Published : 07 Jan 2020 12:41 PM
Last Updated : 07 Jan 2020 12:41 PM

'தவமாய் தவமிருந்து' படம் இயக்கிய பின்னணி: சேரன் பேச்சு

நிறைய தகப்பன்களுடைய வாழ்க்கையைப் பார்த்துவிட்டேன். அதனால்தான் 'தவமாய் தவமிருந்து' படம் எடுத்தேன் என்று இயக்குநர் சேரன் பேசினார்.

கவிஞர் இந்துமதி பக்கிரிசாமி எழுதிய ‘மழையில் சிவந்த மருதாணி’ என்கிற ஒலிப் புத்தக வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. மேலும் இந்த விழாவில் இப்படிக்கு செம்பருத்தி ஸ்ரீனிவாசன், என் விரல்கள் விளையாடிய பொழுதுகள், தெக்கத்தி காத்து, என்கிற கவிதைத் தொகுப்புகளும் வெளியிடப்பட்டன.

இயக்குநர் சேரன், தவம் பட இயக்குநர் விஜய் ஆர்.ஆனந்த், இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, பாடகி தஞ்சை சின்னபொண்ணு, முனைவர் கவிஞர் இலக்குவனார் உள்ளிட்ட பலர் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் இயக்குநர் சேரன் பேசியதாவது:

“கவிஞர் இந்துமதி எழுதிய இந்தப் பாடலைக் கேட்கும்போது ரொம்பவே மனதை உலுக்கி விட்டது. மேடை நாகரிகம் கருதி அழாமல் உட்கார்ந்து விட்டேன். எனக்கு அப்படி ஒரு வாழ்க்கை அமையவில்லை என்றாலும் நிறைய தகப்பன்களுடைய வாழ்க்கையைப் பார்த்துவிட்டேன். அதனால்தான் 'தவமாய் தவமிருந்து' படம் எடுத்தேன். இந்த சினிமாவில் தந்தைகளின் பக்கத்தை யாருமே சொல்லவில்லையே என்கிற எண்ணம் எனக்கு நீண்ட நாட்களாகவே இருந்தது.

அம்மா சென்டிமென்ட்டை வைத்து காசு சம்பாதிக்கும் கூட்டமாகவே இந்த சினிமா இருக்கும்போது முதன்முறையாக அப்பாவின் வாழ்க்கையை அப்பட்டமாக சொல்லி இதுதான்டா உன் வாழ்க்கை, போய் உன் வேலையப் பாரு என்று சொல்லி சமூகத்தை மாற்றி விடலாம் என்கிற நோக்கில்தான் அந்தப் படத்தை எடுத்தேன்.. சினிமாவில் கூட்டத்தோடு கூட்டமாக ஓட வேண்டியிருக்கிறது. அப்படி ஓடிக் கொண்டிருக்கும்போதே இதுபோன்ற படங்களை எடுத்து நல்ல விஷயங்களைச் சொல்ல வேண்டிய கட்டாயச் சூழலில்தான் நாங்கள் இருக்கிறோம். அதனால் யாரும் நம்பிக்கையற்றுப் போய்விட வேண்டாம். உங்களுடைய நம்பிக்கையான வார்த்தைகள்தான் எங்களுக்கு வேண்டும்.

இன்றைய சூழலில் தொலைக்காட்சி, செல்போன்கள் எல்லாம் வீட்டிற்குள் நுழைந்து கொண்டு உறவுகளுக்குள் தூரத்தை ஏற்படுத்திவிட்டன. நம் வாழ்க்கையை இங்கே நாம் யாருமே வாழவில்லை. அடுத்தவனுக்குச் சம்பாதித்துக் கொடுப்பதற்காக நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

முன்பெல்லாம் ஒரு திரைப்படம் குறைந்தபட்சம் 50 நாட்கள், 100 நாட்கள் என்று ஓடின. அப்படி அந்தப் படம் ஓடும்போது ஒவ்வொரு நாளும் யாராவது ஒருத்தர் அந்தப் படத்தைப் பற்றி, அதில் உள்ள ஒரு புதுப்புது விஷயங்கள் பற்றி நம்மிடம் பாராட்டியோ விமர்சனம் செய்தோ பேசுவார்கள். அதைக் கேட்பதற்கு நமக்கு இன்னும் ஊக்கமாக இருக்கும். அடுத்தடுத்து இன்னும் நல்ல படங்கள் செய்ய வேண்டிய எண்ணம் தோன்றும். ஆனால் இப்போது ஒரு படத்தின் தலைவிதி வெறும் ஏழு நாட்கள் தான். இந்த ஏழு நாட்களுக்கா இவ்வளவு மெனக்கெட்டு படம் எடுக்கிறோம் என்கிற அலுப்பு தோன்றிவிடுகிறது''.

இவ்வாறு சேரன் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x