Published : 15 Jan 2020 03:19 PM
Last Updated : 15 Jan 2020 03:19 PM

கடந்த காலத்தை யோசிப்பதில்லை; எதிர்காலம் என்றுமே சவாலானது: யுவன்

கடந்த காலத்தை யோசிப்பதில்லை. எதிர்காலம் என்றுமே சவாலானது என்று யுவன் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.

'தீனா', 'துள்ளுவதோ இளமை', '7ஜி ரெயின்போ காலனி', 'பில்லா', 'புதுப்பேட்டை', 'பருத்தி வீரன்' என பல்வேறு படங்களுக்கு ஹிட் பாடல்களைக் கொடுத்தவர் யுவன் சங்கர் ராஜா. தன் 15 வயதிலேயே இசைப் பயணத்தைத் தொடங்கியவருக்கு இப்போது 40 வயதாகிறது.

'குயூட்டி பேய்' என்ற விளம்பரப் படத்தின் அறிமுக விழாவில் பங்கேற்க மதுரைக்கு வந்திருந்தார் யுவன். அப்போது 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்குப் பேட்டியளித்துள்ளார். அதில் "இத்தனை ஆண்டுக்காலப் பயணத்தைத் திரும்பிப் பார்க்கும் போது என்ன நினைக்கிறீர்கள்" என்ற கேள்விக்கு யுவன் பதில் அளிக்கையில், "நான் என் வாழ்க்கையைத் திரும்பிப் பார்ப்பதில்லை. அப்படிப் பார்த்தால் அது என்னைப் பதற்றமாக்கிவிடும். கடந்த காலத்தைப் பற்றி யோசிக்க மாட்டேன். அதிலிருந்து கற்ற பாடங்களை மட்டும் எடுத்துக்கொள்வேன். ஆனால் எதிர்காலம் என்றுமே சவாலானது. ஒவ்வொரு நாளும் புதிய கற்றல் அனுபவம்தான். நான் அடுத்த 10 வருடங்களில் எங்கிருப்பேன் என்று கணிக்கும் ஆள் இல்லை. நிகழ்காலத்துக்காக வாழ்பவன். அர்ப்பணிப்புடன், ஆர்வத்துடன் எனது பணியைச் செய்கிறேன்" என்று தெரிவித்துள்ளார் யுவன்.

தற்போது அதிகரித்து வரும் பாடல்கள் கேட்கும் இணையதளங்கள் குறித்து யுவன் கூறுகையில், "ஸ்ட்ரீமிங் தளங்கள் மூலமாக இசைக் கலைஞர்களுக்கு வருவாய் வரும் வரை அது வரம் என்றே கருதுகிறேன். நமது பாடல் எப்படி இருக்கிறது என்பதைக் கண்காணிக்க அது நல்ல வழி.

எவ்வளவு பேர் கேட்டிருக்கிறார்கள், எங்கிருந்து கேட்டிருக்கிறார்கள், எந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் அதிகம் கேட்கிறார்கள் என்பதையெல்லாம் கண்காணிக்க முடியும். ஒரு குறிப்பிட்ட கால அளவில் நமது இசை பரந்த ரசிகர் கூட்டத்தைச் சென்றடையும். ஒரு கட்டத்தில் எல்லோராலும் அதைக் கேட்க முடியும்" என்று தெரிவித்துள்ளார்.

மேலும், "ஆசிய இசையை மக்கள் கூர்ந்து கவனித்து வருகின்றனர். அதில் அவர்கள் ஆர்வத்தை ஈர்க்கும் பாடல் வெளிச்சத்துக்கு வந்துவிடுகிறது. யூடியூபில் அதிகம் கேட்கப்பட்ட பாடலாக ரவுடி பேபி ஆனபோது எனக்கு இது புரிந்தது. கொரிய பாப் இசை என்பது கண்டிப்பாகப் பெரிய துறை தான். அதில் சில பாடல்களை நான் கேட்கிறேன். விரைவில் இந்திய இசையும் அதே அளவு வளரும் என்பதில் நம்பிக்கையாக இருக்கிறேன்" என்றும் தெரிவித்துள்ளார் யுவன்,

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x