Published : 28 Jan 2020 09:49 AM
Last Updated : 28 Jan 2020 09:49 AM

தி பேட்மேன் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது 

டிசி காமிக்ஸின் புகழ்பெற்ற கதாபாத்திரம் ‘பேட்மேன்’. உலகம் முழுவதும் ரசிகர்களைக் கொண்ட இந்தக் கதாபாத்திரம், திரைப்படங்கள் மற்றும் டிவி தொடர்களில் இடம்பெற்று பெரும் வரவேற்பை பெற்றது. 1940 முதல் திரையில் வலம்வரத் தொடங்கிய பேட்மேன் கதாபாத்திரம், 2005-ம் ஆண்டு கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளியான 'Batman Begins' படத்தின் மூலம் புத்துயிர் பெற்றது.

அதன்பிறகு, 2008-ல் வெளியான 'The Dark Knight' படம், பேட்மேன் கதாபாத்திரத்தை புகழின் உச்சத்துக்கு எடுத்துச் சென்றது. இந்தப் படத்தில் வில்லனான நடித்த ஜோக்கர் கதாபாத்திரமும் பெரிய அளவில் பேசப்பட்டது. இதன் தொடர்ச்சியாக 2012-ம் ஆண்டு 'The Dark Knight Rises' படம் வெளியானது. இந்த 3 படங்களிலும் பேட்மேனாக க்ரிஸ்டியன் பேல் நடித்தார்.

பின்னர், பேட்மேன் படங்களை இயக்கும் பொறுப்பை ஜாக் ஸ்னைடரிடம் டிசி நிறுவனம் ஒப்படைத்தது. அவர் இயக்கிய ‘Batman v Superman: Dawn of Justice’, ‘Justice League’ ஆகிய படங்களில் பென் அஃப்லெக் பேட்மேனாக நடித்திருந்தார். இந்த இரண்டு படங்களும் எதிர்பார்த்த வெற்றியைத் தராததால், பேட்மேன் படங்களை இயக்க ‘Planet of Apes' படங்களை இயக்கிய மேட் ரீவ்ஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

2021-ம் ஆண்டு வெளியாகவுள்ள புதிய பேட்மேன் படத்தில், 'Twilight’ படங்களில் நாயகனாக நடித்த ராபர்ட் பேட்டின்சன் பேட்மேனாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் இந்த படத்தின் முதல் நாள் படப்பிடிப்பு இன்று தொடங்கியது. இதை படத்தின் இயக்குநர் மேட் ரீவ்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.

பேட்டின்ஸனுக்கு முன்பாக பேட்மேனாக நடித்திருந்தவர் பென் அஃப்லெக். கடந்த 2017ஆம் ஆண்டு வெளியான ’ஜஸ்டிக் லீக்’ படம் தோல்வியடைந்ததையடுத்து பேட்மேன் கதாபாத்திரத்திலிருந்து பென் விலகிக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x