Published : 18 Jan 2020 08:21 AM
Last Updated : 18 Jan 2020 08:21 AM

திரை விமர்சனம் - பட்டாஸ்

கொலைக் குற்றத்துக்கான தண்டனை முடிந்து வெளியே வரும் கன்னி யாகுமரி (சினேகா), சென்னையில் குத்துச்சண்டை பயிற்சி மையம் நடத்தும் நிலப்பாறையை (நவீன் சந்திரா) கொல்ல முடிவு செய்கி றார். அதற்கான முயற்சியில் இறங்கும்போது, இறந்துவிட்டதாக நினைத்த தனது மகன் சக்தியை (தனுஷ்) பார்த்து மகிழ்ச்சி அடை கிறார். எதிர்பாராத சூழ்நிலையில் தாயை சந்திக்கும் மகன், தனது தந்தையின் கடந்தகாலத்தை தெரிந்துகொள்கிறான். சில்லறைத் திருடனாக இருந்த மகன், அதை உதறித் தள்ளிவிட்டு எடுத்த பயிற்சி யும், முயற்சியும் என்ன? தனது தந்தை (திரவிய பெருமாள்) போற்றிப் பாதுகாத்த பாரம்பரிய தற்காப்புக் கலையான ‘அடி முறை’யை அவரால் உலகறியச் செய்ய முடிந்ததா, அப்பாவின் எதிரி களை அவர் அழித்தாரா என்பது மீதிக் கதை.

மேலோட்டமாகப் பார்க்கும் போது பழிவாங்கும் கதையாக இருந்தாலும், தமிழகத்தின் பாரம் பரிய தற்காப்புக் கலையான ‘அடி முறை’யை கதைக் களப் பின்னணி ஆக்கியதற்காக இயக்குநர் துரை. செந்தில்குமாரை பாராட்டலாம்.

ஆனால், கதை சொல்லல் முறையில் புதுமை என ஏதும் இல்லை. எளிதில் ஊகித்துவிடும் சம்பவங்கள், அடித்துத் தோய்த்த பழைய காட்சி அமைப்புகள் எண்பதுகளின் திரைக்கதை படத் துக்கு பெரும் பின்னடைவு.

அப்பா மகன் என்ற இரட்டைப் பரிமாணங்களில் வருகிறார் தனுஷ். அடிமுறைக் கலை வாத்தியாராக வரும் திரவிய பெருமாள் கதா பாத்திரம் சிறப்பாக வடிவமைக்கப் பட்டுள்ளது. தனுஷும் அந்த கலையை நுணுக்கமாகக் கற்றுக் கொண்டவர்போல, தொழில்முறை போட்டிகளில் அதன் இலக்க ணங்களை மீறாமல் நண்பனை எதிர்த்துச் சண்டை செய்வது, தனது குருவுக்குப் பெருமை சேர்ப் பது என தோற்றம், நடிப்பு இரண்டி லும் அப்பா கதாபாத்திரத்துக்கு அற்புதமாக உயிரூட்டுகிறார்.

மகன் பட்டாஸாக வரும் தனுஷ் கதாபாத்திரம் இளைஞர்களைக் கவரும் விதமாக இருக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறார்கள். அப்படி நினைத்ததில் தவறில்லை. ஆனால், தனுஷ் இதைப்போல பல படங்களில் வந்துவிட்டார். தனுஷ் செய்யும் ‘யூத்’ அலப்பறைகள் எதுவும் எடுபடவில்லை.

தனுஷின் நண்பனாக வரும் ‘கலக்கப்போவது யாரு’ புகழ் சதீஷின் காமெடிகள் ஒழுங்காக வெடிப்பதால் பட்டாஸ் தனுஷின் தலை தப்பிக்கிறது. முனீஸ்காந் தும் தனது பங்குக்கு கலகலப் பூட்டுகிறார்.

கதையைச் சுமந்து செல்லும் கதாபாத்திரத்தில் கன்னியாகுமரி யாக வரும் சினேகாதான் ‘வுமன் ஆஃப் த மேட்ச்’. கன்னியாகுமரி யாக அடிமுறைக் கலையை ஆர்வ முடன் கற்பது, சண்டைக் காட்சி களில் போதிய வேகத்தை வெளிப் படுத்துவது, காதலி, மனைவி, அம்மா என பல பரிமாணங்களில் விரியும் உணர்வுகளைக் கச்சித மாக வெளிக்காட்டுவது என கதா பாத்திரத்துக்கான நடிப்பில் தன்னை தனித்து நிறுவியிருக்கி றார். நாயகனை இரட்டைக் கதா பாத்திரங்களில் முன்னிறுத்தும் ஒரு வணிகப் படத்தில் சினேகா எனும் நட்சத்திரமாகத் தெரியாமல் செய்த தில் சினேகாவின் உழைப்பு வியக்க வைக்கிறது.

பெயருக்கு கதாநாயகியாக வந்துபோகிறார் மெஹ்ரீன் பிர்ஸாதா. அவர் செய்யும் குறும்பு கள் எதுவும் எடுபடவில்லை. நடிக்க தெரியாவிட்டால், எத்தனை ஈர்ப்புகொண்ட தோற்றம் இருந்தும் பலன் அளிக்காது என்பதற்கு இவர் உதாரணம். அடிமுறைக் கலையை சொல்லித்தரும் ஆசானாக நாசரின் கம்பீர நடிப்பு எதார்த்தம்.

நாயகி, மகன் தனுஷ் கதா பாத்திரங்கள் போலவே முழுமை யும், ஆளுமையும் இல்லாமல் தத்தளிக்கிறது வில்லன் கதாபாத்தி ரம். இதனால் வில்லனாக நடித் துள்ள நவீன் சந்திரா, நடிப்பில் வெளிப்பட முடியாமல் பின்தங்கு கிறார்.

ஓம் பிரகாஷின் துடிப்பான ஒளிப் பதிவு, படத்தை தூக்கி நிறுத்து கிறது. விவேக் - மெர்வின் இசையில் ‘மவனே என்னை மோதிட வாடா’ என்ற ‘ராப்’ வகைப் பாடல் ஈர்க்கி றது. அதை எழுதிப் பாடியிருக்கும் அறிவு கவனம் ஈர்க்கிறார்.

ஒளிப்பதிவு, இசையைத் தாண்டி ஈர்க்கும் மற்றொரு தொழில்நுட்பம் கலை இயக்கம். அடிமுறைக் கலையை கற்பதற்கான பயிற்சிக் கூடத்தின் வடிவமைப்பே சான்று.

அடிமுறைக் கலையின் இலக்க ணங்களை மனதில் வைத்து, அதே நேரம் சினிமாவுக்கான நகாசுகளை யும் இணைத்து சண்டைக் காட்சி களை வடிவமைத்துள்ள திலீப் சுப்பராயன் 7 சண்டைக் காட்சிகளை யும் நிமிர்ந்து உட்கார்ந்து ரசிக்க வைக்கிறார்.

‘அடிமுறை’ எனும் மறக்கப்பட்ட தமிழக தற்காப்புக் கலைக்கு வெளிச்சம் தந்தது இயக்குநரின் ஈடுபாட்டைக் காட்டினாலும், கதை சொல்லல், காட்சியாக்கம் ஆகிய வற்றில் புதுமை, சுவாரஸ்யம் ஆகியவற்றை பின்பற்றத் தவறிய தால், திரி மட்டுமே திகுதிகுவென எரிகிறது இந்தப் பட்டாஸில்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x