Published : 26 Jan 2020 01:02 PM
Last Updated : 26 Jan 2020 01:02 PM

’வெள்ளிவிழா நாயகன்’ மோகனுக்கு ‘விதி’ தந்த சூப்பர்ஹிட் வெற்றி!  ‘விதி’ படம் வெளியாகி 36 வருடங்கள்! 

வி.ராம்ஜி

காதலிப்பது போல் காதலித்து, பிறகு கழற்றிவிடுகிற கதை தமிழ் சினிமாவில் ஒன்றும் புதிதில்லைதான். காதலித்து. பிறகு அவளைப் பயன்படுத்திக் கொண்டு, அதன் பின்னர் அவளை விட்டுவிட்டு, அவன் வில்லனாவான். கைவிடப்பட்ட பெண்ணின் அண்ணனுக்கு விஷயம் தெரிந்து, அவளை அவனுடன் சேர்த்துவைப்பான். தங்கை இறந்துவிட்டால், அவனைப் பழிதீர்ப்பான். இந்த டெம்ப்ளேட் கதைதான், சினிமா வரலாற்றில், நீண்டநெடிய பயணம் மேற்கொண்டது. வாடிக்கைக் கதையாக இருந்தும் கூட, மிகப்பெரிய ஹிட்டையெல்லாம் கொடுத்தது. இதில் இருந்து வேறுபட்டு, மாறுபட்ட படைப்பாக வந்ததுதான் ‘விதி’.

தயாரிப்பாளர் கே.பாலாஜியின் சுஜாதா சினி ஆர்ட்ஸ் தயாரிப்பில், கே.விஜயனின் இயக்கத்தில், மோகன், பூர்ணிமா, பூரணம் விஸ்வநாதன், சுஜாதா, ஜெய்சங்கர், சத்யகலா முதலானோர் நடிப்பில் வெளியானது ‘விதி’திரைப்படம்.

ப்ளேபாய் கதாபாத்திரம் மோகனுக்கு. பெண்களைப் ‘பயன்படுத்திக்’ கொள்ளவேண்டும் என்பதற்காக மட்டுமே பழகுகிற மிகப்பெரிய பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்தவர். அப்பா ஜெய்சங்கர் பிரபல வக்கீல். பணத்துக்கும் அழகுக்கும் பஞ்சமில்லாத மோகன், பெண்களை வலையில் வீழ்த்துவதில் சூரர்.

பூர்ணிமா ஜெயராமைப் பார்த்ததும் வளைத்துப் போட முடிவுசெய்வார். ஆனால் பூர்ணிமா மசியமாட்டார். ஏகத்துக்கும் டிராமா போடுவார். எல்லாமே காதல் டிராமா. துரத்தித் துரத்திக் காதலிப்பார் மோகன். காதலிப்பது போல் நடிப்பார். அந்த நடிப்பை நம்பிவிடுவார் பூர்ணிமா. வலையில் சிக்கிய பூர்ணிமா, அவரின் காம இச்சைக்கு பலியாவார். கர்ப்பமும் ஆகிவிடுவார்.

இதை மோகனிடம் சொல்ல, அவர் அலட்சியமாகப் பேசி அனுப்பிவிடுவார். ‘என் காரியம் முடிந்தது. அவ்வளவுதான்’ என எகத்தாளம் பேசி மேலும் காயப்படுத்தி அனுப்புவார்.

வீட்டில் அவமானம். வெளியில் அவமானம். பொங்கி ஆவேசமாவார் பூர்ணிமா. வக்கீல் சுஜாதாவிடம் விஷயத்தைச் சொல்லி, வழக்கு போடக் கேட்பார். வக்கீல் தயாநிதி (ஜெய்சங்கர்)மகன் மோகன் என்பதை அறிந்ததும் சுஜாதாவும் கடுப்பாவார். வழக்கு கோர்ட்டுக்கு வரும்.
தன் மகன் குற்றவாளி இல்லை என்பதை நிரூபிக்கப் பிரயத்தனப்படுவார் ஜெய்சங்கர். ஒருகாலத்தில் தன்னைக் கெடுத்தது ஜெய்சங்கர். இப்போது இந்தப் பெண்ணை அவர் மகன் கெடுத்திருக்கிறான் என்பதையெல்லாம் கோர்ட்டில் பாயிண்ட்டுகளை ஆதாரங்களுடன் சொல்லி, மோகனுக்கு தண்டனை வாங்கித் தருவார் சுஜாதா.

காதலித்து, நம்பிக்கை கொடுத்து, ஏமாற்றியவனை கோர்ட்டுக்கு இழுத்த கதையும் தீர்ப்பு சாதகமாகியும் அவனுடன் வாழவிரும்பாமல், தன் குழந்தைக்கு இவனே தகப்பன் என்பதை ஊரறியச் செய்ததும் புதுசுதான். ரீமேக் படங்களை எடுப்பதில் மன்னர் எனப் பேரெடுத்த கே.பாலாஜி, ‘நியாயம் காவலி’ எனும் தெலுங்குப் படத்தை ‘விதி’யாக எடுத்து, பிரமாண்டமான வெற்றிப் படமாகவும் ஆக்கினார்.

‘பராசக்தி’, ‘இருவர் உள்ளம்’ என கோர்ட் வசனங்கள் கொண்ட படங்கள் பல வந்திருந்தாலும், ‘விதி’ படத்தின் மிகப்பெரிய பலமாக கோர்ட்டில் வாதாடும் காட்சிகளும் வசனங்களும் பெரியளவில் பேசப்பட்டன. கொண்டாடப்பட்டன. படத்தின் சரிபாதியளவுக்கு வாதாடும் காட்சிகளே இடம்பெற்றன. வசனத்தை ஆரூர்தாஸ் எழுதியிருந்தார். ஒவ்வொரு வசனமும் கைத்தட்டலைப் பெற்றது.

மோகனுக்கு நெகடீவ் ரோல்தான். அப்படியொரு பாத்திரத்தில் நடிப்பது ஒன்றும் மோகனுக்குப் புதிதில்லை. கிராமத்து அப்பாவி மனைவி இருப்பதையே மறைத்து வேறொரு திருமணம் செய்து குடித்தனம் செய்யும் ‘கோபுரங்கள் சாய்வதில்லை’ படத்திலேயே நெகட்டீவ் ரோல் செய்திருப்பார் மோகன்.

கொலை செய்துவிட்டு, பிணத்தை வீட்டுச் சுவருக்குள் புதைத்துவைக்கிற சைக்கோ கொலைகாரனாக மிரட்டியிருப்பார் ‘நூறாவது நாள்’ திரைப்படத்தில். இந்தப் படத்தில், பூர்ணிமா வயிற்றில் குழந்தையைக் கொடுத்துவிட்டு, திருமணம் செய்ய மறுக்கும் ப்ளேபாய் கேரக்டர். மனிதர், வெளுத்துவாங்கியிருப்பார்.

அதேபோல், பூர்ணிமாவும் சுஜாதாவும் நடிப்பில் மிரட்டியிருப்பார்கள். ஜெய்சங்கர் ஆவேசப்படும் போதும் இயலாமையால் புழுங்கும்போதும் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். டைப் ரைட்டிங் இன்ஸ்டியூட், அந்தக் காலத்தில் வெகு பிரபலம். அங்குதான் பூர்ணிமாவைக் காதலிக்க மோகன் வருவது போல் காட்டியிருப்பார்கள். எனவே படம் பார்க்கிற ஆடியன்ஸ் மிக எளிதாக இதில் தங்களைப் பொருத்திக் கொண்டார்கள்.

சங்கர் கணேஷ் இசையில் எல்லாப் பாடல்களும் ஹிட்டாக அமைந்தது. மோகனுக்கு இந்தப் படமும் வெள்ளிவிழாப் படமாக அமைந்தது. கதையும் திரைக்கதையும் வசனங்களும் நடிப்பும் வெகுவாகப் பேசப்பட்டன. அதேசமயம், படத்தில் பாக்யராஜ் வரும் ஒருகாட்சிக்காகவே, திரும்பத் திரும்பப் பார்த்த ரசிகர்களும் உண்டு.

சினிமாவுக்குள் சினிமா எடுக்கிற காட்சி. இயக்குநர் பாக்யராஜாகவே வருவார். போஸ்ட்மேன் கேரக்டர். பஞ்சாயத்துக் காட்சி. ‘பத்தினி பேர் சொல்லுங்க’ என்பார். ஒவ்வொருவரும் நளாயினி, கண்ணகி என்றெல்லாம் சொல்லுவார்கள். ‘உங்க பொண்டாட்டி பத்தினி இல்லியா, அம்மா பத்தினி இல்லியா?’ என்று மடக்குவார். மிகப்பெரிய கைத்தட்டலைப் பெற்று, மனதில் நீங்காத இடத்தைப் பிடித்தது இந்தக் காட்சி.

இப்படி பல வெற்றிகளுடன் ‘விதி’ படத்துக்க்கு இன்னொரு வெற்றியும் பெருமையும் உண்டு. அந்தக் காலத்தில் ரேடியோவில் ஒலிச்சித்திரம் போடுவார்கள். அதேபோல், கல்யாணம், காதுகுத்து முதலான நிகழ்ச்சிகளில், லவுட் ஸ்பீக்கரில் திருவிளையாடல், கெளரவம் முதலான படங்களின் ஒலிச்சித்திரம் ரிக்கார்டு பிளேயரில் போடுவார்கள். எண்பதுகளில், திருவிளையாடல் மாதிரியான படங்களுக்கு இணையாக, சமூகப் படம் ஒன்று பட்டிதொட்டியெங்கும் ஒலிச்சித்திரமாகவே கலக்கியெடுத்தது என்றால்... அது, ‘விதி’ படமாகத்தான் இருக்கும்.

1984ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதி, ‘விதி’ திரைப்படம் வெளியானது. பல தியேட்டர்களில், வெள்ளிவிழா எனப்படும் 175 நாட்களைக் கடந்து ஓடி, வசூல் சாதனையும் புரிந்தது.

வெள்ளிவிழா பட நாயகன் என்று மோகனை இன்றைக்கும் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள். மோகனின் எண்ணற்ற வெள்ளிவிழாப் படங்களில், ‘விதி’யும் ஒன்று.

84ம் ஆண்டு ‘விதி’ வந்தது. படம் வெளியாகி, 36 வருடங்களாகிவிட்டன. ஆனால் இன்றைக்கும் மறக்கமுடியாத இடத்தில் ‘விதி’ திரைப்படம் கம்பீரமாக இடம்பெற்றிருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x