Published : 26 Jan 2020 03:24 PM
Last Updated : 26 Jan 2020 03:24 PM

கபில்தேவுக்கு உண்மையான பாராட்டு இன்னும் கிடைக்கவில்லை: கமல்

கபில்தேவ்வுக்கு உண்மையான பாராட்டு இன்னும் கிடைக்கவில்லை என்று '83' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிட்டு விழாவில் கமல் பேசினார்

1983 கிரிக்கெட் உலகக் கோப்பையை இந்தியா வென்ற கதை '83' என்ற பெயரில் திரைப்படமாக உருவாகியுள்ளது. கபீர் கான் இயக்கியுள்ள இந்தப் படத்தில் ரன்வீர் சிங், கபில் தேவ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கிருஷ்ணாமாச்சாரி ஸ்ரீகாந்த் கதாபாத்திரத்தில் ஜீவா நடித்துள்ளார். இந்தப் படம் இந்திய அளவில் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஏப்ரல் 10-ம் தேதி வெளியாகவுள்ள இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று (ஜனவரி 25) நடைபெற்றது. இதில் படத்தில் நடித்த அனைத்து நடிகர்களுடன் கபில்தேவ், கிருஷ்ணமாச்சாரி ஶ்ரீகாந்த் ஆகியோரும் கலந்து கொண்டனர். இவர்களுடன் சிறப்பு விருந்தினராக கமலும் கலந்து கொண்டார்.

இந்த விழாவில் கமல் பேசும் போது, "இது மிக அரிய தருணம். இத்தனை திறமைகளுடன் நிற்பதில் பெருமை. 1983-ம் ஆண்டு இந்திய அணி உலகக்கோப்பையை வென்றது மட்டுமே நமக்கு தெரியும். இயக்குநர் கபீர்கான் அதன் பின்னால் இருக்கும் அறியப்படாத கதைகள் குறித்துச் சொன்னார். பிரமிப்பாக இருந்தது.

எத்தனை கஷ்டங்களைத் தாண்டி உலகக் கோப்பையை வென்றிருக்கிறார்கள் என்ற கதையைக் கேட்ட போது சூப்பர் ஹீரோக்கள் வரும் 'அவெஞ்சர்ஸ்' கதையை விட இது தான் உண்மையான சூப்பர் ஹீரோக்களின் கதை என தோன்றியது. இந்தப் படத்தை நிஜமாக்கிய அனைவருக்கும் வாழ்த்துகள்.

கபில்தேவ் அவர்களுக்கான உண்மையான பாராட்டு இன்னும் கிடைக்கவில்லை அவர் அதற்கு கவலைப்படவும் மாட்டார். ஆனால் அவர் புகழ் என்றும் நிலைத்திருக்கும். கிரிக்கெட்டர் ஶ்ரீகாந்தை என் படத்தில் நடிக்க வைக்க ஆசைப்பட்டேன். அது முடியாமல் போய்விட்டது. அவரை நண்பராகப் பல ஆண்டுகள் பழக்கம். இப்படத்தின் நடிகர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள்” என்று பேசினார் கமல்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x