Published : 04 Feb 2020 09:36 PM
Last Updated : 04 Feb 2020 09:36 PM

போஸ்டருக்கும் வலுக்கும் எதிர்ப்பு: 'காக்டெய்ல்' படக்குழுவினர் விளக்கம்

'காக்டெய்ல்' படத்தின் போஸ்டருக்கு எதிர்ப்பு வலுத்ததைத் தொடர்ந்து, படக்குழுவினர் விளக்கம் அளித்துள்ளனர்.

PG மீடியா ஒர்க்ஸ் சார்பில் ஒளிப்பதிவாளர் PG முத்தையா தயாரித்து வரும் படம் ‘காக்டெய்ல்’. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் முருகன் இயக்கியுள்ளார். யோகி பாபு, ரமேஷ், மிதுன், பாலா, குரேஷி, சாயாஜி ஷிண்டே, மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

இதில் யோகி பாபு முருகக் கடவுள் போல உடையணிந்து இருப்பது போலவும், பின்னால் மயில் இல்லாமல் காக்டெய்ல் பறவை இருப்பது போலவும் வடிவமைத்திருந்தனர். இதற்குப் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் இதுகுறித்து பி.ஜி.முத்தையா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

''ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பறவை இனமான காக்டெய்ல் என்ற கிளி பங்கேற்று இருப்பதால்தான் ’காக்டெய்ல்’ என்ற தலைப்பை இயக்குநரின் பரிந்துரையின் பேரில் வைத்தோம். படத்தின் ஒரு காட்சியில் யோகி பாபுவின் கனவில் தமிழ்க் கடவுள் முருகன் வருவதாக ஒரு காட்சி உள்ளது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை ஃபர்ஸ்ட் லுக்காக வெளியிட்டோம்.

இதைத் தவிர எங்களுக்கு வேறு எந்தவிதமான உள்நோக்கமும் கிடையாது. எந்தவித உள்நோக்கமும் இல்லாத நிலையில் வெளியிடப்பட்ட ஒரு போஸ்டர் இத்தகைய சர்ச்சைகளுக்கு உள்ளானது நாங்களே எதிர்பாராதது. யாரையும் புண்படுத்துவதோ, எங்கள் தமிழ்க் கடவுள் முருகப் பெருமானை எந்தவிதத்திலும் இழிவுபடுத்திவிடவோ ஒரு கணம் யோசித்ததில்லை. அது எங்கள் நோக்கமும் அல்ல. எங்கள் படத்திலும் மதத்தைப் பற்றியோ, அவர்களின் உணர்வுகளைப் பற்றியோ மரியாதைக் குறைவான காட்சிகளோ, வசனங்களோ இடம் பெறவில்லை.

இது வெறும் தற்செயலான ஒரு நிகழ்வு. இரண்டு நாட்களுக்கு முன்பாகவே எங்களின் பட போஸ்டர் பிரிண்ட் செய்யப்பட்டு ஒட்டக்கொடுத்து விட்டதால் இன்று அது போஸ்டராக ஒட்டப்பட்டுள்ளது. ஒரு தயாரிப்பாளராகப் பொருளாதார நிலையைச் சார்ந்து நிற்பதால் அதை நிறுத்த வழியில்லாது ஒட்டியிருக்கிறோம்.

எந்தவிதச் சாயமும் பூசிக் கொள்ளாமல் கடவுளை வணங்கி ஆரம்பிக்கப்பட்ட ஒரு படத்துக்கு அவரவர் எண்ணம் போல் சாயம் பூசிக் கொள்கிறீர்கள். அதன் மூலம் அரசியலாக்கப்படுவது விரும்பத்தகாத ஒன்று. தற்செயலான இந்நிகழ்வு யாரையேனும் புண்படுத்தியிருந்தால், எங்களின் வருத்தங்களைப் பதிவு செய்கிறோம். முருகப் பெருமானின் பக்தர்கள் சுட்டிக்காட்டிய இப்படிப்பட்ட நிகழ்வு இனி நிகழாது.

இப்படியொரு போஸ்டர் இனி எங்கள் பட விளம்பரம் சம்பந்தமாக இடம்பெறாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். பெருந்தன்மையோடு கடந்து போனவர்களுக்கும், தன்மையோடு சுட்டிக்காட்டியவர்களுக்கும் எங்கள் நன்றிகள்''.

இவ்வாறு பி.ஜி.முத்தையா தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x