Published : 24 Jan 2020 08:18 PM
Last Updated : 24 Jan 2020 08:18 PM

செயலாளராகவே இருக்க வேண்டும் என நினைக்கிறார் விஷால்: ஐசரி கணேஷ் காட்டம்

செயலாளராகவே இருக்க வேண்டும் என நினைக்கிறார் விஷால் என்று பத்திரிகையாளர்கள் மத்தியில் ஐசரி கணேஷ் காட்டமாக தெரிவித்தார்.

நடிகர் சங்கத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பான வழக்குகளில் தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்றம் கடந்த ஜூன் 23-ம் தேதி நடந்த தேர்தல் செல்லாது என அறிவித்து 3 மாதத்தில் மறு தேர்தல் நடத்த உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு திரையுலகினர் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் சங்கத் தேர்தலில் விஷால் தலைமையிலான பாண்டவர் அணியும், ஐசரி கணேஷ் தலைமையிலான சங்கரதாஸ் சுவாமிகள் அணியும் மோதின. இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து சங்கரதாஸ் சுவாமிகள் அணி பத்திரிகையாளர்களைச் சந்தித்தது.

அச்சந்திப்பில் ஐசரி கணேஷ் பேசியதாவது:

இந்தத் தீர்ப்பு தர்மத்துக்கும், நியாயத்துக்கும் கிடைத்த வெற்றி. ஏனென்றால் நடிகர் சங்கத் தேர்தல் எப்படி நடந்தது என்று அனைவருக்குமே தெரியும். அடுத்த நாள் தேர்தலை வைத்துக் கொண்டு, நாளை தேர்தல் நடக்குமா, இல்லையா என்பது தெரியாமலேயே இருந்தது. எந்த இடத்தில் நடக்கப் போகிறது என்பதும் ஒரு நாளுக்கு முன்பு தான் தெரிந்தது. ஒரு தேர்தல் நடக்க வேண்டும் என்றால் குறைந்தது 21 நாட்கள் இருக்க வேண்டும். இப்படி அனைத்து முறையிலும் விதிமீறல் நடந்தது தான் தேர்தலே நடந்தது.

தேர்தல் நல்லமுறையில் நடக்கட்டும் என்று ஒத்துழைப்பு அளித்தோம். அதுவும், வழக்கினால் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுக் கொண்டே இருந்தது. இப்போது உயர்நீதிமன்றம் இந்த தீர்ப்பை அளித்துள்ளது. அதில் பழைய விஷயங்கள் எதுவுமே இல்லாமல், புதிதாக அனைத்தையுமே பண்ண வேண்டும் எனச் சொல்லியுள்ளனர். கண்டிப்பாக வரும் தேர்தல் நியாயமாக நடக்கும் என்பதில் நம்பிக்கை இருக்கிறது.

எதிரணி மேல்முறையீடு போனார்கள் என்றாலே என்னவென்று புரிகிறது. அந்தக் கட்டிடம் சீக்கிரமாகக் கட்டப்பட வேண்டும் என்று தான் நினைக்கிறோம். இந்த வழக்கு விஷயத்தில் விஷால் தரப்பு நீதிமன்றத்துக்குச் சென்றதினால் தான் தாமதமே. இப்போது கூட 6 மாத காலமாக யாருக்குமே பென்ஷன் பணம் போகாமல் இருக்கிறது. அனைத்துக்குமே நீதிமன்றம், நீதிமன்றம் என்று நடிகர் சங்கத்தில் இருந்த மொத்த பணத்தையும் காலி பண்ணிவிட்டார்கள். தயாரிப்பாளர் சங்கத்தில் எப்படிப் பணத்தைக் காலி பண்ணினார்களோ, அப்படித்தான் நடிகர் சங்கத்திலும் பணத்தைக் காலி பண்ணிவிட்டார்கள்.

தற்போது மேல்முறையீடு சென்றார் என்றால், அவர்களது எண்ணம் என்னவென்று அனைவருக்குமே தெரிந்துவிடும். இப்போது மேல்முறையீடு சென்றால் கட்டிடம் முடிய இன்னும் ஓராண்டு காலமாகும். இந்தச் சங்கமே செயல்படக் கூடாது என்று தான் விஷால் நினைக்கிறார். நாங்கள் இனிமேல் நீதிமன்றம் சொல்லத் தயாராக இல்லை. எங்களுடைய நோக்கம் அந்த நடிகர் சங்கக் கட்டிடம் சரியாகக் கட்டிமுடிக்கப்பட வேண்டும். அவ்வளவு தான்.

செயலாளராகவே இருக்க வேண்டும் என நினைக்கிறார் விஷால். 36 செயற்குழு கூட்டத்தில் 26 கூட்டத்துக்கு அவர் வரவில்லை. எப்போதும் தான் மட்டுமே நன்றாக இருக்க வேண்டும் என நினைக்கிறார் விஷால். ஆனால், நான் அப்படியில்லை. இதுவரை நடிகர் சங்கம் பக்கம் போகாத நான், திங்கட்கிழமை போகலாம் என்று இருக்கிறேன். அங்கு இதுவரை பென்ஷன் போகாமல் இருக்கும் நாடக நடிகர்களின் லிஸ்ட்டை எடுத்து, எனது சொந்தப் பணத்தை அனுப்பலாம் என்று இருக்கிறேன்

இவ்வாறு ஐசரி கணேஷ் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x