Published : 08 Jan 2020 07:25 PM
Last Updated : 08 Jan 2020 07:25 PM

முதன்முறையாக இரட்டை வேடங்களில் யோகி பாபு

சித்தார்த் நடித்துள்ள 'டக்கர்' படத்தில் முதன்முறையாக இரட்டை வேடங்களில் நடித்துள்ளார் யோகி பாபு.

'அருவம்' படத்தைத் தொடர்ந்து, சித்தார்த் நடிப்பில் அடுத்து வெளிவரவுள்ள படம் 'டக்கர்'. 'கப்பல்' இயக்குநர் கார்த்திக் ஜி.கிரிஷ் இயக்கியுள்ள இந்தப் படத்தை ஃபேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

பிப்ரவரியில் வெளியாகவுள்ள இந்தப் படத்தில் திவ்யான்ஷா கெளசிக் நாயகியாக நடித்துள்ளார். இவர் தெலுங்கில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற 'மஜிலி' படத்தில் நடித்தவர். மேலும், அபிமன்யூ சிங், யோகி பாபு, முனீஷ்காந்த், ஆர்.ஜே.விக்னேஷ் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தில் முதன்முறையாக அப்பா - மகன் என இரட்டைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் யோகி பாபு. பல படங்களில் நடித்திருந்தாலும், இதுவரை எந்தவொரு படத்திலுமே அவர் இரட்டை வேடங்களில் நடித்ததில்லை. ஆகையால், இதில் இடம் பெற்றுள்ள காமெடிக் காட்சிகளும் ரசிகர்களை மகிழ்விக்கும் என்ற நம்பிக்கை தெரிவிக்கிறது படக்குழு.

அதிரடி சண்டைக் காட்சிகள் நிரம்பிய காதல் படமாக 'டக்கர்' உருவாகியுள்ளது. நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு வாஞ்சிநாதன் முருகேசன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படம் தவிர்த்து கார்த்திக் ஜி.கிரிஷ் இயக்கத்தில் சித்தார்த் நடித்துள்ள 'சைத்தான் கா பச்சா' படத்தின் படப்பிடிப்பும் முடிவடைந்துள்ளது. இதனை சித்தார்த் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x