Published : 05 Feb 2020 12:13 PM
Last Updated : 05 Feb 2020 12:13 PM

நரகாசூரனில் இருந்து மீண்டு வந்தது மிகவும் கடினமாக இருந்தது: மனம் திறக்கும் கார்த்திக் நரேன்

‘துருவங்கள் 16’ மற்றும் ‘நரகாசூரன்’ படங்களைத் தொடர்ந்து கார்த்திக் நரேன் இயக்கியுள்ள படம் ‘மாஃபியா’. அருண் விஜய் ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில் ப்ரியா பவானிசங்கர் ஹீரோயினாகவும், பிரசன்னா வில்லனாகவும் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்தன. கடந்த ஆண்டு டிசம்பர் வெளியீட்டிலிருந்து பின்வாங்கியது இந்தப் படம். அதனைத் தொடர்ந்து எப்போது வெளியீடு என்பது தெரியாமலேயே இருந்தது.

கோகுல் பெனாய் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு, ஜாக்ஸ் பிஜோய் இசையமைத்துள்ளார். லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் தயாரித்துள்ளார். இப்படம் வரும் பிப்ரவரி 21-ம் தேதி வெளியாகவுள்ளது.

'துருவங்கள் 16' படத்துக்குப் பிறகு கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவான படம் 'நரகாசூரன்'. அரவிந்த் சாமி, ஸ்ரேயா சரண், சந்தீப் கிஷன், ஆத்மிகா, இந்திரஜித் ஆகியோர் நடித்துள்ள இப்படத்தை கெளதம் மேனன், கார்த்திக் நரேன் மற்றும் பத்ரி கஸ்தூரி இணைந்து தயாரித்துள்ளனர்.

கெளதம் மேனனுக்கு ஏற்பட்ட பைனான்ஸ் சிக்கலால், இந்தப் படத்தின் வெளியீடு தள்ளிப்போனது. இந்தப் படத்தை முன்வைத்து கெளதம் மேனன் - கார்த்திக் நரேன் இருவருமே ட்விட்டரில் வார்த்தைப் போரில் ஈடுபட்டு வந்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ’தி இந்து’ ஆங்கில நாளிதழுக்கு அளித்துள்ள பிரத்யேக பேட்டியில் கார்த்திக் நரேன் ’நரகாசூரன்’ குறித்து பல்வேறு விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

அப்பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:

''தமிழ் சினிமாவில் சென்டிமென்ட் உண்டு என்பது நமக்கு தெரிந்த விஷயம். ஆனால் கடந்த 3 ஆண்டுகளில், எனக்குள்ளும் நிறைய சென்டிமென்ட் விஷயங்கள் குடிகொண்டு விட்டன. ‘ந’ எழுத்தில் தொடங்கும் பெயர்களை வைப்பதில்லை என்று முடிவெடுத்திருக்கிறேன்.

நாம் நம்முடைய உணர்வுகளை நமக்குள்ளேயே வைத்திருக்க முடியாது. ஒரு மனிதனாக நான் பரிணமித்திருக்கிறேன். நடந்தவையெல்லாம் ஏதோ ஒரு காரணத்துக்காகவே நடந்திருக்கிறது. அவை என்னை மிகவும் அமைதியாக மாற்றிவிட்டது. அவற்றைப் பற்றி எவ்வளவு யோசித்தாலும், நடந்த எதையும் நம்மால் சரிசெய்ய முடியாது.

நரகாசூரனில் இருந்து மீண்டு வருவது மிகவும் கடினமாக இருந்தது. ஒரு இயக்குநருக்கு ஒரு கதையை எழுதத் ஆரம்பிக்கும்போது தொடங்கும் பயணம், கடைசியாகப் படம் வெளியாகும்போது முடிகிறது. 'மாஃபியா' கதையை எழுதத் தொடங்கியபோது என்னுடைய மனம் நரகாசூரனின் உலகத்திலிருந்தும், கதாபாத்திரங்களிலிருந்து வெளிவர மறுத்தது. என்னுடைய பெற்றோர், என்னுடைய குழுவினர் ஆதரவால் அதிலிருந்து வெளியே வந்தேன்''.

இவ்வாறு கார்த்திக் நரேன் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x