Published : 23 Jan 2020 08:27 PM
Last Updated : 23 Jan 2020 08:27 PM

பெரியார் படம் வெளிவர உதவிய ரஜினி எப்படி பழிப்பார்? - லாரன்ஸ் கேள்வி

பெரியார் படத்துக்கு ரஜினி மிகப்பெரிய உதவி செய்ததாக, நடிகர் மற்றும் இயக்குநர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நடந்த துக்ளக் ஆண்டு விழாவில் பேசிய ரஜினி, திமுக தலைவர் கருணாநிதி, முரசொலி, பெரியார் பற்றி குறிப்பிட்டுப் பேசிய நிகழ்வு சர்ச்சைக்குரியதாக மாறியது. ரஜினியின் கருத்துக்கு திராவிடர் கழகம், திராவிடர் விடுதலை கழகம் எதிர்வினையாற்றின. அவரது பேச்சுக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது. பெரியார் குறித்து அவதூறு கிளப்புவதாகத் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் ரஜினி மீது புகார் அளிக்கப்பட்டது.

தனது கருத்தில் உறுதியாக இருப்பதாகவும், தான் மன்னிப்புக் கேட்கப்போவதில்லை என்றும் ரஜினிகாந்த் தெரிவித்தார். அவரது கருத்தை திமுக, அதிமுக தலைவர்கள் கண்டித்துள்ளனர். இந்நிலையில் ரஜினியின் தீவிரமான ரசிகரான ராகவா லாரன்ஸ் தனது ஃபேஸ்புக் பதிவில், "எனக்கு அரசியல் தெரியாது. ஆனால் அண்ணன் சூப்பர் ஸ்டாரைப் பற்றி எனக்கு மிக நன்றாகவே தெரியும். ரஜினிகாந்த் அவர்களைப் பொறுத்தவரை, யார் மனதையும் நோகும் படி பேசக்கூடியவர் அல்ல. ஏன் அவரை திட்டுபவர்களைக் கூட பதிலுக்குப் பதில் திருப்பி திட்டாத பண்பாளர்.

எதையும் ப்ளான் செய்தோ, திட்டமிட்டோ அவதூறாகப் பேசக்கூடியவர் அல்ல. ஆனால் பெரியாரைப் பற்றி அவதூறாகப் பேசிவிட்டதாகக் கூறுகின்றனர். அப்படிப் பேசக் கூடியவர் என்றால் 2006 -ம் ஆண்டு பெரியாரின் தீவிரத்தொண்டரான இயக்குநர் வேலு பிரபாகரன் அவர்கள், "பெரியார் கருத்துக்களைத் தாங்கி எடுத்த படத்தை வெளியிட முடியாமல் தவித்தபோது, எதிர்பாராத பெரும் தொகையைக் கொடுத்து, அப்படத்தை வெளியிட எதற்காக ரஜினி சார் உதவி செய்ய வேண்டும்?

பெரியார் மீது பெரும் மதிப்பு கொண்டவர் தான் ரஜினி சார். எனவே அவரை யாரும் தவறாகப் புரிந்து கொண்டு பேச வேண்டாம் என அவரது மனமறிந்த ரசிகனாக தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார் லாரன்ஸ்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x