Published : 16 Jan 2020 01:03 PM
Last Updated : 16 Jan 2020 01:03 PM

’மாட்டுக்கார வேலன்’ 50 வயது;  மறக்கமுடியாத ‘ஒருபக்கம் பாக்குறா’!

வி.ராம்ஜி

எம்ஜிஆர், ஜெயலலிதா, லட்சுமி நடித்த ‘மாட்டுக்கார வேலன்’ திரைப்படம் பெயருக்கேற்ற வகையில், ஒரு பொங்கல் நாளில் வெளியானது. இந்தப் படம் வெளியாகி, 50 வருடங்களாகிவிட்டன. இன்றைக்கும் இந்தப் படமும் பாடல்களும் ரசிகர்களின் மனதில் தனியிடம் பிடித்து, சூப்பர் ஹிட் அடித்துக்கொண்டிருக்கிறது.

எம்ஜிஆர் காலத்துக்கு முன்பே டபுள் ஆக்‌டிங் வந்துவிட்டது. சொல்லப்போனால், எம்.கே.ராதா நடித்த ‘அபூர்வ சகோதரர்கள்’ படம், பின்னாளில் எம்ஜிஆர் நடித்த ‘நீரும் நெருப்பும்’ என்று எடுக்கப்பட்டது. ஆனால் இன்றைக்கு வரை, தமிழ் சினிமாவுக்கும் சரி, டபுள் ஆக்டிங் படங்களுக்கும் சரி... முக்கியமாக பார்முலா ஒன்று இருக்கிறது. அதுதான் எம்ஜிஆர் பார்முலா.

எத்தனையோ படங்களில், எம்ஜிஆர் இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார். ‘குடியிருந்தகோயில்’, ‘எங்கவீட்டுபிள்ளை’, ’நாடோடி மன்னன்’ என பல படங்கள், எம்ஜிஆருக்கு மிகப்பெரிய வெற்றிப் படங்களாக அமைந்திருக்கின்றன.

பொதுவாகவே, எந்தவொரு நடிகருக்கும் டபுள் ஆக்டிங் படம் என்பது, எப்படியாவது ஒருவகையில் கைகொடுத்துவிடும். சிவாஜி, ஜெய்சங்கர், கே.ஆர்.விஜயா, ஜெயலலிதா, கமல், ரஜினி என பலருக்கும் டபுள் ஆக்டிங், பல ஹிட்டுகளைக் கொடுத்திருக்கிறது. ஆக, டபுள் ஆக்டிங் என்பது முதலுக்கு மோசமில்லாத விஷயமாகத்தான் சினிமாவில் பார்க்கப்படுகிறது.

அந்த வகையில், எம்ஜிஆருக்கு மிகப்பெரிய ஹிட்டைக் கொடுத்து, கலெக்‌ஷன் அள்ளிய படமாக ‘மாட்டுக்கார வேலன்’ அமைந்தது. மதுரை ஜெயந்தி பிலிம்ஸ் தயாரிப்பில் வெளியான படம் ‘மாட்டுக்கார வேலன்’.எம்ஜிஆர், ஜெயலலிதா, லட்சுமி, அசோகன், சோ, விகே.ராமசாமி, வரலட்சுமி முதலானோர் நடித்திருந்தனர். இரண்டு எம்ஜிஆர். ஒரு எம்ஜிஆருக்கு ஜெயலலிதா. இன்னொரு எம்ஜிஆருக்கு லட்சுமி. ஒரு எம்ஜிஆர் அப்பாவி என்றால், இன்னொருவர் வீரன். ஒருவர் கெட்டவர் என்றால் இன்னொருவர் நல்லவர். அந்த வகையில் இந்தப் படத்தில் ஒரு எம்ஜிஆர் படித்தவர்; வக்கீல். இன்னொரு எம்ஜிஆர் படிக்காதவர்; மாடு மேய்ப்பவர். அவ்வளவுதான். இதுபோதாதா... இதை வைத்துக்கொண்டு அட்டகாசமான எவர்கிரீன் படமாக அமைத்துவிடுவாரே இயக்குநர் ப.நீலகண்டன்.

எம்ஜிஆரின் ஆஸ்தான இயக்குநர் ப.நீலகண்டனின் மிகப் பிரமாண்டமான வெற்றிப்படமாக ‘மாட்டுக்கார வேலன்’ படமும் அமைந்தது. பெரிய வக்கீல் வி.கே.ராமசாமியிடம் வக்கீல் எம்ஜிஆர் சேர நினைப்பார். அவரையே தன் மகள் ஜெயலலிதாவுக்கு திருமணம் செய்துவைக்க நினைப்பார் வி.கே.ராமசாமி.

இந்த சமயத்தில், கிராமத்தில் உள்ள சொத்து சம்பந்தமான பிரச்சினை மாட்டுக்கார எம்ஜிஆருக்கு. அதற்குக் காரணம் அசோகன். அவருடைய மகன் சோ. மகள் லட்சுமி. பிரச்சினை சம்பந்தமாக வக்கீலைப் பார்க்க வருவார் வேலன் எம்ஜிஆர். ஆனால் அவர்தான் மாப்பிள்ளை வக்கீல் என்று தடபுடல் வரவேற்பும் தங்குவதற்கு ஏற்பாடும் செய்ய... இப்படியொரு திருப்பம் இங்கே!

மாட்டுக்கார வேலன் எம்ஜிஆருக்கும் லட்சுமிக்கும் சண்டை. பிறகு வக்கீல் எம்ஜிஆரைப் பார்க்கும் போது, டீஸ் செய்வார். பிறகு வேலன் எம்ஜிஆருக்கு ஜெயலலிதா மீது காதல். லட்சுமி மீது வக்கீல் எம்ஜிஆருக்கு லவ்வு. இதில் பழிவாங்கல், தந்தையைக் கொன்றது, அதற்கு ஆதாரமாக இருக்கும் டைரி, அதைக் கண்டுபிடிக்க முனைவது, அசோகனின் சூழ்ச்சிகளை முறியடிப்பது, கடைசியில் அந்தக் கூட்டத்தை நிர்மூலமாக்குவது, அசோகனை போலீசில் சிக்கவைப்பது என பக்கா பேக்கேஜில் ஃபேமிலி டிராமாவாகவும் ஆக்‌ஷன் த்ரில்லராகவும் கொடுத்திருப்பார் இயக்குநர்.

‘சத்தியம் நீயே தருமத்தாயே’, ‘பூவைத்த பூவைக்கு’, ‘ஒருபக்கம் பாக்குறா’,’பட்டிக்காடா பட்டணமா’, ’தொட்டுக்கொள்ளவா நெஞ்சைத் தொடுத்துக் கொள்ளவா’ என எல்லாப் பாடல்களும் ஹிட்டடித்தன. இதில், ‘சத்தியம் நீயே’ பாடல் இன்றைக்கும் கட்சிக் கூட்டங்களிலும் எம்ஜிஆர் பிறந்தநாள் நினைவுநாளின் போதும் ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. ‘ஒருபக்கம் பாக்குறா’ பாடல், எம்ஜிஆரின் வித்தியாசமான பாடல்களில் ஒன்றாகிவிட்டது.

ஜெயலலிதாவின் நடிப்பும் லட்சுமியும் நடிப்பும் பேசப்பட்டது. சோவின் காமெடியும் சச்சுவின் காமெடியும் ரசிக்கப்பட்டது. அந்தக் காலத்தில் படம் வெளியான போது, எம்ஜிஆரின் மிக உயரமான கட் அவுட்டை, மவுண்ட்ரோடில் வைத்திருந்தார்கள்.

எழுபதுகளில், கே.வி.மகாதேவனுக்கு படங்கள் குறையத் தொடங்கின. ஆனாலும் ‘மாட்டுக்கார வேலன்’ படத்துக்கு கே.வி.மகாதேவன் இசையமைத்தார். எல்லாப் பாடல்களும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. ஏ.எல்.நாராயணனின் வசனங்கள், கைத்தட்டல்களை அள்ளின. 1970ம் ஆண்டு, பொங்கலுக்கு வெளியானது ‘மாட்டுக்கார வேலன்’. எம்ஜிஆரின் படங்களின் மிகப்பிரமாண்ட வெற்றி வரிசையில், இந்தப் படமும் முக்கியமான படமாக அமைந்தது. 70ம் ஆண்டு பொங்கலுக்கு வந்தது ‘மாட்டுக்கார வேலன்’. இந்தப் பொங்கலுடன் மாட்டுக்கார வேலன் வெளியாகி 50 வருடங்களாகின்றன.

ஆனால் இன்னும் நூறாண்டுகளானாலும் சக்ஸஸ் ஃபார்முலா லிஸ்ட்டில் ‘சத்தியம் நீயே தருமத்தாயே’ என்று கம்பீரமாக பாட்டுப்பாடி, தனி ராஜபாட்டை போட்டுக்கொண்டிருக்கும். அதுதான் எம்ஜிஆர் பார்முலா; அதுதான் டபுள் ஆக்டிங் பார்முலா!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x