Published : 03 Feb 2020 06:41 PM
Last Updated : 03 Feb 2020 06:41 PM

‘தர்பார்’ நஷ்டம்: ரஜினி சந்திக்காவிட்டால் உண்ணாவிரதப் போராட்டம் - விநியோகஸ்தர்கள் அறிவிப்பு

‘தர்பார்’ நஷ்டம் தொடர்பாக ரஜினி சந்தித்துப் பேசாவிட்டால் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக விநியோகஸ்தர்கள் அறிவித்துள்ளனர்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், ரஜினி நடிப்பில் கடந்த ஜனவரி 9-ம் தேதி வெளியான படம் ‘தர்பார்’. லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்த இந்தப் படத்தில், நயன்தாரா, சுனில் ஷெட்டி, நிவேதா தாமஸ், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்தனர். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய, அனிருத் இசையமைத்தார்.

இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. ஆனால், ரஜினி படம் என்பதால் முதல் வாரத்தில் மக்கள் மத்தியில் வரவேற்பு இருந்தது. இருந்தாலும், நாட்கள் போகப்போக படத்தின் வசூல் குறைந்தது. இதனால், படத்தை வெளியிட்ட விநியோகஸ்தர்கள் நஷ்மடைந்தனர்.

இது தொடர்பாக, கடந்த ஜனவரி 30-ம் தேதி ரஜினியைச் சந்திக்க விநியோகஸ்தர்கள் முயன்றனர். ஆனால், முடியவில்லை. ரஜினி அழைப்பார் எனப் பொறுமையுடன் அவர்கள் காத்திருக்க, கடைசிவரை அழைக்கப்படவில்லை. எனவே, இன்று (பிப்ரவரி 3) போயஸ் கார்டனில் உள்ள ரஜினி வீட்டுக்குச் சென்றனர். ஆனால், அவர்களை உள்ளே விடாமல் அங்கிருந்த காவல் துறையினர் தடுத்தனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய திருநெல்வேலி, கன்னியாகுமரி விநியோகஸ்தரான பாண்டி கண்ணன், “ ‘தர்பார்’ படம் ரிலீஸான ஒரு வாரத்திலேயே எங்களுக்குப் பாதிப்பு வந்தது. அதை நாங்கள் லைகா நிறுவனத்துக்குத் தெரியப்படுத்தினோம். ‘வசூல் குறைந்தது எங்களுக்கே தெரிகிறது. இது சூப்பர் ஸ்டார் படம். இன்னும் ஒரு வாரம் வெயிட் பண்ணுங்க. எங்கள் சாரிடமும் (சுபாஷ்கரன்), ரஜினி சாரிடமும் பேசுகிறோம்’ என்றனர்.

பாண்டி கண்ணன்

சூப்பர் ஸ்டாரின் படத்தை, 10 நாட்களில் திரையரங்கில் இருந்து தூக்கினால், அவருடைய இமேஜ் பாதிக்கப்படும் என்று, 2 வாரங்களாகப் பொறுமையுடன் இருந்தோம். ‘இந்தப் படத்தால் எங்களுக்கு 70 கோடி ரூபாய் நஷ்டம். எனவே, எங்களால் எதுவும் செய்ய முடியாது. ரஜினி, ஏ.ஆர்.முருகதாஸ் ஆகிய இருவருக்கும் நிறைய சம்பளம் கொடுத்திருக்கிறோம். அவர்களிடம் சென்று பேசுங்கள்’ என லைகா நிறுவனத்தினர் கூறிவிட்டனர்.

அதனால், ரஜினி சாரைப் பார்க்கச் சென்றோம். எங்களுக்கு அப்பாயின்மென்ட் தரவும் இல்லை, ரஜினி சார் எங்களைப் பார்க்கவும் இல்லை. இன்று காலையில் கூட ரஜினி சார் வீட்டுக்குச் சென்றோம். ஆனால், போலீஸ் எங்களை உள்ளே விடவில்லை. போயஸ் கார்டன் சாலையிலேயே நாங்கள் இருக்கக்கூடாது என்று கூறினர்.

எனவே, ஒரு ஓரமாக நின்று ஊடகங்களுக்குப் பேட்டி கொடுக்கத் தயாரானபோது, ஒருவர் மட்டும் ரஜினி சார் வீட்டுக்குள் செல்லலாம் என்று கூறினர். அதன்படி, உள்ளே சென்றவரிடம், ‘ராகவேந்திரா மண்டபத்துக்குச் சென்று சுதாகரிடம் உங்கள் மனுவைக் கொடுங்கள்’ என்று கூறப்பட்டது.

அதன்படி, ராகவேந்திரா மண்டபம் சென்றால், ‘எனக்கு இந்த மனுவை வாங்க உரிமை இல்லை. நீங்கள் லைகா நிறுவனத்துக்குச் செல்லுங்கள்’ என்று சுதாகர் கூறினார். தமிழ்நாட்டு விநியோகஸ்தர்களுக்கு மட்டும் ‘தர்பார்’ படத்தால் 25 கோடி ரூபாய் நஷ்டம். இவ்வளவு நஷ்டப்பட்ட எங்களையே நீங்கள் பார்க்கவில்லை என்றால், மற்றவர்களை எப்படிப் பார்ப்பீர்கள்?

இதற்கு மேலும் ரஜினி சார் எங்களைச் சந்திக்கவில்லை என்றால், திரையரங்கு உரிமையாளர்களுடான எங்கள் வரவு - செலவுகளுடன், அவர்களையும் அழைத்துக்கொண்டு வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதம் இருப்பதைத் தவிர எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை” என்றார்.

‘தயாரிப்பு நிறுவனத்தை விட்டுவிட்டு, நஷ்டம் தொடர்பாக ரஜினியைச் சந்திக்க முயற்சிப்பது ஏன்?’ என்ற கேள்விக்கு, “ரஜினி சார் திரைக்கு வந்த காலத்தில் இருந்து பல தயாரிப்பு நிறுவனங்கள் வந்தன, போய்விட்டன. ஆனால், ரஜினி சார்தான் எப்போதுமே உச்ச நட்சத்திரமாக இருந்துவருகிறார்.

ரஜினி சார் படம் என்பதால்தான் வாங்கினோமே தவிர, லைகா தயாரித்த படம் என்பதற்காக வாங்கவில்லை. மேலும், இந்தப் படம் எங்களுக்கு மினிமம் கியாரண்டி அடிப்படையில் கொடுக்கப்பட்டதே தவிர, டிஸ்ட்ரிபியூஷன் முறையில் தரப்படவில்லை.

முதலில் நாங்கள் லைகாவை அணுகியபோது, அவர்கள்தான் ரஜினி சாரை சந்திக்குமாறு கூறினர். ஆனால், எங்களால் அவரைச் சந்திக்க முடியவில்லை. அவரிடம் நாங்கள் எதிர்பார்ப்பது, சந்திக்க அப்பாயின்மென்ட் மட்டுமே” எனப் பதில் அளித்தார் பாண்டி கண்ணன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x