Published : 07 Feb 2020 06:43 PM
Last Updated : 07 Feb 2020 06:43 PM

முதல் பார்வை: சீறு

தன் தங்கையைக் காப்பாற்றிய ரவுடிக்காக களமிறங்கி, அவருடையப் பிரச்சினையைத் தீர்த்து வைக்கும் கதையே 'சீறு'

மாயவரத்தில் கேபிள் டிவி நடத்தி வருகிறார் ஜீவா. அந்த ஊரிலுள்ள எம்எல்ஏவுக்கு இவருக்கும் எப்போதும் பிரச்சினை தான். ஒரு கட்டத்தில் இவரைக் கொலை செய்ய ரவுடியை (வருண்) வர வைக்கிறார். ஜீவா - வருண் இருவருக்கும் சண்டை வருகிறது. ஒரு கட்டத்தில் ஜீவாவின் தங்கை பிரசவ வலியால் துடிக்கும் போது காப்பாற்றுகிறார். அதன் மூலம் ஜீவாவுக்கு வருண் மீது இருந்த கோபம், நட்பாக மாறுகிறது.

உடனடியாக வருணைத் தேடிக் கிளம்புகிறார். அப்போது ஆபத்திலிருக்கும் வருணைக் காப்பாற்றி மருத்துவமனையில் அனுமதிக்கிறார். தன் தங்கையின் உயிரைக் காப்பாற்றியவர் உயிரைக் காப்பாற்றுவேன் என ஜீவா களமிறங்குகிறார். அப்போது வருணுக்கு என்ன பிரச்சினை, எதனால் பிரச்சினை, அதை எப்படி தீர்த்து வைக்கிறார் என்பதே 'சீறு'.

'றெக்க' இயக்குநர் ரத்ன சிவாவின் அடுத்த படம். நல்ல கமர்ஷியல் களத்தை எடுத்துக் கொண்டு, திரைக்கதையில் கொஞ்சம் தடுமாறியிருக்கிறார். ஒரு சில காட்சிகளை மட்டுமே சுவாரசியமாக அமைத்திருக்கிறார்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு ஆக்‌ஷன், எமோஷன், காதல் என அனைத்தும் கலந்த கதையில் நடித்துள்ளார் ஜீவா. அனைத்திலுமே சிறப்பான பங்களிப்பை வழங்கியிருக்கிறார். தங்கைக்காக உருகுவது, தங்கையைக் காப்பாற்றியது தன்னைக் கொலை செய்ய வந்தவன் என தெரிந்தவுடன் அவனுடன் நட்புப் பாராட்டுவது என ஸ்கோர் செய்திருக்கிறார். இந்த மாதிரியான கமர்ஷியல் கதையில் நாயகிக்கு என்ன வேலையோ அதை செவ்வனே செய்துள்ளார் ரியா சுமன். 2 காட்சிகள், ஒரு பாடல், இடைவேளைக்குப் பின்பு ஒரு காட்சி என எஸ்கேப்.

ஜீவாவின் தங்கையாக நடித்திருக்கும் காயத்ரி, நண்பராக நடித்துள்ள சதீஷ் உள்ளிட்டோரும் தங்களுடைய பங்கைச் சிறப்பாக செய்திருக்கிறார்கள். அதிலும் சதீஷின் காமெடிக்கு சிரிப்பே வரவில்லை. 'நீ காமெடி பண்ணா சிரிப்பே வரமாட்டிக்குது மச்சி' என ஜீவா கலாய்க்கும் போது திரையரங்கில் சிரிப்பு மழை.

படத்தில் ஜீவாவுக்குப் பிறகு முக்கியமான கதாபாத்திரம் என்றால் அது வருணுக்குத் தான். அவரது முந்தைய படங்களை விட நடிப்பில் இதில் தேர்ச்சி பெற்றிருக்கிறார். அவருடைய வில்லத்தனமான பார்வை, நடை என அப்படியே பிரதிபலித்திருக்கிறார். மேலும், ரவுடிக்கான நெறிமுறைகளை மொபைல் போன் கால் மூலம் இவர் விவரிக்கும் இடம் கச்சிதம்.

வில்லனாக நடித்துள்ளார் நவ்தீப். அவருடைய கதாபாத்திர வடிவமைப்பு முழுமையானதாக இல்லை. அவ்வளவு பெரிய வக்கீல், பள்ளிக்கூட மாணவி அளித்த பேட்டிக்காகக் கொலை செய்வதை இன்னும் நம்பத் தகுந்த காட்சிகள் மூலம் சொல்லியிருக்கலாம். கொலைக்குப் பிறகு அவருடைய தோழிகள் நவ்தீப் கொலை செய்ய வருவது எல்லாம் கேட்க நன்றாக இருந்தாலும், காட்சியமைப்பாக மனதில் சுத்தமாக ஒட்டவில்லை. நாயகன் - வில்லன் மோதல், இடைவேளைக்குப் பின்பு ஒரு ப்ளாஷ்பேக் அதிலிருந்து க்ளைமாக்ஸ் என்ற வழக்கமான டெம்பிளேட்டை இன்னும் எத்தனை படத்தில் பார்ப்பது என்று தெரியவில்லை.

இடைவேளை வரை பரபரப்பாக இருந்த கதை, அதற்குப் பிறகு ப்ளாஷ்பேக் காட்சிகளே முழுமையாக ஆக்கிரமித்ததால் படம் ரொம்பவே தொய்வடைகிறது. அதிலும் அவ்வளவு பெரிய வக்கீல் வெறும் 12 அடியாட்களுடன் ஹீரோவின் வருகைக்காகக் காத்திருப்பது எல்லாம் செம காமெடி.

மாயவரத்தின் அழகையும், சென்னை வியாசர்பாடியின் இருள் பக்கங்களையும் ஒன்று சேர பார்வையாளர்களுக்குக் கடத்தியிருக்கிறது பிரசன்ன குமாரின் ஒளிப்பதிவு. இமானின் இசையில் 'செவ்வந்தியே மதுவந்தியே' பாடல் மனதை உருக்குகிறது. காட்சிகளுக்குத் தேவையான பின்னணி இசையை உறுத்தாமல் வழங்கியிருக்கிறார்.

கதையாக அங்கங்கே திரைக்கதையில் சுவாரசியப்படுத்தியவர், ஒட்டுமொத்தமாக சுவாரசியப்படுத்தியிருந்தால் இந்த 'சீறு' இன்னும் சீறியிருக்கும். தற்போதைய சீற்றம் ரொம்பவே குறைவு தான்.

தவறவிடாதீர்

முதல் பார்வை: வானம் கொட்டட்டும்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x