Published : 03 Feb 2020 04:24 PM
Last Updated : 03 Feb 2020 04:24 PM

‘தர்பார்’ நஷ்டம்: அரசை விநியோகஸ்தர்கள் அணுகினால் உதவத் தயார் - அமைச்சர் கடம்பூர் ராஜு

‘தர்பார்’ நஷ்டம் தொடர்பாக தமிழக அரசை விநியோகஸ்தர்கள் அணுகினால் உதவத் தயார் என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், ரஜினி நடிப்பில் கடந்த ஜனவரி 9-ம் தேதி வெளியான படம் ‘தர்பார்’. லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்த இந்தப் படத்தில், நயன்தாரா, சுனில் ஷெட்டி, நிவேதா தாமஸ், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்தனர். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய, அனிருத் இசையமைத்தார்.

இந்தப் படம், கலவையான விமர்சனங்களைப் பெற்றது. ஆனால், ரஜினி படம் என்பதால் முதல் வாரத்தில் மக்கள் மத்தியில் வரவேற்பு இருந்தது. இருந்தாலும், நாட்கள் போகப்போக படத்தின் வசூல் குறைந்தது. இதனால், படத்தை வெளியிட்ட விநியோகஸ்தர்கள் நஷ்மடைந்தனர்.

இதுதொடர்பாக, கடந்த ஜனவரி 30-ம் தேதி ரஜினியைச் சந்திக்க விநியோகஸ்தர்கள் முயன்றனர். ஆனால், முடியவில்லை. ரஜினி அழைப்பார் எனப் பொறுமையுடன் அவர்கள் காத்திருக்க, கடைசிவரை அழைக்கப்படவில்லை. எனவே, இன்று (பிப்ரவரி 3) போயஸ் கார்டனில் உள்ள ரஜினி வீட்டுக்குச் சென்றனர். ஆனால், அவர்களை உள்ளே விடாமல் அங்கிருந்த காவல் துறையினர் தடுத்தனர்.

இந்நிலையில், திரைத்துறை குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு பேட்டியளித்தார். அப்போது ‘தர்பார்’ நஷ்டம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

“நஷ்டம் தொடர்பாக இதுவரை யாரும் எங்களிடம் வரவில்லை. சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் வந்தனர். அவர்கள் கேட்டபடி சிறப்புக் காட்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டது. நஷ்டம் தொடர்பாக விநியோகஸ்தர்கள் யாரும் அணுகவில்லை.

நான் ஊடகங்களில் பார்த்துதான் இந்தச் செய்தியை அறிந்து கொண்டேன். அதேசமயம், ‘தர்பார்’ படத்துக்கு நல்ல வசூல் கிடைத்து வருவதாக திரையரங்கு உரிமையாளர்கள் கூறியதையும் ஊடகங்களில் பார்த்தேன்.

தயாரிப்பாளர்கள் சங்கம் என ஒன்று இருக்கிறது. அது சரியாகச் செயல்படாததால், அதற்கு தனி நிர்வாகி நியமிக்கப்பட்டிருக்கிறார். முறைப்படி விநியோகஸ்தர்கள் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்குச் சென்றால், அவர்களுக்கு நாங்கள் வழிகாட்டுவோம். அங்கு சென்று தீர்வு காணக்கூடிய நிலையை அரசு ஏற்படுத்தும், அவர்களுக்கு உதவும்” எனப் பதில் அளித்துள்ளார் கடம்பூர் ராஜு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x