Published : 08 Jan 2020 03:30 PM
Last Updated : 08 Jan 2020 03:30 PM

இரண்டு ரசிகர்களின் இசைச் சண்டையில் அறிமுகமானவர்: ஹாரிஸ் ஜெயராஜுக்கு ரசிகரின் மனம் திறந்த மடல்

அன்புள்ள ஹாரிஸ் ஜெயராஜுக்கு... உங்களின் ‘வசீகரா’ பாடலால் வசீகரிக்கப்பட்டு, மஜ்னுவாக மனதுக்குள் கோட்டை எழுப்பி, உங்களைப் பற்றிய செய்திகளை கூகுள் கூகுள் பண்ணிக்கொண்டே, காலை தலைவாரும் போதும் சரி, மாலை தலைசாயும் போதும் சரி... உங்கள் பாடல்களையே கேட்டு தினம் பொழுதைக் கழிக்கும் சாதாரண விசிறி எழுதிக்கொள்வது...

முதலில் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!

70-களில் பிறந்து, 80-களில் இசையை ரசிக்கத் தொடங்கியவர்களுக்கு, இளையராஜாதான் இசையின் கடவுளாக இருந்தார். 80-களில் பிறந்து, 90-களில் இசையை ரசிக்கத் தொடங்கியவர்களுக்கு ஏ.ஆர்.ரகுமான்தான் இசையின் ஊற்றாக இருந்தார். 90-களில் பிறந்து, 2000-களில் இசையை ரசிக்கத் தொடங்கிய எங்களுக்கு, ராஜாவின் இசையோ அப்பா, சித்தப்பா காலத்து இசை. ரகுமானின் இசையோ அக்கா, அண்ணன்களின் காலத்து இசை. இப்படி முக்காலத்தின் இசையைக் கேட்டுக் கொண்டிருந்த எங்களுக்கு, எங்கள் காலத்தின் இசை எது என நாங்கள் தேடிக் கொண்டிருந்த போதுதான், நீங்கள் உங்கள் ‘மின்னலே’ மூலமாக எங்களையும், எங்கள் காதுகளையும் வசீகரித்தீர்கள், உங்களின் ‘வசீகரா’ பாடலின் மூலமாக.

இப்போதும்கூட உங்களின் பாடல்களை யாராவது கேட்டாலோ, காலர் ட்யூனாகவோ அல்லது ரிங் டோனாகவோ வைத்திருப்பவர்களைக் கண்டால், ‘நீங்கள் ஹாரிஸின் விசிறியா?’ எனக் கேட்டு, விசிறிகள் இருவரும் உங்களிசையில் ‘அந்தப் பாடல் இப்படி, இந்தப் பாடல் அப்படி’ என சில மணி நேரங்கள் சிலாகித்துக் கிடப்பதும் உண்டு.

2001-ம் ஆண்டு நாங்கள் எல்லோரும் பக்கத்து வீட்டு சித்தப்பாவின் நிச்சயதார்த்தத்துக்காக சொந்த பந்தங்களோடு இரண்டு டூரிஸ்ட் வேன்களில் போய்க் கொண்டிருந்தோம். அப்போது இரண்டு டிரைவர்களும் டீ குடிப்பதற்காக ஓரிடத்தில் வேனை நிறுத்தினர். எங்கள் வேன் டிரைவர் மட்டும் வேகமாக டீ குடித்துவிட்டு, இன்னொரு வேனில் இருந்து ஒரு பாட்டு கேசட்டை எடுத்துக்கொண்டு வந்துவிட்டார். இதை அறிந்துகொண்ட அந்த டிரைவரோ, எங்கள் டிரைவரை விடாமல் பின்தொடர்ந்து வந்து, அந்த கேசட்டை கேட்டு ஒரு சம்பிரதாய சண்டை போட்டார்.

அவரிடம், ‘என்ன பிரச்சினை?’ எனக் கேட்டார் சித்தப்பா. ‘அது ஒண்ணும் இல்ல சார். புதுசா ‘மின்னலே’னு ஒரு படம். அதுல ஹாரிஸ்னு ஒருத்தர் மியூசிக் போட்டுகிறாப்பல. பாட்டு எல்லாம் செமயா கீது. கேட்டுட்டு குடுக்குறேன், குடுடா’னா... குடுக்க மாட்றான். அதான் சண்டை’ என்றார் டிரைவர்.

இப்படி இரண்டு ரசிகர்களின் இசைச் சண்டையில் எனக்கு அறிமுகமானவர்தான் நீங்கள். அதன்பிறகு தினசரிகளில் வரும் சினிமாப் படங்களின் விளம்பரங்களில், எது எல்லாம் நீங்கள் இசையமைத்த படங்கள் என்று தேடித்தேடி ஒரு டைரியில் குறித்துக்கொண்டு, உங்கள் படங்களின் பாடல் கேசட்டுகளை வாங்கி வாங்கிக் குவித்தது... சிடிகளை தேய்ந்துபோகச் செய்தது எல்லாம் ஒரு காலம்.

ஏ.ஆர்.ரகுமான் பாலிவுட்டில் கவனம் செலுத்த ஆரம்பித்த காலத்தில், யுவனும் ஹாரிஸும் தமிழ் இசையை ஒட்டுமொத்தமாக ஏலம் எடுத்துக் கொண்டனர் என்றுகூடச் சொல்லலாம். யுவன் ஒரு பக்கம் தன் அதிரடி ஆட்டத்தின் மூலம் பவுண்டரிகளாக விளாசினார் என்றால், ஹாரிஸும் தன் மட்டையில் மாட்டிய பந்துகளில் மெலடிகளை சிக்ஸர்களாகவும், பிஜிஎம்களை பவுண்டரிகளாகவும், அவ்வப்போது மாட்டும் குத்துப்பாட்டு பந்துகளை மைதானத்துக்கு வெளியே விரட்டி விரட்டி ரசிகர்களை குஷிப்படுத்துகிறார்.

ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம். ஹாரிஸ் இதில் எந்த ரகம்?

நாம் ஒரு சூப்பர் மார்க்கெட்டுக்குள் நுழைவதைப் போலத்தான் ஹாரிஸின் இசை மார்க்கெட்டுக்குள் நுழைவதும். அதன் ஒரு ஒரு அலமாரியில் ‘வசீகரா’, ‘ஒன்றா ரெண்டா’, ‘அனல் மேலே பனித்துளி’ என அக்மார்க் பனித்துளி மெலடிகள் என்றால், இன்னொரு பக்கம் ‘உயிரின் உயிரே’, ‘முதல் மழை’, ‘விழி மூடி யோசித்தால்’, ‘என்னமோ ஏதோ’ என இரண்டாவது ரகத்தையும், ‘திருநெல்வேலி அல்வாடா’, ‘ரங்கு ரங்கம்மா’ என மூன்றாவது ரகத்தையும், ‘என் அஞ்சல மச்சான் அவ’, ‘வேணாம் மச்சா வேணாம்’, ‘டங்கா மாரி ஊதாரி’, ‘ஆத்தங்க ஓரத்தில்’ என நான்காவது ரகத்தையும், ‘ஹசிலி பிசிலி’, ‘சம்பா சம்பாலே’, ‘ரண்டக்க ரண்டக்க’, ‘ஹலனா’ என புரியாத வார்த்தைகளை வைத்து ஐந்தாவது ரகமென மாய ஜாலமே நடத்தியிருப்பார் ஹாரிஸ்.

பாடல்களைப் போலவே அவர் படங்களின் பின்னணி இசையிலும் தெறிக்க விட்டிருப்பார். உதாரணத்திற்கு, ‘காக்க காக்க’ படத்தில் அன்புச்செல்வன் ‘மாயா... மாயா...’ என உருகும் இடங்களாகட்டும்... அதே அன்புச்செல்வன் பாண்டியாவை அடித்து உதைக்கும் இடங்களாகட்டும்... தன் இசையில் மிரட்டியிருப்பார். இதைவிட, ‘அந்நியன்’ படத்தில் அம்பி - நந்தினி என நம்மூர் க்ளாசிக் காதலை உணர்த்தும் இடங்களாகட்டும்... ரெமோ - நந்தினி என மேற்கத்தியக் காதலை உணரும் இடங்களாகட்டும்... அதே அம்பி, அந்நியனாக உருமாறி சமுதாயத்திற்காகப் பொங்கும் இடங்கள் என முப்பரிணாம இசையை மிகச் சரியாகக் கையாண்டிருப்பார் ஹாரிஸ். மேலும், ‘தொட்டி ஜெயா’, ‘கஜினி’, ‘துப்பாக்கி’, ‘அயன்’, ‘என்னை அறிந்தால்’ போன்ற படங்கள், ஹாரிஸின் மிகச்சிறந்த பின்னணி இசைக்கு மிகச்சிறந்த உதாரணங்கள்.

மணிரத்னம் - ஏ.ஆர்.ரகுமான் - வைரமுத்து கூட்டணி சீனியர் மேஜிக் கூட்டணி என்றால், கெளதம் மேனன் - ஹாரிஸ்- தாமரை கூட்டணி ஜூனியர் மேஜிக் கூட்டணி. அத்துடன், பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர், ரகுமானுக்கு அடுத்த சாய்ஸாக நினைத்ததே ஹாரிஸைத்தான். இவர்களின் முதல் கூட்டணியான ‘அந்நியன்’ படத்தை ‘ரண்டக்க ரண்டக்க’ என்று கொண்டாடினர். இரண்டாவது முறையாக ‘நண்பன்’ படத்தில் ‘அஸ்கு லஸ்க’ எனக் கொண்டாடித் தீர்த்தனர் ரசிகர்கள்.
இது மட்டுமல்லாமல், 15 வருடங்களாகப் பாடாமல் ஒதுங்கியிருந்த விஜய்யை, ‘துப்பாக்கி’ படத்தில் ‘கூகுள் கூகுள்’ பாடலைப் பாட வைத்ததன் மூலம், பாடகர் விஜய்யின் இரண்டாவது இன்னிங்ஸை வெற்றிகரமாகத் தொடங்கி வைத்ததும் ஹாரிஸ்தான்.

‘என்னிடத்தில் நீங்கள் முப்பது பாடல்களை ஒரு சிடியில் போட்டுக் கொடுத்தால், அதில் எந்தப் பாடல் ஹாரிஸ் இசையமைத்தது என சரியாகச் சொல்லிவிடுவேன்’ என்றார் கவிஞர் வாலி.

தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட இந்தக் காலத்தில், ஒரு விசயம் எந்த அளவுக்குப் பரவுகிறதோ, அதே அளவுக்கு அதைப் பற்றிய சர்ச்சைகளும் பரப்படுகின்றன என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. இதேபோலத்தான் ஹாரிஸின் காப்பி கட் சர்ச்சைகளும். நீங்கள் சொல்வதைப் போல அவர் காப்பி அடித்திருக்கிறார் என்றே வைத்துக் கொள்வோம். நீங்கள் யாரை சிறந்த இசையமைப்பாளர் என்று நினைக்கிறீர்களோ, அவரைப் பற்றிய காப்பி கட் சர்ச்சைகளும் இணையத்தில் உலவிக் கொண்டிருக்கின்றன. அதற்காக அவர்கள் எல்லோரையும் காப்பி கட் என்று முத்திரை குத்திவிட முடியுமா என்ன?

தமிழக அரசின் கலைமாமணி விருது, ரோட்டரி சங்கத்தின் வாழ்நாள் சாதனையாளர் விருது, இரண்டு எடிசன் விருதுகள் உள்பட இருபதுக்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றிருக்கும் இசையமைப்பாளரைப் பார்த்து, ‘ஹாரிஸ் என்றாலே காப்பி கட்’, ‘அவர் ஒரே ட்யூனை வைத்து ஒன்பது பாடல்கள் போடுவார்’ என்றெல்லாம் விமர்சிப்பது சரியா?

இன்று ஹாரிஸைக் கலாய்க்கும் எல்லோருமே, ஒரு கனமான இரவைக் கடக்கவோ, போகாத பொழுதுகளைப் போக்கவோ அவரின் இசையிடத்தில் தஞ்சமடைந்தவர்கள்தான் என்று சொன்னால், அது மிகையாகாது.

ஹாரிஸ்... நீங்கள் உயிரை உருக்கும் இசையை மீட்ட வேண்டும். உங்கள் கிடாரில் மாட்டி எங்கள் நரம்புகள் அறுந்து போகவேண்டும். அந்த சாக்ஸபோன் அலையில் நாங்கள் அடித்துச்செல்ல வேண்டும். உங்கள் கீபோர்டின் கருப்பு - வெள்ளைக் கட்டைகள் எழுப்பும் சத்தத்தில், எங்கள் சத்தங்கள் அடங்க வேண்டும். உங்களைப் பற்றி அவதூறு பேசிய வாய்களுக்கு, உங்கள் இசை மூலமாகப் பதில் தரவேண்டும். நாங்கள் மீண்டும் போருக்குத் தயாராக வேண்டும் என உங்களின் ஒட்டுமொத்த விசிறிகளின் கோரிக்கைகளை ஒருசேர வைத்து, அடுத்த பட பாடல்களுக்காகக் காத்திருக்கும் ஹாரிஸின் கோடி விசிறிகளில் கடைக்கோடி விசிறி...

- கலசப்பாக்கம் சீனு

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x