Published : 01 Feb 2020 07:16 PM
Last Updated : 01 Feb 2020 07:16 PM

'சைக்கோ 2' கண்டிப்பாக நடக்கும்: உதயநிதி ஸ்டாலின் நம்பிக்கை

'சைக்கோ 2' கண்டிப்பாக நடக்கும் என்று 'சைக்கோ' படத்தின் வெற்றி பத்திரிகையாளர் சந்திப்பில் உதயநிதி ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்தார்.

மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், ராஜ், சிங்கம் புலி, அதிதி ராவ், நித்யா மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'சைக்கோ'. இளையராஜா இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு தன்வீர் ஒளிப்பதிவு செய்துள்ளார். டபுள் மீனிங் புரொடக்‌ஷன்ஸ் தயாரித்த இந்தப் படம் விமர்சன ரீதியாகக் கலவையாக இருந்தாலும், வசூல் ரீதியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இதனைத் தொடர்ந்து படக்குழுவினர் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் ஒன்றிணைந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். இந்தச் சந்திப்பில் உதயநிதி ஸ்டாலின் பேசும் போது, "ஹிட் படம் கொடுத்து 3 ஆண்டுகளாகிவிட்டது. கடைசி 4 படங்களான 'முப்படை வெல்லும்', 'பொதுவாக எம்மனசு தங்கம்', 'நிமிர்' மற்றும் 'கண்ணே கலைமானே' ஆகியவை சரியாக போகவில்லை. ஆனால் எதுவும் மோசமான படமல்ல.

இந்த விழாவுக்கு 3 முக்கியமான நபர்களான இசைஞானி இளையராஜா, பி.சி.ஸ்ரீராம் சார் மற்றும் அதிதி ராவ் ஆகியோர் வரவில்லை. அவர்களுக்கு முதலில் நன்றி சொல்லிக் கொள்கிறேன். எனக்கு அதிதி ராவ் தான் ஜோடி. ஆனால், எனக்கு அவருக்கும் 2 நாட்கள் தான் படப்பிடிப்பு இருந்தது. அப்படியொரு ஒரு காதல் கதை இது. இந்தப் படத்தில் ராஜுக்கும் அவருக்கும் தான் கெமிஸ்ட்ரி அதிகம். கடைசியில் அவரிடமே சாவியைக் கொடுத்துவிட்டு, என்னை டம்மி ஆக்கிவிடுவார்கள்.

அப்படியே 'காதல் கொண்டேன்' படம் தான். அதில் தனுஷ் தான் கடத்திக் கொண்டு போவார். இறுதியில் அவர் இறந்துவிடுவார். அவர் தான் படத்தின் நாயகன். அப்படிப் பார்த்தால் படத்தில் ராஜ் தான் ஹீரோ. நான் அவருடன் நடித்துள்ளேன். க்ளைமாக்ஸ் காட்சிக்காக மிஷ்கின் சார் தேதிகள் கேட்டார். இல்லை என்றவுடன் ஒரு பத்திரிகையாளர் காட்சி ஷுட் செய்து படத்தை முடித்துவிட்டார்.

அன்றிலிருந்தே 'சைக்கோ 2' பண்ணுவோம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். கண்டிப்பாகப் பண்ணுவோம் சார். இந்தப் படத்தை நான் தயாரித்திருக்க வேண்டியது, அதை தடுத்தது மூர்த்தி சார். முதலில் இந்தக் கதையைக் கேட்டுவிட்டு, மூர்த்தி சாருக்கு போன் பண்ணி மிஷ்கின் சாரோடு பண்ணலாம் என்றேன். என்ன கதை என்றவுடன் கண் தெரியாதவர் ஹீரோ என்று சொல்லத் தொடங்கினேன். என்னது ஹீரோவுக்கு கண்ணு தெரியாதா சும்மா இருங்க. போனை வையுங்க என்று கட் பண்ணிட்டார்.

இந்தப் படத்தில் நடிச்சுட்டு இருக்கும் போது, பலரும் ஏன் கண் தெரியாதவரா எல்லாம் நடிக்கிறீங்க என்று கேட்டார்கள். எனக்கு மிஷ்கின் சார் படத்தில் நடிக்க ஆசை. அதே போல், கதையும் நல்ல கதை என்றேன். இந்தப் படத்தில் ராஜின் உழைப்பைப் பற்றிச் சொல்ல வார்த்தைகள் இல்லை. என்னை விட ரொம்ப கடுமையாக உழைத்திருக்கிறார். இந்தப் படத்தின் வெற்றிக்காக மிஷ்கின் சாருக்கு ரொம்பவே கடமைப்பட்டு இருக்கேன். கண்டிப்பாக 'சைக்கோ 2' நடக்கும் என நம்புகிறேன்” என்று பேசினார் உதயநிதி ஸ்டாலின்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x