Published : 17 Jan 2020 04:18 PM
Last Updated : 17 Jan 2020 04:18 PM

மீண்டும் படப்பிடிப்பில் பிரபாஸ்: தலைப்பு மாறுகிறதா?

ராதா கிருஷ்ணா இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. படத்தின் தலைப்பை மாற்ற படக்குழு முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சுஜித் இயக்கத்தில் பிரபாஸ், ஷ்ரத்தா கபூர், நீல் நிதின் முகேஷ், ஜாக்கி ஷெராஃப், அருண் விஜய் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'சாஹோ'. பிரம்மாண்டமான பொருட்செலவில் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான இந்தப் படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. ஆனாலும், இந்தப் படத்துக்காகப் போடப்பட்ட முதலீட்டை எடுத்துவிட்டதாகப் படக்குழு அறிவித்தது.

'சாஹோ' படப்பிடிப்பின்போதே, தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பையும் தொடங்கினார் பிரபாஸ். ராதா கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகி வந்த இந்தப் படத்தின் நாயகியாக பூஹா ஹெக்டே நடித்து வந்தார். 'சாஹோ' படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளால் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டது.

'ஜான்' என்று பெயரிடப்பட்ட இந்தப் படத்தின் நிலை என்ன என்பது தெரியாமலேயே இருந்தது. தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாகப் படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் தான் இருக்கும் புகைப்படம் ஒன்றைத் தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் பிரபாஸ். இது பிரபாஸ் ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதனிடையே, படக்குழுவினர் வெளியிட்டுள்ள இன்றைய அறிவிப்பு எதிலுமே படத்தின் தலைப்பைக் குறிப்பிடவில்லை. இதனால், தலைப்பை மாற்ற படக்குழு முடிவு செய்திருப்பது தெளிவாகிறது. ஏனென்றால், தெலுங்கில் உருவாகி வரும் '96' படத்தின் ரீமேக்கிற்கு 'ஜானு' எனத் தலைப்பிட்டுப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர். இதனால் தலைப்பு குறித்த தேவையற்ற குழப்பங்கள் வேண்டாம் என்று பிரபாஸ் - ராதா கிருஷ்ணா கூட்டணி முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x