Published : 28 Jan 2020 02:54 PM
Last Updated : 28 Jan 2020 02:54 PM

கேபிள் டிவியில் 'தர்பார்' திரையிடல்: சினிமாக்காரன் ஏமாந்தவனா?- டி.ஆர். ஆவேசம்

கேபிள் டிவியில் 'தர்பார்' திரையிடல் குறித்து மதுரையில் பத்திரிகையாளர்கள் மத்தியில் டி.ராஜேந்தர் ஆவேசமாகப் பேசினார்.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவராக டி.ராஜேந்தர் பணியாற்றி வருகிறார். நேற்று (ஜனவரி 27) மதுரையில் நடைபெற்ற பிரபல பைனான்சியர் அழகர் இல்லத் திருமண விழாவில் கலந்துகொள்ளச் சென்றார். அப்போது மதுரை விமான நிலையத்திலிருந்த பத்திரிகையாளர்களிடம் திரையரங்க டிக்கெட் கட்டணம், ஜிஎஸ்டி உயர்வு, கேபிள் டிவியில் 'தர்பார்' திரையிடல் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து ஆவேசமாகப் பேசினார்.

இந்தப் பிரச்சினைகள் தொடர்பாக பத்திரிகையாளர்கள் மத்தியில் டி.ராஜேந்தர் பேசும்போது, "திரையரங்குகளில் நிர்ணயம் செய்த விலைக்கு டிக்கெட் விற்பனை செய்யப்படுவதில்லை. இப்போதுள்ள விலையில் எப்படி பாமர மக்கள் படம் பார்க்க முடியும். ஏழை எளிய மக்கள் திரையரங்கிற்கு வரமுடியாத அளவுக்கு நிலைமை உள்ளது. நடிகர்கள் மட்டும் ரூ.100 கோடி, ரூ.75 கோடி, ரூ.50 கோடி சம்பளம் என்கிறார்கள். ஆனால், படத்தை வாங்கும் விநியோகஸ்தர்கள் தெருக்கோடியில் நிற்கிறார்கள்.

இந்தியா முழுக்க ஜிஎஸ்டி வரி அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆந்திராவில் திரையுலகினரை வாழ வைக்க ஜிஎஸ்டி வரியைக் கூட விட்டுக் கொடுத்துவிட்டார்கள். ஆனால், தமிழகத்தில் மட்டும் ஜிஎஸ்டி வரி போக உள்ளாட்சி வரி இருக்கிறது. இந்தியாவில் இது வேறு எந்த மாநிலத்திலும் கிடையாது. இது தொடர்பாகப் போராட வேண்டும் என நினைக்கிறார்கள். ஆனால், நான் தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்களைச் சந்திக்க முயற்சி செய்வேன். எடுத்தவுடனே போராட்டம் என்று சொல்வதை விட முதலில் வலியுறுத்துவேன். பின்புதான் போராட்டம்.

மதுரையில் கேபிள் டிவியில் 'தர்பார்' படம் போடுகிறார்கள். நாங்கள் கோடிகளில் செலவழித்துப் படம் எடுப்போம். இவர்கள் திருடி கேபிள் டிவியில் போடுவார்கள். அரசியல் சம்பந்தப்பட்டால் என்ன வேண்டுமானாலும் செய்துவிடலாமா?.

நாங்கள் படம் எடுக்க வேண்டும், ஜிஎஸ்டி, வரி என அனைத்தும் கட்ட வேண்டும். ஆனால், திருட்டுத்தனமாக சிடி விற்பனை, கேபிளில் திரையிடல் என்றால் என்ன செய்வது? இதேபோல் வெளிநாட்டில் செய்துவிட முடியுமா?. இங்கு மட்டும் என்ன வேண்டுமானாலும் பண்ணலாம். ஏனென்றால் சினிமாக்காரன் ஏமாந்தவன். சினிமாக்காரன் தலையில் மிளகாய் அரைக்கலாம். சினிமாக்காரர்கள் ஒற்றுமையாக இருந்து போராடுவதில்லை" என்று பேசினார் டி.ராஜேந்தர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x