Published : 08 Jan 2020 09:01 PM
Last Updated : 08 Jan 2020 09:01 PM

ஆஸ்திரேலிய காட்டுத் தீ: ஏமி ஜாக்சன் வித்தியாச வேண்டுகோள்

ஆஸ்திரேலிய காட்டுத் தீ தொடர்பாக, நடிகை ஏமி ஜாக்சன் வித்தியாசமான வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.

கடந்தாண்டு செப்டம்பர் மாதம் முதல் ஆஸ்திரேலியாவில் காட்டுத் தீ பரவி வருகிறது. இதனால் கடுமையான தண்ணீர் பற்றாக்குறையும் நிலவுகிறது. லட்சக்கணக்கான விலங்குகள் ஆஸ்திரேலிய காட்டுத் தீக்குப் பலியானதாகத் தனியார் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மிருகங்களை மனிதர்கள் காப்பாற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன. இவை நெஞ்சை பதற வைப்பதால் திரையுலக பிரபலங்கள் பலரும் ஆஸ்திரேலியா காட்டுத் தீ தொடர்பாக தங்களுடைய கருத்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.

ஆஸ்திரேலியா காட்டுத் தீ தொடர்பாக நடிகை ஏமி ஜாக்சன் தனது இன்ஸ்டாகிராம் பதிவில், "ஆஸ்திரேலியா, நாங்கள் உன்னுடன் இருக்கிறோம். பல மக்கள் தங்கள் உயிரை இழந்துவிட்டனர், ஆயிரக்கணக்கானோர் வீட்டை இழந்துள்ளனர், பல லட்சம் மிருகங்கள் இறந்துவிட்டன. ஒட்டுமொத்த மிருக, தாவர இனங்களே கூட அழிந்து விடும் என்று பயப்படும் அளவுக்கு நிலைமை மோசமாக இருக்கிறது. இது தட்பவெப்ப சூழலில் அவசர நிலை. இது எச்சரிக்கை மணியை அடிக்கவில்லை என்றால் வேறு எது தெரியவைக்கும் என்று எனக்குத் தெரியவில்லை.

நாம் வீடு என்று சொல்லும் இந்த அழகான பூமி நம் பொறுப்பில் இருக்கிறது. நாம் செய்யும் எதுவும் இந்த பூமியை நேரடியாகப் பாதிக்கும். நான் செய்திகளில், இப்படிப் பேரழிவுகளைப் பற்றிப் படிக்கும் போது என் மனம் உடைகிறது. அதே நேரம் என்னால் முடிந்த என் பங்கை (இந்த பூமிக்கு) செய்ய வேண்டும் என்றும் உறுதியாகத் தீர்மானிக்க வைக்கிறது. உங்களாலும் முடியும். தாவரம் சார்ந்த உணவுப் பழக்கத்துக்கோ அல்லது குறைந்த பட்சம் நிறையக் காய்கறிகள், குறைவான மாமிசம் இருக்கும் உணவைச் சாப்பிடுங்கள். புத்திசாலித்தனமாகத் தேர்ந்தெடுங்கள், குறைவாக வாங்குங்கள். நம் பூமியை ஆதரித்து வரும் மக்களுக்கு ஆதரவு கொடுங்கள்" என்று தெரிவித்துள்ளார் ஏமி ஜாக்சன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x