Published : 04 Jan 2020 11:22 AM
Last Updated : 04 Jan 2020 11:22 AM

70 வயதிலும் எனர்ஜியுடன் இருப்பது எப்படி? - ரஜினி பேச்சு

70 வயதிலும் இந்த அளவுக்கு எனர்ஜியுடன் இருப்பது எப்படி என்பது குறித்து 'தர்பார்' தெலுங்கு பத்திரிகையாளர் சந்திப்பில் ரஜினி குறிப்பிட்டார்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள படம் 'தர்பார்'. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில் நயன்தாரா, சுனில் ஷெட்டி, யோகி பாபு, நிவேதா தாமஸ் உள்ளிட்ட பலர் ரஜினியுடன் நடித்துள்ளனர். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

ஜனவரி 9-ம் தேதி வெளியாகவுள்ள இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா மும்பையிலும், இசை வெளியீட்டு விழா சென்னையிலும் நடைபெற்றது. தற்போது தெலுங்கில் 'தர்பார்' படத்தை விளம்பரப்படுத்தும் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று (ஜனவரி 3) நடைபெற்றது. இதில் ரஜினி, லைகா சுபாஷ்கரன், ஏ.ஆர்.முருகதாஸ், சந்தோஷ் சிவன், சுனில் ஷெட்டி மற்றும் நிவேதா தாமஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்தச் சந்திப்பில் ரஜினி பேசும்போது, "'தர்பார்' போன்ற கதையைப் படமாக்குவது எளிதல்ல. கதை உருவாக்கம், தொழில்நுட்ப விஷயங்கள் ஆகியவை அதற்கு உயிர் கொடுத்துள்ளன. ஒரு படத்தை எடுக்கும்போது சில அற்புதங்கள் நிகழும். உருவாக்கத்தின் போது 'தர்பார்' ஒரு அற்புதம் போல் இருந்தது. இது ஒரு விசேஷமான படமாக இருக்கும். ரசிகர்களுக்கு 'தர்பார்' மிகவும் பிடிக்கும் என்று நான் நம்புகிறேன்.

70 வயதிலும் நாயகனாக நடிக்கிறீர்களே, எப்படி எனர்ஜி வருகிறது என்று பலரும் கேட்கிறார்கள். அதற்கு சில ஆலோசனைகள் சொல்கிறேன். ஆசை, கவலை, உணவு, தூக்கம் ஆகியவற்றைக் குறைத்துக் கொள்ளுங்கள். குறைவாகப் பேசுங்கள். இதைக் கடைப்பிடித்தால் எனர்ஜி எப்போதும் இருக்கும்.

தெலுங்கு ரசிகர்கள் சினிமா பிரியர்கள். தமிழ் ரசிகர்களைப் போலவே தெலுங்கு ரசிகர்களும் கிடைத்திருப்பது என் புண்ணியம். 1976-ல் தெலுங்கில் நான் நடித்த முதல் படம் ‘அந்துலேனி கதா’. அதனைத் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்துள்ளேன். அவை எல்லாம் ரஜினி நடித்ததால் மட்டும் வெற்றியடையவில்லை. அதுபோன்ற நல்ல படங்களில் ரஜினி இருந்தார் என்பதால் வெற்றியடைந்தது” என்று பேசினார் ரஜினி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x