Published : 24 Jan 2020 11:16 AM
Last Updated : 24 Jan 2020 11:16 AM

முதல் பார்வை: சைக்கோ

தன் காதலியைக் கடத்திய சைக்கோ கொலைகாரனைத் தேடிப் பிடித்து, அவனிடமிருந்து தன் காதலியை மீட்கப் போராடும் காதலனின் கதை தான் 'சைக்கோ'.

கோயம்புத்தூரில் தொடர்ச்சியாகப் பெண்கள் கடத்தப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்படுகிறார்கள். அந்த சைக்கோ கொலைகாரனை எந்த வழியிலும் பிடிக்க முடியாமல் தடுமாறுகிறது காவல்துறை. இதனிடையே பார்வையற்ற மாற்றுத்திறனாளியான உதயநிதி ஸ்டாலின், எஃப்.எம்.மில் பணிபுரியும் அதிதி ராவைக் காதலிக்கிறார். அவரிடம் தன் காதலைச் சொல்லப் பலவழிகளில் முயல்கிறார். இறுதியில், நாளை என் எஃப்.எம். நிகழ்ச்சியைக் கேள். அதில் ஒரு க்ளூ சொல்கிறேன். அதைச் சரியாக ஊகித்து வந்துவிட வேண்டும். உனக்காக அங்கு நான் காத்திருப்பேன். அப்படி நீ வந்துவிட்டால் பார்க்கலாம் என்று சொல்கிறார் அதிதி ராவ். உதயநிதியும் சரியாகச் செல்ல, அந்த இடத்தில் அதிதி ராவைக் கடத்துகிறார் சைக்கோ கொலைகாரன்.

சைக்கோ கொலைகாரன் அதிதி ராவைக் கொலை செய்யப் போகும் போது, அவரோ பயப்படாமல் இருக்கிறார். இது கொலைகாரனை ஆத்திரமூட்டுகிறது. இன்னும் ஒரு வாரத்தில் என் பிறந்த நாள். அதற்குள் என் கவுதம் என்னைக் காப்பாற்றுவான் என்று சைக்கோவிடம் சவால் விடுகிறார் அதிதி ராவ். இந்தச் சவால் என்னவானது, காவல்துறையினரால் நெருங்கவே முடியாத சைக்கோவை உதயநிதி எப்படி நெருங்கினார், நித்யா மேனன் எப்படி உதவினார், உதயநிதியின் காதலை ஏற்றுக் கொண்டாரா அதிதி ராவ் இப்படியான அனைத்துக் கேள்விகளுக்கும் பதிலளிக்கிறது திரைக்கதை.

கண் தெரியாதவராக நடிக்க வேண்டும் என்பதற்கான மெனக்கிடல் உதயநிதியின் நடிப்பில் தெரிகிறது. காதலுக்காக ஏங்குவது, கையில் ஸ்டிக்குடனே நடப்பது, காதலியைக் கண்டுபிடிக்கப் போராடுவது எனக் கதாபாத்திரத்துடன் பொருந்தியிருக்கிறார். அதிகமான கதாபாத்திரங்கள் இருந்தாலும், தனக்கான பணியைக் கச்சிதமாகச் செய்திருக்கிறார். அதிலும் நித்யா மேனனுடன் தன் காதலியைக் கண்டுபிடிக்க உதயநிதி மேற்கொள்ளும் பயணம் அற்புதம்.

உதயநிதியின் காதலியாக அதிதி ராவ். தன் பின்னாலேயே வரும் உதயநிதியைத் திட்டுவது, பின்பு அவரின் காதலை ஏற்பது என்பதைத் தாண்டி சைக்கோ கொலைகாரனிடம் மாட்டிக் கொண்டு தவிக்கும் தவிப்பை அருமையாக வெளிப்படுத்தியுள்ளார். அதிலும், இவர் முன்னால் சைக்கோ கொலை செய்யும்போது இவருடைய அழுகையும், பயமும், தவிப்பும் பார்வையாளர்களைக் கதாபாத்திரத்துடன் ஒன்ற வைக்கிறது.

தனக்கு ஏற்பட்ட விபத்தால், கழுத்துக்குக் கீழே உணர்ச்சியில்லாத கதாபாத்திரத்தில் நித்யா மேனன். எப்போதும் தன்னைச் சுற்றியிருப்பவர்களைத் திட்டிக் கொண்டே இருக்கும் கதாபாத்திரத்தில் தன் பங்கினைச் செவ்வனே செய்திருக்கிறார்.

இந்தப் படத்தில் சைக்கோ கொலைகாரனாக நடித்திருக்கும் வில்லன் ராஜின் நடிப்புதான் படத்தைத் தூக்கி நிறுத்துகிறது. பயப்படாமல் கொலை செய்வது, துண்டித்த தலைகளை ஒன்று சேர்ப்பது, தன்னை நெருங்கிவிட்டார்கள் என்றவுடன் ஒருவித பதற்றத்துடனே இருப்பது என மனிதர் கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார். க்ளைமாக்ஸ் காட்சியில் சாவியைக் கேட்டு அதிதி ராவிடம் அழும் காட்சியில் உருக வைக்கிறார். கண்டிப்பாக இவருக்கு ஒரு சிறப்பான எதிர்காலம் உண்டு.

விசாரணை அதிகாரியாக இயக்குநர் ராம், உதயநிதியுடனே வரும் உதவியாளராக சிங்கம் புலி, காவல்துறையில் பணிபுரியும் பவா செல்லத்துரை, நித்யா மேனனுக்கு அம்மாவாக ரேணுகா என தங்களுடைய கதாபாத்திரத்துக்கு நியாயம் செய்திருக்கிறார்கள். படத்துக்கு மிகப்பெரிய பலம் தன்வீரின் ஒளிப்பதிவு. ஒவ்வொரு ப்ரேமும் அவ்வளவு அற்புதம். சைக்கோ கொலைகாரனின் இடத்தை மிகவும் குறைவான ஒளியிலும், மீதமுள்ள இடங்களை அதிக ஒளியுள்ளதாகவும் காட்சிப்படுத்தி தமிழ்த் திரையுலகில் தன் முதல் படத்தின் மூலம் அழுத்தமாகத் தடம் பதித்துள்ளார் தன்வீர். கண்டிப்பாக அவருக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது.

படத்தின் மற்றொரு பெரிய பலம் இளையராஜாவின் பின்னணி இசை. மிஷ்கினின் படங்கள் என்றாலே இளையராஜாவுக்கு தனி உற்சாகம் வந்துவிடும் போல. மனிதர் விளையாடி இருக்கிறார். எந்த இடத்தில் பின்னணி இசை தேவையில்லை என்பதை உணர்ந்து, பல காட்சிகளை அப்படியே விட்டு இருப்பது செம. 'உன்னை நினைத்து நினைத்து' பாடலும் அதைக் காட்சிப்படுத்திய விதமும் இதமாக இருக்கிறது. தன் இசையின் மூலமாகவும் பயத்தைப் பார்வையாளர்களுக்குக் கடத்தியிருக்கிறார்.

படத்தில் பிரச்சினை என்னவென்றால் ஓவராக இருக்கும் ரத்தம் தெறிக்கும் காட்சிகள்தான். கண்டிப்பாகச் சிறு குழந்தைகளும் பெண்களும் காணவே முடியாத அளவுக்கு படம் இருக்கிறது. கதைக்கு அது தேவைதான் என்றாலும், சில காட்சிகள் நம்மை முகம் சுளிக்க வைக்கின்றன. மேலும், 14 பெண்களைக் கடத்தி கொலை செய்திருக்கிறான் என்று சொல்கிறார்கள், அவர்களை எப்படித் தேர்வு செய்தான் கொலைகாரன் என்பதற்கான வலுவான காரணமில்லை. காவல்துறையினர் கொலைகாரனைப் பிடிக்காமல் திணறும்போது, உதயநிதி - நித்யா மேனன் உடனடியாக கொலை இப்படி நடந்திருக்கலாம் என்று துப்பறிவது, அதைக் காவல்துறையினர் நினைத்து ஆச்சரியப்படுவது என்பது நம்பும்படியாக இல்லை.

பண்ணை வைத்திருப்பவர்தான் கொலைகாரர் என்று உதயநிதி எப்படி கண்டுபிடித்தார் என்பதையும் இன்னும் நம்பத்தகுந்த காட்சிகள் மூலம் சொல்லியிருக்கலாம். ஏன் வில்லன் சைக்கோவானார் என்பதற்கான காரணம் ரொம்பவே மேம்போக்காக இருக்கிறது. காட்சியமைப்பு, பின்னணி இசை என படத்தின் உருவாக்கத்தில் கவனம் செலுத்திய மிஷ்கின் கொஞ்சம் வலுவான திரைக்கதையிலும் கவனம் செலுத்தியிருக்கலாம்.

நல்ல கதையைத் திரைக்கதை மூலம் இன்னும் சுவாரசியப்படுத்தியிருந்தால் இந்த 'சைக்கோ' கவனம் பெற்றிருப்பான். இப்போது உருவாக்கத்தில் மட்டுமே கவனம் பெற்றிருக்கிறான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x