Published : 20 Jan 2020 11:39 AM
Last Updated : 20 Jan 2020 11:39 AM

டி.ஆரையும், தயாரிப்பாளர் சங்கக் குழுவினரையும் கடுமையாகச் சாடிய இயக்குநர்

தயாரிப்பாளர் சங்கக் குழுவினரையும், டி.ராஜேந்தரையும் கடுமையாகச் சாடிப் பேசினார் இயக்குநர் திருமலை.

'ஆடை' படத்துக்குப் பிறகு அமலா பால் நடிப்பில் அடுத்து வரவுள்ள படம் 'அதோ அந்த பறவை போல'. முழுக்க ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தை ஜோன்ஸ் தயாரித்துள்ளார். புதுமுக இயக்குநர் கே.ஆர்.வினோத் இயக்கியுள்ள இந்தப் படத்தின் கதையை அருண் எழுதியுள்ளார். இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது.

இதில் படக்குழுவினருடன் எஸ்.வி.சேகர், இயக்குநர் திருமலை உள்ளிட்ட திரையுலகினரும் கலந்து கொண்டார்கள். இந்தச் சந்திப்பில் தயாரிப்பாளர் சங்கத்தையும், டி.ராஜேந்தரையும் கடுமையாகத் தாக்கிப் பேசினார் இயக்குநர் திருமலை.

இந்த விழாவில் இயக்குநர் திருமலை பேசியதாவது:

"ஒரு தயாரிப்பாளருக்காகத்தான் சினிமாவில் இருக்கும் அனைத்து சங்கங்களும் ஒன்றாக இணைகின்றன. அப்படிப்பட்டவரைப் பாதுகாப்பதுதான் நம் அனைவரின் கடமை. இன்றைய திரையுலகில் ஒரு சினிமா வெளியீட்டுக்கு எந்த அளவுக்குப் பிரச்சினையைச் சந்தித்துக் கொண்டிருக்கிறோம் என்பது அனைவருக்கும் தெரியும்.

'அதோ அந்த பறவை போல' படத்துக்கு வியாபார ரீதியில் நல்ல எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இன்று நாயகியை மையப்படுத்திய படங்களுக்கென்று ஒரு வியாபாரம் இருக்கிறது. அமலாபாலுக்காகவே இந்தப் படம் வெற்றி பெற வேண்டும். 'ஆடை' படம் வெளியானதற்கு அவர்தான் காரணம். அவ்வளவு கோடிகள் செலவு செய்யப்பட்டு எடுக்கப்பட்ட படம், அமலாபாலின் கடைசி நேர உதவியால் மட்டுமே வெளியானது. இதை ஏன் சொல்கிறேன் என்றால், ஒவ்வொரு கலைஞரும் மெனக்கிட்டால் மட்டுமே படம் வெளியாகும்.

தினமும் வெவ்வேறு பிரச்சினைகளைச் சந்தித்துக் கொண்டே இருக்கிறோம். இயக்குநராக நான் பண்ணிய முதல் படம் லாபம். தயாரிப்பாளர் ஒரு கார் வாங்கிக் கொடுத்தார். பின்பு படம் இயக்கினேன், தயாரித்தேன் என இப்படி சினிமாவுக்குள் தான் பயணப்பட்டுக் கொண்டே இருக்கிறேன்.

இந்தப் படம் தயாரிப்பாளருக்கு ஒரு மாற்றத்தை உருவாக்க வேண்டுமானால், தயாரிப்பாளர் சங்கம் வலுவானதாக அமைய வேண்டும். இயக்குநர் சங்கத்துக்கு விக்ரமன் சார் தலைவராக இருந்தபோது நியாயமாக அந்தச் சங்கம் இருந்தது. யார் தவறு செய்தாலும் அதை தண்டிக்கக் கூடிய இடத்தில் அந்தத் தலைவர் இருக்க வேண்டும். அதே போல் பெப்சி சங்கமும் அண்ணன் செல்வமணி தலைமையில் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.

அதே போல் சென்னை, செங்கல்பட்டு விநியோகஸ்தர்கள் சங்கத்துக்கு டி.ராஜேந்தர் தலைவராகப் பதவி ஏற்றுள்ளார். அவருக்கு ஒரு வேண்டுகோள். 'தர்பார்' படம் வெளியீட்டுக்கு முந்தைய பேட்டியில், அந்தப் படம் வெளியாகட்டும் என்றீர்கள். ஆனால், சரியாக அந்தப் படம் வெளியாகிவிட்டது. தலைவராக ஒரு பவருக்கு வந்துவிட்டால் யார் என்ன வேண்டுமானாலும் பேசலாம். விஷால் என்ற ஒருவர் சங்கத்துக்குள் வந்து, பணமெல்லாம் காலியானதால் நீதிமன்றத்துக்குச் சென்று இப்போது சங்கத்தை அரசாங்கம் கையில் எடுத்துள்ளது.

இங்கு பணம் போடுகிற தயாரிப்பாளரைத் தவிர அனைவருமே சொகுசாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இன்று தயாரிப்பாளர்கள் அனாதையாக இருக்கிறார்கள். அதுதான் உண்மை. சினிமாவை நேசிக்கும் தயாரிப்பாளர்கள் 50 பேர் தான் இருக்கிறார்கள். அதில் 25 பேர் நடிகர் - நடிகைகள் பின்னால் ஓடுகிறார்கள். இன்று தயாரிப்பாளர் சங்கம் உள்ளிட்ட சங்கங்கள் செயல்படாததால் தமிழ் சினிமா மிகவும் மோசமான சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளது.

தயாரிப்பாளர் சங்கத்துக்கு அரசு போட்டுள்ள குழுவில், பாரதிராஜா தொடங்கி அனைவருமே நல்லபடியாகச் செயல்பட்டால் மட்டுமே சங்கம் வலுவாக இருக்கும். பாரதிராஜா வேலைப் பளுவால் வந்து உட்கார முடியவில்லை. ஆகையால், கடந்த 8 மாதங்களில் ஒவ்வொரு பட வெளியீட்டுக்கும் அவ்வளவு பிரச்சினைகளைச் சந்தித்துக் கொண்டிருக்கிறோம்".

இவ்வாறு இயக்குநர் திருமலை பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x