Published : 04 Feb 2020 12:19 PM
Last Updated : 04 Feb 2020 12:19 PM

சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ படத் தலைப்புக்கு என்ன அர்த்தம்?

சிவகார்த்திகேயன் நடித்துவரும் ‘அயலான்’ படத் தலைப்புக்கான விளக்கத்தை, கவிஞர் மகுடேசுவரன் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.

நீண்ட நாட்களாக பைனான்ஸ் சிக்கலால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிவகார்த்திகேயன் - ரவிக்குமார் படத்தின் படப்பிடிப்பு, மீண்டும் சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது. இதில், சிவகார்த்திகேயன் சம்பந்தப்பட்ட காட்சிகளைப் படமாக்கி வருகின்றனர்.

மேலும், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கிராபிக்ஸ் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன. இந்தப் படத்துக்கு ‘அயலான்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக, படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது ட்விட்டரில் நேற்று (பிப்ரவரி 3) அறிவித்தார்.

இந்நிலையில், ‘அயலான்’ என்ற சொல்லுக்கான விளக்கத்தைத் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார் கவிஞர் மகுடேசுவரன்.

“பேச்சு வழக்கில் ‘அண்டை அயலாரிடம் வம்பு தும்பு வெச்சிக்காதே’ என்று சொல்வோம். அண்டை என்பது நமக்கு அடுத்துள்ளது. அயலார் என்றால் நமக்கு அருகே இருந்தாலும், வேறுபட்டு நிற்பவர். நம்மவன் இல்லை, அயலவன். அவனே அயலான்.

வடமொழியில் இதற்கு நிகரான சொல் ‘அந்நியன்’ எனலாம். அயல் என்பது ‘நமக்கு அடுத்து இருப்பதும் வேறாக இருப்பதுமான’ தன்மையைக் குறிக்கும். அதனால்தான் வெளிநாட்டினை ‘அயல்நாடு’ என்கிறோம். வெளியூராரை ‘அயலூர்க்காரன்’ என்கிறோம். தமிழல்லாத பிற மொழிகளை ‘அயல்மொழிகள்’ என்கிறோம்.

ய என்ற எழுத்து மக்களின் பேச்சு வழக்கில் ச என்று திரியும். முயல், மொசல் ஆகும். வயம், வசம் ஆகும். அயலூர், அயலூர்க்காரன் என்பனவற்றைத்தான் பேச்சு வழக்கில் அசலூர், அசலூர்க்காரன்’ என்கிறார்கள். அயலான் என்பவன் நம்மிடமிருந்து மாறுபட்டவன். வேறானவன்.

அயல் நிலத்திலிருந்து, அயல் கண்டத்திலிருந்து, அயல் கிரகத்திலிருந்து வந்தவன் ‘அயலான்’ ” என விளக்கம் அளித்துள்ளார் மகுடேசுவரன். இயக்குநர் ரவிக்குமார் கேட்டுக் கொண்டதற்காக இந்த விளக்கத்தைத் தந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x