொண்ட இப்படங்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உண்டு.

கடைசியாக வெளியான நான்கு பாண்ட் படங்களில் ஜேம்ஸ் பாண்டாக டேனியல் க்ரெய்க் நடித்து வருகிறார். அடுத்ததாக வெளியாகவுள்ள 'நோ டைம் டு டை', ஜேம்ஸ் பாண்டாக க்ரெய் நடிக்கும் கடைசிப் படமாகும். இப்படத்தை கேரி ஜோஜி இயக்கியுள்ளார். இப்படம் வரும் ஏப்ரல் 8 ஆம் தேதி வெளியாகவுள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரெய்லர் இணையத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

வழக்கமாக ஜேம்ஸ் பாண்ட் படங்கள் தொடங்கும்போது டைட்டிலில் ஒரு பாடல் இடம்பெறுவது வழக்கம். இந்தப் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெறும். இதற்கு முன்னர் வெளியான ‘ஸ்பெக்ட்ரே’ மற்றும் 'ஸ்கைஃபால்’ ஆகிய ஜேம்ஸ் பாண்ட் படங்களில் இடம் பெற்ற 2 பாடல்கள் சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் விருதுகளை வென்றன.

அந்த வகையில் அடுத்த ஜேம்ஸ் பாண்ட் படமான ‘நோ டைம் டு டை’ படத்தில் இடம்பெறப் போகும் பாடல் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. இப்பாடலை பிரபல பாப் பாடகி பில்லி ஈலிஷ் பாடியுள்ளது. அவரே தனது சகோதரர் ஃபீனியஸ் ஓ. கானலுடன் இணைந்து இப்பாடலை எழுதியிருக்கிறார்.

இப்பாடலை எழுதி பாடியது பில்லி ஈலிஷ் கூறுகையில், ''இதில் ஒரு அங்கமாக இருப்பது எல்லா வகையிலும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இதுபோன்ற ஒரு புகழ்பெற்ற படவரிசையில் இடம் பெறும் பாடலைப் பாடியது மிகப்பெரிய கவுரவம். எனக்கு இன்னும் அதிர்ச்சியாக இருக்கிறது” என்றார்.

ஜேம்ஸ் பாண்ட் பட வரலாற்றிலேயே டைட்டில் பாடலைப் பாடும் இளம் பாடகி பில்லி ஈலிஷ் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் 5 கிராமி விருதுகள் இவருக்கு வழங்கப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x