Published : 16 Jan 2020 02:47 PM
Last Updated : 16 Jan 2020 02:47 PM

விருது விழாக்களில் நடக்கும் ஒழுங்கீனம்: 'சில்லுக் கருப்பட்டி' இயக்குநர் ஆதங்கம்

டிஆர்பி (தொலைக்காட்சி மதிப்பீடு) பெறுவதாக இருந்தால், என்னைப் போன்ற பிரபலமாகாத, டிஆர்பிக்கு உதவாத இயக்குநர்களை அழைக்காமல் இருப்பதே நல்லது என்று விருது விழாக்களில் நடக்கும் ஒழுங்கீனம் குறித்து இயக்குநர் ஹலிதா ஷமீம் ஆதங்கத்துடன் கூறியுள்ளார்.

'பூவரசம் பீப்பீ', 'சில்லுக் கருப்பட்டி' படங்களின் இயக்குநர் ஹலிதா ஷமீம் இது தொடர்பாக கூறியதாவது:

''திரைத்துறையின் கவர்ச்சி, ஆடம்பரம் தனிப்பட்ட முறையில் எப்போதும் என்னை ஈர்த்ததில்லை. முக்கியமாக வெளிநாடு சுற்றுலா மற்றும் விருது வழங்கும் நிகழ்ச்சிகள். இதிலிருந்து தனித்த ஓர் உலகத்திலேயே எனது திரைப்படங்களின் களம் அமைந்திருக்கும். ஆனால், இம்மாதிரியான நிகழ்ச்சிகள் நடிகர்களுக்குள் நட்பு ஏற்பட ஒரு வழியாகவே நான் பார்க்கிறேன். அது நல்லதும் கூட.

என்னை வருத்தப்படச் செய்வது இந்த விருது வழங்கும் நிகழ்ச்சிகள் எப்படி நடக்கிறது என்பதுதான். பரிந்துரைக்கப்பட்டும் அனைவரையும் அழைத்து, வெற்றி பெற்றவர் யார் என நிகழ்ச்சியில் அறிவிப்பது என்பது நமது துறையைப் பொறுத்தவரை சற்று அதிகப்படியான விஷயம்தான். இங்கு நடப்பது என்னவென்றால், விருது பெறுபவர்கள் எப்போது வந்து விருதினைப் பெற்றுக் கொள்ள விரும்புகிறார்கள், யார் அவர்களுக்கு விருது தர வேண்டும் என விரும்புகிறார்கள் என்று அவர்களிடம் கேட்கப்படுகிறது.

அன்று விருது பெற விழாவுக்கு வந்தவர்கள், ஆரம்பம் முதல் இறுதி வரை இருந்தாலே எவ்வளவு சிறப்பாக இருக்கும். இதற்குப் பொறுமையும், அதற்கான தாராள மனமும் தேவை. சில வருடங்களுக்கு முன் (ஒரு நிகழ்ச்சியில்) ஒரு குழு பலமான கை தட்டல்களுக்கு நடுவில் மேடையேறியது. அந்தப் படம் வென்ற அனைத்து விருதுகளையும் வாங்கிக் கொண்டு பின் வெளியேறியது. இந்த முதல் குழு வெளியேறிய பிறகே அடுத்த முக்கியமான படத்தின் குழு மேடையேறியது. இதைப் பொறுத்து விருது பெறுபவர்களின் பெயர் வாசிக்கப்பட்டது. இப்படி நடக்கும்போது, மற்ற விருதுப் பிரிவுகளை அறிவிக்கும் முன்னரே, அந்தக் குழுவில் இருப்பவர்கள் வென்ற விருதுகளை முதலில் தர விழா அமைப்பாளர்கள் நிர்பந்திக்கப்படுகின்றனர்.

உதாரணத்துக்கு, ஒரு படம் சிறந்த ஆடை வடிவமைப்பு, சண்டைக் காட்சி இயக்கம், சிறந்த நடிகர் ஆகிய விருதுகளை வென்றிருந்தால், அவர்களுக்கு இந்த குறிப்பிட்ட வரிசையில் விருது வழங்கப்பட்டு பின் அந்த நட்சத்திரங்கள் வழியனுப்பப்படுவார்கள். முடிந்த வரை அனைத்து நட்சத்திரங்களும் அவர்களுக்குச் சவுகரியமான நேரத்தில் இந்த நிகழ்ச்சிகளுக்கு வரவேண்டும் என்பதற்காக இந்த முறை பின்பற்றப்படுகிறது. ஆனால் இது ஆரோக்கியமானதுதானா?

இந்த அமைப்பினால் நாம் ஒரு முக்கியமான விஷயத்தைத் தவறவிடுகிறோம். ஒழுங்கு.

சர்வதேச அளவில் விருது வழங்கும் நிகழ்ச்சிகள் ஒரு குறிப்பிட்ட, ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்ட ஒழுங்கைப் பின்பற்றுவதற்குக் காரணம் இருக்கிறது. அதில் ஒரு சரியான உணர்வு இருக்கிறது. நடிப்புக்கான விருதுகள் அடுத்தடுத்து கொடுக்கப்பட வேண்டும். எழுத்துக்கான விருதுகள், கதை, திரைக்கதை, வசனம், பாடல் வரிகள் ஆகியவை அடுத்தடுத்துக் கொடுக்கப்பட வேண்டும். இயக்குநரின் விருதும் இந்த வரிசையில் சேர வேண்டும். தொழில்நுட்ப விருதுகள் வரிசையாகக் கொடுக்கப்பட வேண்டும். விருது பெறுபவர்களின் புகழ் மற்றும் நேரத்தைச் சார்ந்து இவற்றை மாற்றி மாற்றித் தரக்கூடாது.

இதில் நோக்கம் டிஆர்பி (தொலைக்காட்சி மதிப்பீடு) பெறுவதாக இருந்தால், என்னைப் போன்ற பிரபலமாகாத, டிஆர்பிக்கு உதவாத இயக்குநர்களை அழைக்காமல் இருப்பதே நல்லது. அதற்குப் பதிலாக எங்களை அழைத்து நாங்கள் அவ்வளவு முக்கியமானவர்கள் இல்லை என்று தெரிவிப்பதைத் தவிர்க்கலாம்.

சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் நான் இரண்டு விருதுகளை வென்றேன். அந்த விழாவில் ஒரு படைப்பாளியாக நான் ஒழுங்காக மதிக்கப்பட்டதாக உணர்ந்தேன்.

ஆம், நாங்கள் திரைப்படங்கள் எடுக்கிறோம், விருது வழங்குபவரை சுவாரசியப்படுத்த மேடைக்கு அழைக்கப்படுகிறோம். டிஆர்பிக்காக, வழக்கமாக விருது தருபவர் ஒரு நாயகியாகத்தான் இருக்கும். மேடையில் அவர்கள் சொல்வதைச் செய்யத் தயாராகவே இருக்கிறோம். ஆனால் சிறிய மரியாதையை எதிர்பார்ப்பதில் தவறில்லையே.

இங்கு ஒரு மாற்றத்துக்கான கட்டாயத் தேவை இருப்பதைப் பார்க்கிறேன் - திரைத்துறையிடமிருந்தும் (ஒவ்வொரு கலைஞரையும் ஆதரிக்க அனைவரும் ஒற்றுமையுடன் அங்குத் திரள வேண்டும்), நிகழ்ச்சித் தொகுப்பாளர்களிடமிருந்தும் (எங்களைப் போன்ற கலைஞர்கள் யார் என்று புரிந்துகொண்டு, சற்று கண்ணியத்துடன், பரிவுடன் எங்களை நடத்த வேண்டும்) மற்றும் விருது வழங்கும் நிகழ்ச்சிகளை நடத்தும் ஏற்பாட்டாளர்களிடமும் (நட்சத்திரங்களைப் பாராட்டுங்கள், அதே நேரம் கலையையும் பாராட்டுங்கள்) மாற்றம் வர வேண்டும்''.

இவ்வாறு ஹலிதா ஷமீம் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x