Published : 02 Jan 2020 04:32 PM
Last Updated : 02 Jan 2020 04:32 PM

கங்கை அமரனின் ‘கோழி கூவுது’க்கு 38 வயது!   - முதல் படமே 300 நாள் ஓடி ஹிட்

வி.ராம்ஜி


பாடலாசிரியராக ரசிகர்களுக்கு அறிமுகமாகி, இசையமைப்பாளராகவும் வலம் வந்து, பாடகராகவும் ஹிட்டடித்த கங்கை அமரன், முதன்முதலாக இயக்கிய படம் ‘கோழி கூவுது.’

1976ம் ஆண்டு, பஞ்சு அருணாசலம் தயாரித்த ‘அன்னக்கிளி’ மூலமாக இளையராஜா திரையுலகிற்கு வந்தார். அவருடன் கங்கை அமரனும் வந்தார். இசைக்குழுவில் இருந்துகொண்டு பணியாற்றினார்.


77ம் ஆண்டு, பாரதிராஜாவின் ‘16 வயதினிலே’ படம் வெளியானது. இந்தப் படத்தில் இளையராஜா முதன்முதலாகப் பாடினார். அதேபோல், கங்கை அமரன், ‘16 வயதினிலே’ படத்தில் ‘செந்தூரப்பூவே’ பாடலை எழுதி, பாடலாசிரியராக அறிமுகமானார்.


இதன்பின்னர், மலேசியா வாசுதேவனின் படத்துக்கு கங்கை அமரன் இசையமைத்தார். ஆனால் படம் நின்றுபோனது. பிறகு, ‘ஒரு விடுகதை ஒரு தொடர்கதை’ படத்துக்கு இசையமைத்தார் கங்கை அமரன். பின்னர் 79-ம் ஆண்டு, பாக்யராஜ் தன் முதல் படமான ‘சுவரில்லாத சித்திரங்கள்’ படத்தை இயக்கினார். இந்தப் படத்துக்கு கங்கை அமரன் தான் இசையமைத்தார். ‘காதல் வைபோகமே’ பாடல் இன்றைக்கும் மறக்கமுடியாத பாடலாக அமைந்திருக்கிறது.


இந்தநிலையில், கங்கை அமரன் ஒருபக்கம் பாடல்களை எழுதிக்கொண்டிருந்தார். இசையமைத்துக் கொண்டிருந்தார். பாடல்களைப் பாடிக்கொண்டிருந்தார். அந்தசமயத்தில், அடுத்த அவதாரத்தை எடுத்தார். அதுதான் ‘கோழி கூவுது’.


பாவலர் கிரியேஷன்ஸ் தயாரிப்பில், அதாவது சகோதரர் ஆர்.டி.பாஸ்கர் தயாரிப்பில், இளையராஜா இசையில், கங்கை அமரன் இயக்கத்தில் உருவானது ‘கோழி கூவுது’ திரைப்படம்.


சின்னஞ்சிறிய கிராமம். அந்தக் கிராமத்தில், விட்டேத்தியாக இருந்துகொண்டு, கைக்கு ஆட்களையும் சேர்த்துக்கொண்டு, அலப்பறையைக் கொடுத்துக் கொண்டிருப்பார். அவர்தான் பிரபு. அவரின் அக்கா மகள் விஜி. இந்தப் படத்துக்குப் பிறகு அவர் ‘கோழி கூவுது’ விஜி எனப் பேரெடுத்தார்.


அந்த ஊரில், சின்னச்சின்னப் பொருட்களை விற்று வரும் சில்க் ஸ்மிதா, பிரபுவைக் காதலிக்கிறார். ஆனால் பிரபுவோ, அக்கா பொண்ணு விஜி மீது ஆசைப்படுகிறார். அந்த சமயத்தில், அந்த ஊருக்கு சுரேஷ், போஸ்ட்மேனாக வருகிறார். அனாதையான அவர் மீது அன்பு காட்டுகிறார்.
அவரைப் பற்றி அறிந்துகொண்ட பிறகு, விஜி சுரேஷ் மீது காதல்கொள்கிறார். ஊருக்குள் சின்ன சண்டை. இதனால் அந்த ஊரைவிட்டுச் செல்கிறார் பிரபு. அவர் ஊருக்குச் செல்ல காசு தருகிறார் சுரேஷ். இந்தக் காலகட்டத்தில் விஜி - சுரேஷ் காதல் மலர்கிறது.


ஊரைவிட்டுப் போன பிரபு, ராணுவத்தில் சேருகிறார். காசு சேர்க்கிறார். அக்காப்பொண்ணை கல்யாணம் செய்துகொள்ளவேண்டும் என்கிற கனவையும் சேர்த்துக்கொண்டே வருகிறார். பிறகு ஊருக்கு வருகிறார். அக்காவுக்கு சந்தோஷம். தன் பெண்ணைக் கொடுக்க முடிவு செய்கிறார். அதற்கான ஏற்பாடுகள் நடக்கின்றன.


இந்தசமயத்தில், தன் காதலை விட்டுக்கொடுக்க தயாராகிறார் சுரேஷ். இதற்காக ஊரை விட்டுச் செல்ல முடிவெடுக்கும் வேளையில், சில்க் ஸ்மிதா தடுத்து நிறுத்தி, இருவரையும் சேர்த்து வைக்க முடிவெடுக்கிறார். இவையெல்லாம் பிரபுவுக்குத் தெரியவர ஆவேசமாகிறார். இறுதியில், சில்க்ஸ்மிதா, அவர்களின் காதலைப் புரியவைக்கிறார். பிறகு, ஊரையே எதிர்த்து, தன் அக்கா மகளையும் சுரேஷையும் சேர்த்துவைக்கிறார். பிறகு, பிரபுவும் சில்க்கும் இணைகிறார்கள்.


கிராமத்துச் சூழலில், சின்னதான கதையையும் காமெடியையும் காதலையும் வைத்துக்கொண்டு அப்படியொரு திரைக்கதை அமைத்து இயக்கியிருந்தார் கங்கை அமரன். ’சங்கிலி’ படத்தில் அறிமுகமான பிரபுவுக்கு, முதல் வெற்றிப் படம் ‘கோழி கூவுது’தான். ‘பன்னீர் புஷ்பங்கள்’ படத்துக்குப் பிறகு அடுத்தடுத்த படங்கள் வந்தாலும் சுரேஷுக்கு ‘கோழிகூவுது’ மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.


அதேபோல், சில்க் ஸ்மிதாவுக்கு இப்படியொரு கேரக்டர் அமையவே இல்லை. ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தில் அப்படியொரு கேரக்டர் ஆர்ட்டிஸ்டாக நடித்திருந்தாலும், ‘கோழி கூவுது’ படத்தில், சிட்டு கேரக்டரை ரசிகர்கள் மறக்கவே முடியாது.

இதில், நடித்து, பாடி ஆடி நடித்த பிந்துகோஷ்க்கும் கிடைத்தது அருமையான ஆரம்பம்.


தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என்பது போல், அண்ணன் உடையான் படத்துக்கு அஞ்சான் என்றுதான் சொல்லவேண்டும். எவரிடமும் உதவி இயக்குநராக இல்லாமலே, இயக்குநராக பொளந்துகட்டினார் கங்கை அமரன். இசையமைக்கிற படங்களுக்கெல்லாம் பக்கபலமாக இருக்கிற இளையராஜா, இந்தப் படத்திலும் அப்படியொரு உழைப்பைக் கொடுத்திருந்தார்.


டைட்டில் பாடல் தொடங்கி எல்லாப் பாடல்களையும் ஹிட்டாக்கிக் கொடுத்தார் இளையராஜா. ‘அண்ணே அண்ணே’ பாடலும் ‘ஏதோ மோகம்’ பாடலும் படத்தை பட்டிதொட்டிசிட்டி என கொண்டுசென்றன.


டைட்டில் போட்டுக்கொண்டிருக்கும் போது, ‘எங்க அண்ணன்கிட்டயா வம்புக்கு வர்றீங்க? எங்க அண்ணனை யாருன்னு நினைச்சீங்க?’ என்று கங்கை அமரனே சொல்லுவார். ‘இசை இளையராஜா’ என்று டைட்டில் வரும். அதேபோல், ‘இனிமே ஜெயம் உங்க பக்கம்தான்’ என்று சொல்லும்போது, ‘கதை திரைக்கதை வசனம் பாடல்கள் டைரக்‌ஷன் கங்கை அமரன்’ என்று டைட்டில் போடுவார் கங்கை அமரன்.


1982ம் ஆண்டு, டிசம்பர் மாதம் 25ம் தேதி, ‘கோழி கூவுது’ வெளியானது. படம் வெளியான பிறகு பொங்கல் வந்தது. ஆனால் பொங்கலுக்கு படத்தை தியேட்டரில் இருந்து எடுக்கவில்லை. தொடர்ந்து ஹவுஸ்புல்லாக ஓடிக்கொண்டிருந்தது. நூறுநாள், இருநூறுநாள், முந்நூறு நாள் என ஓடி, மிகப்பெரிய சகாப்தம் படைத்தது ‘கோழிகூவுது’.


’கோழி கூவுது’ வெளியாகி, 37 வருடங்கள் முடிந்து, 38 வது வருடம் தொடங்கிவிட்டது. இன்றைக்கும் ‘அண்ணே அண்ணே’ பாட்டையும் ‘ஏதோவொரு மோகம்’ பாடலின் சலசலக்கும் தண்ணீர்ச் சத்தத்தையும், அண்ணனும் தம்பியுமாகச் சேர்ந்து ராஜபாட்டை நடத்தியதையும் மறக்கவே முடியாது.


கங்கை அமரனின் ’கோழி கூவுது’க்கு ஓர் கொக்கரக்கோ வாழ்த்து!


கங்கை அமரனுக்கும் அவரின் மொத்த டீமிற்கும் ‘கோழிகூவுது’க்காக ஸ்பெஷல் பூங்கொத்துகள்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x