Published : 16 Jan 2020 02:49 PM
Last Updated : 16 Jan 2020 02:49 PM

விவசாயம் என்றாலே வயதானவர்கள் என்று ஆகிவிட்டது: கார்த்தி வேதனை

விவசாயம் என்றாலே வயதானவர்கள் என்று ஆகிவிட்டது என நடிகர் கார்த்தி வேதனை தெரிவித்தார்.

ஈரோடு மாவட்டம் கிளாம்பாடி அருகே கவுண்டம்பாளையத்தில் உழவன் அறக்கட்டளை சார்பில் காளிங்கராயன் தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் பங்கேற்ற நடிகர் கார்த்தி, கால்வாய் மீட்பு குறித்த உறுதிமொழியை மக்களுடன் இணைந்து ஏற்றுக்கொண்டார்.

அதைத் தொடர்ந்து ஊர் மக்களிடையே பேசினார். அவர் கூறும்போது, ''இந்த மண்ணில் பிறந்த காளிங்கராயனின் மனது யாருக்கு வரும்? 738 வருடங்களுக்கு முன்னால், தனி மனிதனாக கால்வாயை வெட்டினார். பொதுமக்களுக்காகச் செய்ததை சுயநலம் என்று யாரும் கூறிவிடக் கூடாது என்பதற்காக ஊரையே காலி செய்துவிட்டுச் சென்றது காளிங்கராயனின் குடும்பம்.

காளிங்கராயன் வாய்க்காலில் கலக்கும் தொழிற்சாலைக் கழிவுகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தண்ணீர் கெட்டுப் போனதால் ஆரோக்கியத்தில் அத்தனை கேடு ஏற்படுகிறது. தொழிற்சாலைகள் தண்ணீரைச் சுத்திகரித்துப் பயன்படுத்த வேண்டும்.

எவ்வளவு சம்பாதித்தாலும் விவசாயத்தை விட்டுவிடக் கூடாது. விவசாயம் என்றாலே வயதானவர்கள் என்று ஆகிவிட்டது. அப்படி இருக்கவே கூடாது. அடுத்தடுத்த தலைமுறைக்கு விவசாயம் கடத்தப்பட வேண்டும். என்னுடைய மகளுக்கு நாற்று நடுவது பற்றித் தெரியாது. ஆனால் இன்று ஆற்றில் விளையாடுகிறாள். இந்த நினைவு வாழ்நாள் முழுவதும் அவளுக்கு இருக்கும்.

ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் பங்குபெற்றதும் மாணவர்கள்தான். குடியுரிமைத் திருத்தச் சட்ட போராட்டங்களில் பங்கேற்பதும் நம்முடைய மாணவர்கள்தான். மாணவர்களும் இளைஞர்களும் விவசாயத்தையும் சுற்றுச்சூழலையும் காக்க வேண்டும்'' என்று கார்த்தி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x