Published : 05 Jan 2020 02:58 PM
Last Updated : 05 Jan 2020 02:58 PM

வேறு வேலையே இல்லையா? யாராவது பணம் அளிக்கிறார்களா?: லட்சுமி ராமகிருஷ்ணன் கடும் சாடல்

சாதிய ரீதியிலான பேச்சுக்குக் கிண்டல் அதிகரித்து வருவதால் வீடியோ வடிவில் கடுமையாகச் சாடியுள்ளார் லட்சுமி ராமகிருஷ்ணன்

2019-ம் ஆண்டு நிறைவு பெற இருப்பதை முன்னிட்டு பல்வேறு யூடியூப் சேனல்களில் 'சிறந்த படங்கள்' வரிசையை வீடியோவாக வெளியிட்டு வருகிறார்கள். இதில் முன்னணி யூடியூப் சேனல் ஒன்று, தமிழ்த் திரையுலகின் முக்கிய இயக்குநர்களை வைத்து கலந்துரையாடல் நிகழ்வு ஒன்றை நடத்தியது.

இதில் இயக்குநர்கள் வெற்றிமாறன், கெளதம் மேனன், ரத்னகுமார், செழியன், பார்த்திபன் மற்றும் லட்சுமி ராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டார்கள். அப்போது பலரும் தமிழ்த் திரையுலகம் குறித்த தங்களுடைய பார்வையை வெளிப்படுத்தினார்கள். இதில் சினிமாவுக்குப் பின்னால் இருக்கும் சாதிய ரீதியிலான பிரிவினை குறித்த தன் பார்வையை லட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

இந்தப் பேச்சு இணையத்தில் பெரும் சர்ச்சையை உருவாக்கியது. பலரும் சாதி ரீதியாக லட்சுமி ராமகிருஷ்ணனைக் கடுமையாகக் கிண்டல் செய்யத் தொடங்கினார்கள். அவ்வப்போது அதற்குப் பதிலடிக் கொடுத்து வந்தார். தற்போது கிண்டல் செய்பவர்களுக்குப் பதிலடியாகவும், வீடியோ தன் பேசிய கருத்துகளுக்கான விளக்கமாகவும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் லட்சுமி ராமகிருஷ்ணன் பேசியிருப்பதாவது:

இயக்குநர்களுடனான பேட்டிக்குப் பிறகு எனது சமூகவலைதளப் பக்கத்தில் தேவையற்ற கருத்துக்கள் வந்து கொண்டே இருக்கிறது. அவ்வளவு கிண்டல்கள், உங்களுக்கு எல்லாம் வேறு வேலையே இல்லயா?. வேலை வெட்டி இல்லாமலா உட்கார்ந்திருக்கிறீர்கள். இல்லையென்றால் இதற்கு யாராவது பணம் அளிக்கிறார்களா?

யாருக்கு ஜாதி வெறி? எனக்கா அல்லாது இந்த மாதிரியான கருத்துக்கள் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்களே அவர்களுக்கா? அதில் எத்தனை ஜாதியைக் குறிப்பிட்டு இருக்கிறீர்கள். அத்தனை ஜாதி இருக்கிறது என்பதே எனக்கு இப்போது தான் தெரியும். ஜாதிக்கு மதத்துக்கும் பேதம் தெரியாமல் என்னை வளர்த்திருக்கிறார்கள். ஜாதி வெறி ஊட்டி வளர்க்கவில்லை. கடந்த 2- 3 ஆண்டுகளாகத் தான் இப்படிப் பார்க்கிறேன்.

இயக்குநர் வெற்றிமாறன் இருக்கும் போதே, அவருடைய படங்களில் இருக்கும் வன்முறைக் காட்சிகளைப் பற்றிச் சொன்னேன். 'அசுரன்' படம் பார்க்கவில்லை என்றாலும், பலரும் சொல்லிக் கேள்விப்பட்டதை வைத்து அவர் முன்பே சொன்னேன். அதற்குத் தைரியம் வேண்டும். 'அசுரன்' தலைப்பு பற்றி பேசியது என் அறிவில்லாமைத் தான். ஆனால் அதைக் கேட்டுத் தெரிந்து கொண்டேன். அதில் என்ன தவறு இருக்கிறது. தெரியாததைத் தெரிந்து கொள்வதில் என்ன தவறு இருக்கிறது.

இதுவரை நல்ல படங்கள் மட்டுமே பண்ணியிருக்கேன். குப்பைப் படங்கள் பண்ணவில்லை. நிறைய வன்முறை இருக்கும் போது அது சமுதாயத்தைப் பாதிக்காதா என்று கேட்டேன். அதில் என்ன தவறு இருக்கிறது. அதில் தவறில்லை. சினிமாவில் இருக்கும் ஜாதியைப் பற்றிப் பேசினேன். ஜாதி பிரதிநிதித்துவத்தைப் பற்றிப் பேசவில்லை. பா.இரஞ்சித் படங்கள் பற்றி பேசினேன். ஏனென்றால் அவர் பண்ணுவது ஜாதி பிரதிநிதித்துவம். அதை வைத்து நடக்கும் ஜாதி ரீதியிலான விவாதம் தான் தவறானது என்று சொன்னேன்.

சினிமாவில் இரண்டு ஜாதி மட்டுமே இருக்கிறது. ஒன்று பணம் இருக்கும் பவர்ஃபுல்லான மனிதர்கள், மற்றொன்று பணமின்றி பவர் இல்லாமல் இருக்கும் மனிதர்கள். நான் பவர் இல்லாமல் இருப்பதால் தான் என்னை இவ்வளவு பேர் தாக்கிக் கொண்டிருக்கிறீர்கள். அதே இடத்தில் பவர்ஃபுல்லான பெண் ஒருவர் அமர்ந்திருந்தால் இப்படித் தாக்கியிருக்க மாட்டீர்கள். அப்போது பயந்திருப்பீர்கள்.

என்னைக் கிண்டல் பண்ணுவதை விட்டுவிட்டு நீங்கள் ஏதேனும் சாதிக்கப் பாருங்கள். கண் முழித்துக் கொள்ளுங்கள். கிண்டல் பண்ணலாம், ஆனால் அதுக்கும் பொறுப்பு இருக்க வேண்டும். வெற்றிமாறன் மீது எனக்கு மிகப்பெரிய மரியாதை இருக்கிறது. அவர் மீது இருப்பது பயம் கிடையாது, மரியாதை தான்.

இவ்வாறு லட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x