Published : 03 Jan 2020 06:40 PM
Last Updated : 03 Jan 2020 06:40 PM

முதல் பார்வை: அவனே ஸ்ரீமன் நாராயணா

காணாமல் போன புதையலைக் கண்டுபிடித்து, கொள்ளையர் சாம்ராஜ்யத்துக்கு ஹீரோ முடிவு கட்டுவதுதான் ‘அவனே ஸ்ரீமன் நாராயணா’.

ஆபிரா எனும் கொள்ளையர் கூட்டத்தின் தலைவனான ராமராமன், ஒரு புதையலைக் கொள்ளையடிக்க நினைக்கிறான். ஆனால், ஊர் ஊராகச் சென்று நாடகம் போடும் ஒரு குழு, அவனுக்கு முன்பாகவே புதையலைக் கொள்ளையடித்துவிடுகிறது.

அந்த நாடகக் குழுவைச் சேர்ந்த 6 பேர் மட்டும் ஒரு கன்டெய்னர் லாரியுடன் ராமராமனிடம் சிக்குகின்றனர். கன்டெய்னருக்குள் புதையல் இருக்கும் என நினைத்து, அவர்களைக் கொன்றுவிடுகிறான் ராமராமன். ஆனால், கன்டெய்னருக்குள் அந்தப் புதையல் இல்லை.

எங்கு தேடியும் அந்தப் புதையல் கிடைக்காமல் போகவே, நோய்வாய்ப்பட்டுப் படுக்கையில் விழுகிறான் ராமராமன். இதனால், கொள்ளையர் கூட்டத்தின் அடுத்த தலைவன் யார் என்ற கேள்வி எழுகிறது. யார் அந்தப் புதையலைக் கண்டுபிடித்துக் கொண்டு வருகிறாரோ, அவர்தான் அடுத்த தலைவன் என அறிவிக்கிறான் ராமராமன்.

இன்னொரு பக்கம், ராமராமனின் வாரிசுகள் இருவருக்கும் ‘தலைவர்’ பதவிக்கான சண்டை வருகிறது. நாடகக் குழு கொள்ளையடித்த புதையல் என்ன ஆனது? ஹீரோ அந்தப் புதையலை எப்படிக் கண்டுபிடிக்கிறார்? வாரிசுச் சண்டையில் ஜெயித்தது யார்? போன்ற கேள்விகளுக்கு விடை சொல்கிறது மீதிக் கதை.

கன்னடத்தில் கடந்த வருட இறுதியில் வெளியான (டிசம்பர் 27) இந்தப் படம், தெலுங்கு, மலையாளம், தமிழ் ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு இந்த வாரம் வெளியானது. இந்தியில் டப் செய்யப்பட்டு, வருகிற 17-ம் தேதி ரிலீஸாகிறது.

‘பைரேட்ஸ் ஆஃப் த கரீபியன்’ ஹாலிவுட் படத்தின் கதைக்களத்தை மாற்றி, இந்திய சினிமாவுக்கு ஏற்றது போல் அமைந்துள்ளது இந்தப் படத்தின் திரைக்கதை. நாயகன் ரக்‌ஷித் ஷெட்டி, பேச்சு மொழி மற்றும் உடல் மொழி என இரண்டிலுமே ‘பைரேட்ஸ் ஆஃப் த கரீபியன்’ ஜானி டெப்பை ஜெராக்ஸ் எடுத்தது போல் உள்ளார். ஆக்‌ஷன், காமெடி என இரண்டுமே அவருக்குக் கைகொடுத்திருக்கிறது.

டூயட், சில காட்சிகள் என இல்லாமல், கதையை நகர்த்திச் செல்வதற்கு முக்கியப் பங்காற்றியுள்ளார் நாயகியாக நடித்துள்ள ஷன்வி ஸ்ரீவஸ்தவா. கான்ஸ்டபிளாக நடித்துள்ள அச்யுத் குமார், ராமராமனாக நடித்துள்ள மதுசூதன் ராவ், அவருடைய வாரிசுகளாக நடித்துள்ள பாலாஜி மனோகர் மற்றும் ப்ரமோத் ஷெட்டி உள்ளிட்ட அனைவருமே தங்கள் பங்கை சிறப்பாகச் செய்துள்ளனர்.

ஃபேண்டஸி அட்வெஞ்சர் காமெடிப் படத்தை, சுவாரசியமாகவே தந்துள்ளார் இயக்குநர் சச்சின் ரவி. இதுபோன்ற நாயக சாகசப் படங்களில் லாஜிக் பார்க்கத் தேவையில்லை. ஆனால், படத்தின் நீளம்தான் பொறுமையைச் சோதிக்கிறது. படத்தின் முதல் பாதி, சற்றே கொட்டாவி விட வைக்கிறது.

ஆனால், இரண்டாம் பாதி அடுத்தடுத்து சுவாரசியமாக நகர்கிறது. இரண்டாம் பாதியில் இடம் பெறும் பாடலை மட்டும் தவிர்த்திருக்கலாம். முதல் பாதியில் சில காட்சிகளைக் கத்தரித்து, இன்னும் சுவாரசியமாகத் தந்திருந்தால், முழுமையான நிறைவைத் தந்திருக்கும்.

கர்ம் சாவ்லாவின் ஒளிப்பதிவில் மலை, குகை, காடு, மனிதர்கள் என எல்லாமே அழகாக இருக்கிறது. இரவில் ஒளிரும் பாரிஜாதப் பூ, கிளைமாக்ஸ் சண்டைக் காட்சிகள் கூடுதல் அழகு. ஃபேண்டஸி அட்வெஞ்சர் காமெடிப் படத்துக்கான உணர்வை, பார்வையாளனுக்கு அழகாகக் கடத்தியிருக்கிறது அஜ்நீஷ் லோக்நாத்தின் பின்னணி இசை. அந்தந்த உணர்வுக்கேற்ற இசை மூலம், நம்மையும் அந்த மாய உலகத்துக்குள் மிதக்க விட்டுள்ளார்.

சண்டைப் பயிற்சி இயக்குநர் விக்ரம் மூர், மிகச் சிறந்த உழைப்பைத் தந்துள்ளார். சாகச நாயகனுக்கான ஸ்லோமோஷன் ஆக்‌ஷன் காட்சிகள், நடிகனை உச்சத்தில் வைத்துக் கொண்டாடும் ரசிகர்களுக்குத் தீனி போடும் வகையில் அமைந்துள்ளன.

பொதுவாக, டப்பிங் படங்களில் சில வசனங்களை நகைச்சுவைக்காக வேண்டுமென்றே சேர்ப்பார்கள். ஆனால், டப்பிங்கில் லிப் சிங்க் இல்லாமல் அது வெளிப்படையாகத் தெரியும். ஆனால், அந்த மாதிரியான விஷயங்கள் படத்தில் இல்லை என்பது ஆறுதல். வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கும் அளவுக்கு நகைச்சுவைக் காட்சிகள் வடிவமைக்கப்படவில்லை என்றாலும், அவ்வப்போது சிரிக்க வைத்துவிடுகின்றனர்.

இதுதவிர, ராமாயணக் கதை, ஹரி - சிவன் இருவரில் யார் உயர்ந்தவர் போன்ற உள்குத்துகளும் படத்தில் உள்ளன.

எல்லா டப்பிங் படங்களும், டப் செய்யப்படும் மொழியைச் சார்ந்த ரசிகர்களைத் திருப்திப்படுத்துவதில்லை. ஆனால், ஓரளவுக்குத் திருப்திப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது ‘அவனே ஸ்ரீமன் நாராயணா’.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x