Published : 07 Jan 2020 03:54 PM
Last Updated : 07 Jan 2020 03:54 PM

'மூக்குத்தி அம்மன்' அப்டேட்: முக்கியக் கதாபாத்திரத்தில் இந்துஜா

ஆர்ஜே பாலாஜி, நயன்தாரா நடிக்கும் 'மூக்குத்தி அம்மன்' படத்தில் இந்துஜா முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஆர்ஜே பாலாஜி நாயகனாக நடித்து வெளியான ‘எல்.கே.ஜி’ படம், பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தின் கதை, திரைக்கதையைத் தனது நண்பர்களுடன் சேர்ந்து உருவாக்கினார் ஆர்ஜே பாலாஜி. இந்தப் படத்தைத் தயாரித்த வேல்ஸ் ஃபிலிம்ஸ் நிறுவனம், அடுத்த படத்தையும் தங்களுக்கே செய்யுமாறு அவருக்கு அட்வான்ஸ் கொடுத்தது. எனவே, புதிய படத்துக்கான கதையையும் தனது நண்பர்களுடன் சேர்ந்து எழுதிய ஆர்ஜே பாலாஜி, அதில் அவரே நாயகனாக நடித்து, இயக்க முடிவு செய்துள்ளார். அவரோடு இணைந்து என்.ஜே.சரவணனும் இயக்குநர் பொறுப்பைக் கவனிக்கவுள்ளார். இவர்கள் இருவருமே ‘எல்.கே.ஜி.’ படத்தில் முதல்நிலை உதவி இயக்குநர்களாகப் பணியாற்றியவர்கள்.

ஆர்ஜே பாலாஜி இயக்குநராக அறிமுகமாகவுள்ள படத்துக்கு ‘மூக்குத்தி அம்மன்’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. பிரதான பாத்திரத்தில் நயன்தாரா நடிக்கிறார். முழுக்கதையும் அவர் மீது பயணிப்பது போலத் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்துஜா இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நாகர்கோவிலில் நடந்த படப்பிடிப்பில் நடித்த இந்துஜா தனக்கான காட்சிகளில் நடித்து முடித்து சென்னை திரும்பியுள்ளார்.

நயன்தாராவும் இந்துஜாவும் ஏற்கெனவே 'பிகில்' படத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது. 'மூக்குத்தி அம்மன்' படத்தை கோடை விடுமுறைக்கு வெளியிடலாம் என்று படக்குழு முடிவு செய்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x