Published : 16 Jan 2020 10:08 AM
Last Updated : 16 Jan 2020 10:08 AM

’ஹாய்’ ஜெய்சங்கரின் ‘இரவும் பகலும்’; இந்த பொங்கலுடன் 55 வருடங்கள்! 

வி.ராம்ஜி

ஜெய்சங்கரின் முதல் படம் ‘இரவும் பகலும்’. இந்தத் திரைப்படம் ஓர் பொங்கல் திருநாளுக்கு வெளியானது. முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனம் ஈர்த்தார் ஜெய்சங்கர். பின்னர், அடுத்தடுத்த படங்களால், தொடர்ந்து முன்னுக்கு வந்தார். ’மக்கள் கலைஞர்’ என்று மக்களாலும் ரசிகர்களாலும் போற்றப்பட்டார்.


எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினிகணேசன், எஸ்.எஸ்.ராஜேந்திரன், முத்துராமன், ரவிச்சந்திரன் என்று பலரும் சினிமாவில் சக்கைப்போடு போட்டுக்கொண்டிருந்த காலம் அது. இந்த சமயத்தில் ஜெய்சங்கர், டிகிரி முடித்துவிட்டு, சினிமாவில் நடிக்கும் ஆசையுடன் கம்பெனி கம்பெனியாக வாய்ப்புக் கேட்டுக் கொண்டிருந்தார். ஆனால் சட்டென்று கிடைத்தபாட்டைக் காணோம்.


நாடகங்களில் ஜெய்சங்கரின் நடிப்பு ரசிக்கப்பட்டது. ஆனாலும் எந்த இயக்குநரும் தயாரிப்பாளரும் வாய்ப்பு மட்டும் தந்துவிடவில்லை. அந்தசமயத்தில்தான் சிட்டாடல் எனும் புகழ்மிக்க நிறுவனத்துடன் இணைந்து இயக்குநர் ஜோஸப் தளியத், தன்னுடைய படத்துக்கு புதுமுகம் ஒன்றைத் தேடிக்கொண்டிருந்தார்.


அந்த சமயத்தில் நாடகத்தில் ஜெய்சங்கரின் நடிப்பைப் பார்த்துவிட்டு, ஜோஸப் தளியத் ஜெய்சங்கரைப் பார்த்ததுமே முடிவு செய்துவிட்டார், தன் ஹீரோ இவர்தான் என்று!


சிட்டாடல் நிறுவனத்தின் ‘இரவும் பகலும்’ படத்துக்கு எதிர்பார்ப்பு இருந்தது. பொங்கல் திருநாளன்று வெளியானது. ஜெய்சங்கர் நாயகனாகவும் வசந்தா நாயகியாகவும் அசோகன் இன்னொரு முக்கியப் பாத்திரத்திலும் நடித்தார்கள். ‘இரவும் பகலும்’ என்கிற டைட்டிலே கவனம் ஈர்த்தது. இரவும் என்பதற்கு வரும் ‘ம்’ புள்ளியில் சந்திரனும் பகலும் என்பதற்கு வரும் ‘ம்’ புள்ளியில் சூரியனும் இடம்பெற்ற டிசைன் ரசிக்கப்பட்டது.
‘இரவும் வரும் பகலும் வரும்’ பாடலும் ‘அப்படிப் பொறந்தவனும் சுமந்தவனும் இறந்துட்டான்’ என்று பாடல்கள் எல்லாமே ஹிட்டடித்தன.


இதன் பின்னர், இயக்குநர் கே.சங்கரின் ‘பஞ்சவர்ணக்கிளி’ படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதில் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார் ஜெய்சங்கர். இதில் கே.ஆர்.விஜயா நடித்தார். பிறகு ஏவிஎம்மின் ‘குழந்தையும் தெய்வமும்’ திரைப்படம் வெளியானது. மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. ‘அன்புள்ள மான்விழியே’ என்ற பாடல் இன்று வரைக்கும் மறக்கமுடியாத பாடலாக அமைந்திருக்கிறது.


1965ம் ஆண்டு பொங்கல் திருநாளுக்கு வெளியானது ‘இரவும் பகலும்’. இத்தனைக்கும் அந்த வருடத்தில், அதே பொங்கல் திருநாளில், எம்ஜிஆரின் ‘எங்கவீட்டுபிள்ளை’ வெளியானது. மிகப்பெரிய வெற்றி பெற்றது. ஆனாலும் பிற்காலத்தில், எம்ஜிஆருக்கு மிகப்பெரிய ‘டஃப்’கொடுத்தார் ஜெய்சங்கர்.


இன்னொரு விஷயம்... ஜெய்சங்கரால் பல புதிய தயாரிப்பாளர்கள் உருவானார்கள். புதிய இயக்குநர்கள் அறிமுகப்படுத்தப்பட்டார்கள். ’ஹாய்’ என்று எல்லோரிடமும் அன்புடனும் கனிவுடனும் பழகிய ஜெய்சங்கர், தனக்கு வரவேண்டிய பாக்கித் தொகையைக் கூட விட்டுக்கொடுத்தார் என்பதெல்லாம் எல்லோரும் அறிந்த கதைதான்.


65ம் ஆண்டு பொங்கலுக்கு வந்தது ஜெய்சங்கரின் முதல் படமான ‘இரவும் பகலும்’. கிட்டத்தட்ட 55 வருடங்களாகிவிட்டன.
இன்றைக்கும் மக்கள் மனங்களில் ‘ஹாய்’ சொல்லி சிரித்துக்கொண்டிருக்கிறார் ஜெய்சங்கர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x