Published : 17 Jan 2020 10:07 AM
Last Updated : 17 Jan 2020 10:07 AM

’தலைவி’ அப்டேட்: எம்.ஜி.ஆராக நடிக்கும் அரவிந்த்சாமியின் லுக் வெளியீடு

'தலைவி' படத்தில் எம்.ஜி.ஆராக நடித்து வரும் அரவிந்த்சாமியின் லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது.

தமிழக அரசியலில் கம்பீரமாக வலம் வந்தவர் ஜெயலலிதா. அதிமுக நிறுவனர் எம்ஜிஆர் மறைவுக்குப் பின் தன்னை அடுத்த தலைவராக நிலைநிறுத்தி 1990-ல் அதிமுக தலைமைப் பொறுப்பேற்ற ஜெயலலிதா 1991-ல் அதிமுக ஆட்சி அமைத்து முதல்வரானார். கட்சியைக் கட்டுப்பாட்டுடன் நடத்திய ஜெயலலிதா, எம்ஜிஆரை விட அதிக வெற்றிகளை அதிமுக பெறக் காரணமாக இருந்தார்.

2016-ம் ஆண்டு தேர்தலில் மீண்டும் வென்று ஆட்சி அமைத்து முதல்வரான ஜெயலலிதா உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 75 நாள் சிகிச்சைக்குப் பின் டிசம்பர் 5-ம் தேதி அன்று மறைந்தார்.

தற்போது மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைப் பின்னணியாகக் கொண்டு ’தலைவி’ என்ற படம் தயாராகிறது. இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் வெளியாகவுள்ளது. ஏ.எல்.விஜய் இயக்கி வரும் இந்தப் படத்தில் ஜெயலலிதாவாக கங்கணா ரணாவத் நடித்து வருகிறார். அண்மையில் வெளியிடப்பட்ட இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இணையத்தில் கடும் விவாதத்தை உண்டாக்கியது.

இதனிடையே, இன்று எம்.ஜி.ஆர் பிறந்த நாளை முன்னிட்டு 'தலைவி' படத்தில் எம்.ஜி.ஆராக நடித்துவரும் அரவிந்த்சாமியின் லுக்கை வெளியிட்டுள்ளனர். ஜனவரி 26-ம் தேதி வெளியாகவுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x