Published : 15 Jan 2020 02:13 PM
Last Updated : 15 Jan 2020 02:13 PM

ரஜினி நடிக்க வேண்டிய கதை; பாரதிராஜா பாராட்டு; கதைக்களம் மீதான நம்பிக்கை: 'ஞானச்செருக்கு' இயக்குநரின் பகிர்வு

'ஞானச்செருக்கு' இயக்குநர் தரணி ராசேந்திரன் தான் கடந்த வந்த பாதை தொடர்பாக விரிவாகப் பேசியுள்ளார்.

இயக்குநர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ஞானச்செருக்கு’. ஓவியர் வீரசந்தானம், வ.ஐ.ச.ஜெயபாலன், தமிழ்மாறன் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். நீண்ட நாட்களாகத் தயாரிப்பில் இருக்கும் இந்தப் படம் பல்வேறு திரைப்பட விழாக்களில் விருதுகள் வாங்கியுள்ளது. ஆனால், தமிழகத்தில் இன்னும் வெளியாகவில்லை. தற்போது இதன் வெளியீட்டு முயற்சிகள் நடைபெற்று வருகிறது. செல்வராம் மற்றும் வெங்கடேஷ் இந்த படத்தை வெளியிடுகிறார்கள்.

தனது முதல் படம் அனுபவம் குறித்தும், 'ஞானச்செருக்கு' உருவான விதம் குறித்து இயக்குநர் தரணி ராசேந்திரன் கூறியிருப்பதாவது:

பொறியியல் படித்தாலும் சினிமா ஆர்வம் அதிகமாக இருந்ததால் ஒளிப்பதிவு பக்கம் என் கவனம் திரும்பியது. அதன்பிறகு ஒளிப்பதிவு குறித்த டிப்ளமோ கோர்ஸ் முடித்தேன். சினிமாவில் உதவி இயக்குநராகச் சேர்வதில் ஏற்படும் காலதாமதம் தேவையில்லை என நினைத்ததால், நானே குறும்படங்களை எடுக்க ஆரம்பித்து அதன் மூலம் சினிமா கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன்.

ஒரு கட்டத்தில் பெரிய படமெடுக்கும் நம்பிக்கை வந்தபோது ஓவியர் வீரசந்தானத்துடன் நட்பு ஏற்பட்டது. என் கதையின் நாயகனாக நடிக்க வீரசந்தானம் பொருத்தமான தேர்வாக இருந்தார். இந்தக்கதையைப் படமாக எடுப்பது அபத்தமான முயற்சி என்று கூட பலர் கூறினார்கள். முதலில் அரைமணி நேரம் படமாக எடுத்து பார்ப்போம் என்று நினைத்தேன். அதன்பிறகு ஒரு தயாரிப்பாளரிடம் இந்த கதையைக் கூறியபோது, அதை ஒரு பெரிய படமாக எடுக்கும் அளவிற்கு டெவலப் செய்யுங்கள் என்று கூறினார்.

எல்லாவற்றையும் முடித்த நேரத்தில் அவரால் அந்த படத்தை தயாரிக்க முடியாத சூழல் ஏற்பட்டது.. அந்த படத்தில் என்னுடன் இருந்த பலரும் அந்த சமயத்தில் விலகிவிட்டனர். அதன் பின்னர் நண்பர்கள், உறவினர்கள் ஆகியோரின் உதவியுடன் கொஞ்சம் கொஞ்சமாகப் பணம் போட்டு இந்த படத்தை எடுத்து முடித்தோம். இன்னும் சரியாகச் சொல்வதென்றால் க்ரவ்டு பண்டிங் முறையில் தான் இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் இப்படி ஒரு விஷயம் ஓவியர் வீரசந்தானத்துக்கு தெரியாது ஆனால் படப்பிடிப்பு நடத்த தேவையான பணம் இல்லை என்று தெரிய வந்தபோது என்னை அழைத்து திட்டினார். பின்னர் அவரை எப்படியோ சமாதானப்படுத்தி எனது சம்பளம் எனது மாமாவின் பெர்சனல் லோன் ஆகியவற்றைக் கொண்டு மாதாமாதம் கொஞ்சம் கொஞ்சமாகப் படப்பிடிப்பை நடத்தி முடித்தோம்.

ஓவியர் வீரசந்தானம் கூட, தனக்கு ஏதாவது சம்பளம் கொடுக்க வேண்டும் என நினைத்தால் அதையும் இந்த படத்திற்கு பயன்படுத்திக்கொள் என்று சொல்லி விட்டார். இத்தனை கால இடைவெளியில் தாமதமாக இந்த படம் உருவானாலும் கால மாற்றம் இதன் கதையில் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்பது பிளஸ் பாயிண்ட். இந்த படத்தின் டப்பிங் முடிந்த நிலையில் ஓவியர் வீரசந்தானம் மறைவு என்னை ரொம்பவே பாதித்தது..

அதன்பிறகு சிறிய இடைவெளி விழுந்தாலும், மீண்டும் புதிய குழுவினருடன் இந்த படத்தின் வேலைகளை முடித்தேன். இந்த படம் வெளியாவதற்கு முன்பு இந்த படத்தின் மதிப்பு பற்றி வெளியே தெரிய வேண்டும், அதன்பிறகு அதை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்று நினைத்தேன். நான் எடுத்துள்ளது கமர்சியல் படம்தான். ஆனாலும் இந்த படத்தைத் திரைப்பட விழாக்களுக்கு அனுப்பினேன். கிட்டத்தட்ட நாற்பது நாடுகள் சிறந்த படமாக இதை அங்கீகரித்துள்ளன. இந்த படத்திற்கு இதுவரை 7 சர்வதேச விருதுகள் கிடைத்துள்ளன.

இயக்குநர் பாரதிராஜா இந்த படத்தைப் பார்த்துவிட்டு என்னைக் கட்டிப்பிடித்துக் கைகொடுத்துப் பாராட்டினார். பாரதிராஜாவைப் பொருத்தவரை இதுவரை பாலுமகேந்திரா, மகேந்திரன், இளையராஜாவிடம் மட்டுமே கை கொடுத்து வாழ்த்தியுள்ளாராம். அதன் பிறகு என்னிடம் கைகொடுத்து வாழ்த்தியுள்ளதாக மற்றவர்கள் சொன்னபோது எனக்கு இதுவே மிகப்பெரிய விருது பெற்றது போல இருந்தது. எந்த அளவிற்கு இந்த படம் அவர் மனதைப் பாதித்திருந்தால் எனக்கு இப்படிப்பட்ட ஒரு கவுரவத்தை அளித்திருப்பார். அவர் மட்டுமல்ல, எழுத்தாளர்கள், முக்கியமான அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இந்த படத்தைப் பார்த்துப் பாராட்டி உள்ளார்கள்.

இது வெகுஜன படம்தான். இந்த படத்திலும் மூன்று ராப் பாடல்கள் இருக்கின்றன. 80 வயதில் உள்ள கலைஞனின் எழுச்சிதான் இந்த படம். இந்த சமூகம், அதிகார வர்க்கம் ஒரு கலைஞனை எப்படிப் பார்க்கிறது என்பதைத் தான் இது காட்டுகிறது. இந்த படத்தில் ரஜினிகாந்த் நடித்திருந்தால் மிகப்பொருத்தமாக இருந்திருக்கும். அந்த அளவிற்கு முழுக்க முழுக்க கமர்சியல் படம்தான் இது.

குடித்துவிட்டு கூத்தடிப்பவர்களுக்கும் இரட்டை அர்த்த வசனங்களை எதிர்பார்ப்பவர்களுக்கும் இந்த படம் நிச்சயம் பிடிக்காது. காரணம் நான் குப்பை படத்தை எடுக்கவில்லை. படம் பார்க்க வரும் ரசிகர்களை முட்டாளாக்கி அனுப்பக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். நல்ல படத்தைத் திரையிடக் கூடாது என்று எந்த தியேட்டர்காரர்களும் நினைப்பதில்லை. நல்ல படம் என்பதை அவர்களிடம் நாம் தான் சரியாகக் கொண்டு செல்லவேண்டும். அவர்களுக்கும் வியாபாரம், குடும்பம் என்றெல்லாம் இருக்கிறது அல்லவா..? அதனால் அவர்களை நாம் குறை சொல்ல வேண்டியதில்லை.

இவ்வாறு தரணி ராசேந்திரன் தெரிவித்துள்ளார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x