Published : 13 Jan 2020 06:22 PM
Last Updated : 13 Jan 2020 06:22 PM

முதல் பார்வை: அலா வைகுந்தபுரம்லோ

பணக்காரத் தம்பதிக்கும், நடுத்தரத் தம்பதிக்கும் குழந்தை பிறக்கிறது. இரண்டு குழந்தையும் மாறி மாறி வளர, ஒரு கட்டத்தில் அது தெரியவர பிறகு என்னவாகிறது என்பது தான் 'அலா வைகுந்தபுரம்லோ'.

ஜெயராம் - தபு தம்பதியினர், முரளி ஷர்மா - ரோகிணி தம்பதியினர் இருவருக்கும் ஒரே நாளில் குழந்தை பிறக்கிறது. பணக்கார முதலாளியான ஜெயராமின் இல்லத்தில்தான் முரளி ஷர்மா பணிபுரிகிறார். இரண்டு தம்பதிக்குமே ஆண் குழந்தை பிறக்கிறது. ஆனால், ஜெயராமுக்குப் பிறந்த குழந்தை இறந்துவிட்டதாக நினைத்த ஈஸ்வரி ராவும், முரளி ஷர்மாவும் குழந்தையை மாற்றி வைக்கிறார்கள். ஒரு கட்டத்தில் குழந்தை உயிருடன் இருப்பது தெரியவர, ஈஸ்வரி ராவ் குழந்தையை மீண்டும் மாற்ற முயற்சிக்கும் போது கோமாவுக்குச் சென்றுவிடுகிறார். ஆக இரண்டு குழந்தைகளும் மாறி வளர்கின்றனர்.

தன் மகன் பணக்காரனாக வளரும் சந்தோஷத்தில், தன்னிடம் வளரும் அல்லு அர்ஜுனை எப்போதும் திட்டிக் கொண்டே இருக்கிறார். ஒரு கட்டத்தில் அல்லு அர்ஜுனுக்கு உண்மை தெரிய வருகிறது. அதற்குப் பிறகு என்ன நடக்கிறது என்பது தான் 'அலா வைகுந்தபுரம்லோ'

எப்போதுமே தன் படங்களில் குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் அளித்து கமர்ஷியலாக படம் இயக்குவார் த்ரிவிக்ரம். அதை இந்தப் படத்திலும் கையாண்டுள்ளார். இந்தக் காட்சி இப்படித்தான் நடக்கும் என நினைப்பது எல்லாம் நடக்கிறது. ஆனால், அதில் கொஞ்சம் வித்தியாசம் காட்டியுள்ளார். அதுதான் படத்தோட ப்ளஸ்.

க்ளைமாஸ் காட்சி கூட டிராமாவாக இருக்குமே என நினைத்தால் அது தவறு. அதிலும் கூட முதல் காட்சியில் முரளி ஷர்மா நினைக்கும் வசனத்தை வைத்தே, அவருக்குப் பதிலடி கொடுத்திருக்கும் விதம் அற்புதம். சண்டைக் காட்சிகள், பாடல்கள், காட்சியமைப்புகள் என அனைத்திலுமே கலர்ஃபுல்லாக அனைவரும் ரசிக்கும் விதத்தில் காட்சிப்படுத்தி அப்ளாஸ் அள்ளியிருக்கிறார் த்ரிவிக்ரம். குடும்பத்தின் முக்கியத்துவம், பெண்களுக்கான மதிப்பு, சொந்தங்கள் எவ்வளவு முக்கியம் என்பதையும் இயல்பான ரொம்பவே சுவாரசியமான வசனங்கள் மூலம் சொல்லியிருக்கிறார்.

தனது ஸ்பெஷல் என்ன என்பதை உணர்ந்து, அதற்கான கதையைத் தேர்வு செய்து நடித்துள்ளார் அல்லு அர்ஜுன். டான்ஸ், சண்டைக் காட்சிகள், காமெடி, சென்டிமென்ட் என அனைத்திலுமே கச்சிதமாகப் பொருந்தியுள்ளார். அதே வேளையில் ரசிகர்கள் தன்னிடம் என்ன எதிர்பார்ப்பார்கள் என்பதை இடைவேளைக்குப் பின்பு வரும் ஒரு மீட்டிங்கில் இவருடைய நடனம் மற்றும் நடிப்பு அதகளம். இரண்டு ஆண்டு இடைவெளிக்குப் பின்பு வரும் போது எப்படி தன் படம் இருக்க வேண்டும் என்பதை த்ரிவிக்ரமும் இவரும் உட்கார்ந்து பேசி சரியாகக் கொடுத்துள்ளார்கள்.

படத்தின் இரண்டாவது ஹீரோ என்றால் அது முரளி ஷர்மா தான். காலை இழுத்து இழுத்து நடந்து கொண்டே, மனிதர் பேசும் வசனம் கச்சிதம். பணக்கார வீட்டில் வளரும் தன் மகனைப் பார்த்து சந்தோஷப்படுவது, தன்னிடம் வளரும் அல்லு அர்ஜுனை எப்போதும் திட்டிக் கொண்டே இருப்பது என குறைவில்லாமல் நடித்துள்ளார். கண்டிப்பாக அவருடைய திரையுலக வாழ்க்கையில் ஒரு முக்கியமான கதாபாத்திரமாக இது இருக்கும் என்று சொல்லலாம்.

நாயகியாக பூஜா ஹெக்டே. அல்லு அர்ஜுனைக் காதலிப்பது, பாடல்களுக்கு நடனம். இவற்றைத் தாண்டி நடிப்பு பெரிதாக வேலையில்லை. தாத்தா கதாபாத்திரத்தில் சச்சின் கடேகர் சரியாக பொருந்தியிருக்கிறார். க்ளைமாக்ஸ் காட்சியில் ரகசியம் உடைத்துப் பேசும் இடம் அற்புதம்.

இவர்களுடன் ஜெயராம், தபு, சுஷாந்த், நவ்தீப், சமுத்திரக்கனி, சுனில், ரோகிணி, ஈஸ்வரி ராவ், ராஜேந்திர பிரசாத் என ஒரு நட்சத்திர பட்டாளமே இருக்கிறது. இதில் ஜெயராம் - தபு நடிப்புக்கு ஒரே காட்சிதான். அதில் தங்களுடைய அனுபவத்தை வெளிக்காட்டியுள்ளனர்.

இந்தப் படத்தின் களத்துக்குத் தேவையே இல்லாத வில்லன் கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனி. இங்கு கருத்து ரீதியிலான படங்களில் நடித்துவிட்டு, எப்படி இப்படியொரு கேரக்டரில் நடிக்க ஒப்புக் கொண்டார் என்பது அவருக்கே தெரிந்த ரகசியம். அவரது காட்சிகளைத் தூக்கிவிட்டால் கூட கதைக்கு எவ்வித பிரச்சினையுமே இருந்திருக்காது. அதே போல் இங்கு நாயகியாக நடித்து வரும் நிவேதா பெத்துராஜ் எப்படி கூட்டத்தில் ஒருவராக நடிக்க ஒப்புக் கொண்டார் என்பதும் புரியாத புதிர் தான்.

இந்தப் படத்தின் மிகப்பெரிய ப்ளஸ் தமனின் பாடல்கள். அனைத்துப் பாடல்களுமே அற்புதம். அதிலும் அவை படமாக்கப்பட்டுள்ள விதம் அதைவிட அற்புதம். பின்னணி இசை ஒரு சில இடங்களில் சரிவரப் பொருந்தவில்லை என்பது எல்லாம் பாடல்களின் ஹிட்டால் மறக்கடிக்க வைத்துவிடுகிறார். அனைத்துப் பாடல்களுக்கு நடனம் அமைத்தவருக்கும் ஒரு ஸ்பெஷல் பூங்கொத்து.

பி.எஸ்.வினோத் ஒளிப்பதிவு கண்ணுக்குக் குளிர்ச்சியாக இருக்கிறது. முரளி ஷர்மாவின் வீடு, ஜெயராமின் வீடு என இரண்டுக்குமே வித்தியாசமான கலர் டோன் கொடுத்துள்ளார். ஒரு படத்தில் கலை இயக்குநர், ஒளிப்பதிவாளர், ஆடை வடிவமைப்பாளர் என அனைத்துமே சரியாக அமைந்துவிட்டால் அது காட்சிகளில் தெரியும். அதற்கு இந்தப் படம் ஒரு உதாரணம்.

இந்தப் படத்தில் இருக்கும் பிரச்சினை படத்தின் நீளம். ரொம்பவே போரடிக்காமல் காமெடி, வில்லனே இல்லாமல் ஹீரோவுக்கான பில்டப் காட்சிகள் என கதை நகர்கிறது. கடைசி அரைமணி நேரம் சென்டிமென்ட் காட்சிகளுக்குள் கதை நகரும் போது தான் படத்தின் நீளத்தை உணர முடிகிறது. படம் முடிந்து வெளியே வந்தவுடன், முதல் பாதி, இரண்டாம் பாதி என இரண்டிலுமே இந்தக் காட்சிகள் எல்லாம் கதைக்கு ஏன் எனத் தோன்றுகிறது. அந்த அளவுக்குத் தேவையில்லாத காட்சிகள் உள்ளன. அதேபோல் இப்போ பாட்டு வரும் பாரேன் என்று நினைத்தால் பாட்டு வருகிறது. ஆனால், ஹிட் பாடல் அதை மறக்க வைக்கிறது.

ஆந்திர மக்களுக்கு இந்தப் பொங்கல் பண்டிகைக்கான ஒரு கொண்டாட்டம் தான் இந்தப் படம். 'அத்தாரண்டிகி தாரேதி' படத்துக்குப் பிறகு த்ரிவிக்ரம் தனது எழுத்து திறமையைக் காட்டியுள்ள படம் 'அலா வைகுந்தபுரம்லோ'. படத்தின் நீளத்தைப் பெரிதாகக் கருதுவதில்லை. எனக்கு போரடிக்காமல் இருந்தால் போதும் என்று நினைப்பவர்கள் கண்டிப்பாக இந்தப் படத்துக்கு விசிட் அடிக்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x