Published : 10 Jan 2020 07:05 AM
Last Updated : 10 Jan 2020 07:05 AM

திரை விமர்சனம் - தர்பார்

மும்பை நகரத்தின் சமூக விரோத அழுக்குகளைக் கழுவிச் சுத்தம் செய்ய அனுப்பப்படும் ஒரு காவல் ஆணை யரின் அதிரடிகளும் அதனால் அவர் சந்திக்கும் இழப்புகளும் பழி வாங்கலும்தான் ‘தர்பார்’ கதை.

டெல்லியின் உத்தரவை ஏற்று மும்பை மாநகரின் காவல் ஆணையராகப் பொறுப்பேற் கிறார் ஆதித்யா அருணாசலம் (ரஜினிகாந்த்). அங்கே பெண் களையும் சிறுமிகளையும் கடத்தி பாலியல் சந்தையில் விற்றும், போதை பொருள் சந்தைக்கு நிழலாக இருந்தும் மும்பையை சீரழித்துவரும் அஜய் மல்கோத் ராவை (பிரதிக் பப்பர்) கைது செய்து, அவருக்கு ஆயுள் தண்டனை பெற்றுக் கொடுக்கிறார் ஆதித்யா. ஆனால், சிறையில் ஆள் மாறாட்டம் செய்து வெளிநாட்டில் உல்லாசமாக வாழ்கிறார் அஜய். இதை அறிந்து கொதித்துப் போகும் ஆதித்யா அஜய் மல்கோத்ராவை இந்தியா கொண்டு வர என்ன செய்தார்? அதைத் தொடர்ந்து அவருக்கு ஏற்பட்ட இழப்புகள் என்ன? அவற்றிலிருந்து மீண்டு வந்து மும்பையை ‘கிளீன் சிட்டி’ ஆக அவர் மாற்றினாரா? இல்லையா என்பதைப் பரபரப் பும் கலகலப்பும் கலந்த திரைக் கதையாக விரித்துச் சொல்கிறது ‘தர்பார்’.

ரஜினியை எப்படிக் காட்டினால், அவருடைய ரசிகர்கள் விரும்பு வார்கள் என்பதை மனதில் நிறுத் திக்கொண்டு, ஒரு கொண்டாட்ட மான, செண்டிமென்ட், போலீஸ் படம் கொடுக்க நினைத்திருக்கிறார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ். ரசிகர்களைத் திருப்திப்படுத்தும் அதேநேரம், தன்னுடைய முத் திரைகளையும் ஆங்காங்கே பதித் துக் காட்டுவதில் இயக்குநருக்கு வெற்றி.

இரண்டே முக்கால் மணிநேரப் படம் முழுவதுமே நீக்கமற நிறைந் திருக்கிறார் ரஜினி.

‘லிங்கா’ தோல்விக்குப் பிறகு ரஜினியை இளமைத் துடிப்புடன் காட்டிய படங்களில் தர்பாருக்கே முதலிடம் கொடுக்கலாம். அங் கொன்றும் இங்கொன்றுமாக நரையோடிய ’ஹேர் ஸ்டைல்’, வண்ணமயமான நவீன ஆடைகள், முதுமைக்கும் இளமைக்கும் இடை யில் அல்லாடும் ஒரு நடுத்தர வயதுக்காரருக்கான ஒப்பனை என ரஜினியின் தோற்றத்தில் துல் லியமாக கவனம் செலுத்தியிருக் கிறார்கள். ரஜினியும் வயசுக்கு மீறிய எனர்ஜியை காட்டி வியக்க வைத்திருக்கிறார். குறிப்பாக, ஆக்‌ஷன் காட்சிகளில்!

தந்தை மகள் இடையிலான உறவுப் பிணைப்பு, படத்தின் முக்கிய இழைகளில் ஒன்றாகக் கவர்கிறது. மகள் வள்ளியின் கதாபாத்திர வார்ப்பும் அதை ஏற்று நடித்திருக்கும் நிவேதிதா தாமஸின் பங்களிப்பும் தர்பாரில் மற்றொரு முக்கிய தூண். ‘லில்லி’ என்ற பாத்திரத்தில் வரும் நயன்தாராவை எப்படியாவது தந்தைக்கு மணம் முடித்து வைத்துவிட வேண்டும் என நிவேதிதா துடிக்கிற துடிப்பும், அதற்காக ‘லில்லியை கரெக்ட் பண்ணுங்கப்பா’ என்று சொல் வதும், அப்பாவுக்காகத் தனது ஸ்மார்ட் போனில் ஒரு வீடி யோவை விட்டுச் செல்வதுமாக மசாலா படத்தில் பாந்தமான செண்டிமென்ட் காட்டியிருக்கிறார் நிவேதிதா தாமஸ்.

அந்தக் கதாபாத்திரத்தை வைத்து, விபத்துகளால் நேரும் மூளை பாதிப்பு பற்றி தந்திருக்கும் விழிப்புணர்வு பலருக்கும் புதுசாக இருக்கும்.

ரஜினியை டூயட் பாடலில் காட்டாமல் விட்டதுடன், நாயகி நயன்தாரா தரப்பிலிருந்து அவ ருக்கு வரும் ‘ஒதுங்கிப் போ’ என்ற மிரட்டலும் ரஜினியின் ‘முதுமை’க்கு அருமையாக எடுபட்டிருக்கிறது. ஆனால், நயன்தாரா பாத்திரம் இந்தத் திரைக்கதைக்கு வெறும் காலிப் பாத்திரம். படம் முழு வதும் தன்னை கலாய்த்து அப்ளாஸ் அள்ள யோகிபாபுவை அனுமதித்திருக்கிறார் ரஜினி.

‘நம்புறவனுக்கு வயசுங்கறது ஒரு நம்பர்’, ‘ஒரிஜினலாவே நான் வில்லன்மா’, ‘ஐ யாம் எ பேட் காப்’ என ரஜினிக்கான பஞ்ச் வசனங்கள் அளவாக, அழகாக ஆங்காங்கே பயன்படுத்தப்பட்டிருப்பதை ரசிக் கலாம். நாயகனைப் போலவே, ‘எட்டாவது பக்கத்துல கட்டவெரல் சைஸ் நியூஸ்’ என்று வில்லன் சுனில் ஷெட்டிக்கும் ‘பஞ்ச்’கள் இருந்தாலும் ஒரு பஞ்சரான வில் லனாகத்தான் வருகிறார். ஜெர் மனியிலிருந்து வாங்கி வந்த பட்டாக் கத்தியை அவர் பரிசோதித்துப் பார்க்கும் காட்சிக்கு அடுத்து வரும் காட்சிகளில் அவரை நினைத்து பயம் வராமல் ’புஸ்’ஸென்று போகிறது.

காவல் பணியில் உள்ள கான்ஸ்டபிள் தொடங்கி காவல் ஆணையர் வரை போலீஸாரைக் கொலைசெய்து அவர்கள் அணிந் திருக்கும் பெயர் பொறித்த ‘நேம் பேட்ஜ்’ கொண்டுவந்தால் கொலையானவரின் பதவிக்கு ஏற்ப பணத்தைக் கொட்டிக்கொடுக்கும் வில்லனுக்கான சித்தரிப்பு, நாடு இருக்கிற இருப்பில் ஒரு குரூர மான கற்பனை. அதைத் தவிர்த் திருக்கலாம்.

இதுபோல் தவிர்த்திருக்க வேண் டிய லாஜிக் பிழைகள் எக்குத் தப்பாகப் படத்தில் மலிந்திருக் கின்றன. கமிஷனரை இடமாற் றம் செய்யும் டெல்லி உள்துறை அதிகாரிக்கே ரஜினி சவால் விடுவது, மனித உரிமை ஆணைய அதிகாரியை மிரட்டுவது, இன் டர்போல் செய்ய வேண்டிய வேலையை மும்பையிலிருந்து ரஜினியே செய்வது என படமெங்கும் பூச்சுற்றல்களுக்கு பஞ்சமில்லை.

திருநங்கையரை கவுரவமான குடிமக்களாகக் கொண்டாடத் தொடங்கியிருக்கும் சமூகச் சூழலில் அவர்களைத் திரும்பவும் ‘காசுக்கு கைதட்டி ஆடுபவர் களாக’ சித்தரித்திருப்பது கண்டிக்கத்தக்கது. அதே போல், சிறுவர் சீர்திருத்தப் பள்ளியிலிருந்து சர்வதேச குற்றவாளி உருவாகி வருவான் என்ற இயக்கு நரின் நிறுவுதலை தணிக் கைக் குழு எப்படி அனுமதித்தது என்று புரியவில்லை.

அனிருத்தின் கொண் டாட்டமான இசையும் சந் தோஷ் சிவனின் இளமை துள்ளும் ஒளிப்பதிவும் ரஜினி தர்பாரை இன்னும் ஜோராக தூக்கிப் பிடித்திருக்கின்றன.

ரஜினியை திரையில் ஜொலிக்க விடுவதில் காட்டிய அதே மெனக் கெடலை, லாஜிக் விஷயத் திலும் கொஞ்சம் காட்டியிருந்தால் ‘தர்பார்’ இன்னும் பெரிய ‘மேஜிக்’ ஆக இருந்திருக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x