Published : 02 Jan 2020 12:13 pm

Updated : 02 Jan 2020 12:13 pm

 

Published : 02 Jan 2020 12:13 PM
Last Updated : 02 Jan 2020 12:13 PM

இன்றைக்கும் மறக்கமுடியாத  ’ஆண்பாவம்’  - ’ஆண்பாவம்’ வெளியாகி 35 வருடங்கள்!  

aanpaavam-35-years

வி.ராம்ஜி


’இப்போ போட்டாலும் பாத்துக்கிட்டே இருக்கலாம்’ என்று தமிழ் சினிமாவில் சில படங்களைப் பட்டியலிடலாம். அந்தப் பட்டியலில் முக்கியமானதொரு இடத்தையும் ரசிகர்களின் மனங்களில் ஆழமான இடத்தையும் பிடித்த, எல்லோருக்கும் பிடித்தமான படமாக இப்போதும் இருக்கிறது ‘ஆண்பாவம்’.


கிராமத்தில் பணத்துக்குப் பஞ்சமில்லாத குடும்பம். அந்தக் குடும்பத்துக்குச் சொந்தமாக ஒரு தியேட்டர். அதை அண்ணனும் தம்பியுமாகப் பார்த்துக்கொள்கிறார்கள். வீட்டில் சமைத்துப் போட அந்த இளைஞர்களுக்கு ஓர் பாட்டி.


பெரியவனுக்குத் திருமணம் செய்து வைக்கலாம் என்று அப்பா நினைக்கிறார். ஊரைச் சொல்லி அனுப்புகிறார். ஆனால் அந்த ஊரில் வேறு ஒருவர் வீட்டுக்குச் சென்று, வேறொரு பெண்ணைப் பார்த்துவிடுகிறான் பெரிய பையன். பார்த்ததும் பூக்கிறது காதல். அந்தப் பெண்ணுக்கும்தான்!


பிறகு அவளை சந்திக்க அடிக்கடி வருகிறான். சந்தித்துக்கொள்கிறார்கள். இதனிடையே, அதேஊரில் உள்ள வாத்தியார், ‘நம்ம பொண்ணைப் பாக்க பையனை அனுப்பறதாச் சொன்னாரே. ஆனா வரலியே’ என்று நினைத்தபடி, அவரிடமே கேட்கிறார்.


பிறகுதான், அப்பாவுக்கு விஷயம் தெரிகிறது. பையனும் தான் பார்த்த பெண்ணை விரும்புவதாகச் சொல்ல, கடுப்பாகிப் போகிறார் அப்பா. இந்தநிலையில், வாத்தியார் வீட்டுக்கே சென்று, விஷயத்தைச் சொல்ல முடிவெடுக்கிறான் மகன். அதன்படியே சொல்ல, வீடே அதிர்ந்துபோகிறது.
துறுதுறுப்புடனும் சுறுசுறுப்புடனும் கலகலப்பாக வளைய வந்துகொண்டிருந்த அந்தப் பெண், துக்கித்துப் போகிறாள். அவமானம் தாங்கமுடியாமல், கிணற்றில் குதித்து உயிரை மாய்த்துக்கொள்ள முயலுகிறாள். ஆனால் பிழைத்துவிடுகிறாள். இங்கேயொரு சோகம்... அவளின் பேச்சு பறிபோகிறது.


‘உன்னாலதான் பேச்சு போச்சு. இந்தக் கல்யாணம் நடந்தே தீரும்’ என பத்திரிகை அடித்து, திருமண வேலை பார்க்கிறார் அப்பா. இதற்கு, உடந்தையாக எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்கிறான் இளைய மகன்.


இந்தநிலையில், காதலியின் அப்பாவுக்கு பையனைப் பிடிக்கவில்லை. வீட்டை விட்டு, ஊரைவிட்டு ஓடிச் சென்று திருமணம் செய்ய அவளும் தயாராக இல்லை. இதில் நொந்து நூடுல்ஸாகிக் கிடக்கிற அவன், தன் தம்பியிடம் புலம்புகிறான்.


அதன்படி, தம்பி ஒரு நாடகம் போடுகிறான். அண்ணனும் அவன் காதலித்த பெண்ணும் விஷம் குடித்து இறந்துவிட்டார்கள் என்று சொல்ல, ஊரே கூடுகிறது. அப்போது நாடகம் தெரிந்துவிட, மொத்த ஊரும் ‘நாடகம்’ ஆடிய இளையவனைத் துரத்துகிறது. அங்கே ஆளுயரம் தாண்டிய சுவரைத் தாண்டினால் தப்பித்துவிடலாம். ஆனால் தாண்டமுடியவில்லை.


அப்போது, அவன் தாண்டுவதற்கு வாத்தியாரின் மகள், கைகொடுக்கிறாள். அங்கே, அண்ணனும் அவனுடைய காதலியும் சேருகிறார்கள். இங்கே... தம்பியும் வாத்தியார் மகளும் சேருகிறார்கள் என்பதுடன் படம் நிறைவுறுகிறது. படம் முடிந்ததும் மொத்தத் தியேட்டர் முகம் முழுக்க சிரிப்புடன், மகிழ்ச்சியாக, படத்தில் இருந்தும் படத்தின் நகைச்சுவையில் இருந்தும் மீள முடியாமலேயே, எழுந்து வர மனமில்லாமலேயே எழுந்துவந்தார்கள்.
பாண்டியன், பாண்டியராஜன், சீதா, ரேவதி, வி.கே.ராமசாமி, பூர்ணம் விஸ்வநாதன், கொல்லங்குடி கருப்பாயி என நடித்திருந்தார்கள். படத்தில், பாண்டியன், பாண்டியராஜன் என இரண்டு ஹீரோக்கள் என்று நினைக்கலாம். ஆனால் வி.கே.ராமசாமியும் ஒரு ஹீரோவாக இருந்து அசத்தியிருப்பார். ’மண்வாசனை’க்குப் பிறகு பாண்டியனுக்கு அப்படியொரு படமாக அமைந்தது ‘ஆண்பாவம்’ திரைப்படம். அவரும் நடிப்பில் பிரமாதப்படுத்தியிருப்பார்.


கொல்லங்குடி கருப்பாயியையும் அவரின் ஸ்லாங்கையும் குறிப்பாக அவரின் பாடலையும் மக்கள் வெகுவாக ரசித்தார்கள். ரேவதியின் ஆகச்சிறந்த நடிப்பை இந்தப் படத்தில் பார்க்கலாம். சுறுசுறு சுல்லாப்புடனும் முதிர்ச்சியான நடிப்புடனும் ரேவதி அசத்தியிருப்பார். முக்கியமாக சீதா. இந்தப் படத்தில்தான் அறிமுகமானார். ஆரம்பப்படம் என்பதே தெரியாமல் ஒவ்வொரு காட்சியிலும் சின்னச்சின்ன எக்ஸ்பிரஷன்ஸையெல்லாம் வெகு அழகாக வெளிப்படுத்தியிருப்பார்.


கிராமத்தில் உள்ள டூரிங் தியேட்டர், ஆற்றைக் கடந்து மாட்டுவண்டியில் வரும் சினிமாப்பெட்டி, தியேட்டர் முதலாளியின் மகன்கள் டிக்கெட் காசை லவட்டுவது, அண்ணனும் தம்பியும் சேர்ந்து சிகரெட் பிடிப்பது, ‘நீ எங்க அம்மாவை கல்யாணம் பண்ணிக்கலாம், நான் உங்க அம்மாவை கல்யாணம் பண்ணக்கூடாதா?’ என்று மகன் அப்பாவிடம் கேட்பது, ஹோட்டல் கடை வைத்திருக்கும் ஜனகராஜின் வியாபார யுக்தி, அவரின் மகன் தவக்களையின் குறும்பு, தவக்களையின் தலையில் சிக்கிக்கொள்ளும் பாத்திரம், ‘முட்டுதா பாருங்க’ காமெடி, பாண்டியராஜன் டேப்ரிக்கார்டர் ரிப்பேர் செய்த காசைக் கேட்பது, அந்தக் காமெடிக்குச் சிரித்துக் கொண்டிருக்கும் போதே, டேப்பில் உள்ள பேட்டரியை நைஸாக எடுத்து, இடுப்பில் வைக்கும்போது தியேட்டரே ரசிகர்களின் சிரிப்பாலும் கைத்தட்டலாலும் அதிரும் காட்சி, அண்ணனின் தட்டை நகர்த்தி சாப்பிடும் தம்பி, பெண் வேடமிட்டுக்கொண்டு, தம்மடிக்கும் குசும்பு... என இன்னும் இன்னுமாக படம் முழுக்கக் காமெடியில் அதகளம் பண்ணியிருப்பார் இயக்குநர் பாண்டியராஜன்.


அதேசமயம், பெண் பார்க்கும் காட்சி, உயர அளவு பார்க்கும் தருணம், ஆற்றங்கரையில் சீதாவைப் பார்க்க வரும் காட்சி, அலார கைக்கடிகாரத்தை சீதாவுக்கு மாட்டிவிடுவது, குடத்துக்குள் இருப்பது, வெந்நீர்க் குளியல், சீயக்காய்ப்பொடிக்குப் பதிலாக மிளகாய்ப்பொடி, சூப்பர் சுப்பராயன் சண்டை, ரேவதியைக் காட்டும்போதே, ‘வந்தாள் மகாலட்சுமி’ என்ற பாடலைப் போட்ட விதம், பின்னால் வாய் பேசமுடியாதவராகப் போகிறார் என்பதைச் சொல்லாமல் சொல்லி உணர்த்துவது போல, ஆரம்பத்திலேயே மெளன பாஷை பேசி, சினிமா விளையாட்டு ஆடுவது, அப்பா பூரணம் விஸ்வநாதன் வரும் வரைக்கும் ஆட்டம்பாட்டத்துடன் இருப்பது, டேப்ரிக்கார்டர் வாங்கி வருவது, அந்த டேப்ரிக்கார்டரையே ஒரு கேரக்டராக, கதைக்கு மிக முக்கியமாக வைத்திருப்பது, ரேவதியுடன் மழலைக்கூட்டம் இருப்பது, சீதா வேண்டிக்கொண்டபடி 108 தேங்காயை பாண்டியன் உடைப்பது, ஜனகராஜ் கடையில் வீடியோ போடுவது, லட்டு, லட்டுக்கு துட்டு காமெடி, அடகுக்கடையில் பாத்திரத்தலையுடன் தவக்களையை நிறுத்தி காசு வாங்குவது என காதல், காமெடி, செண்டிமெண்ட் என திரைக்கதை ட்ரீட்மெண்ட் கொடுத்திருப்பார் இயக்குநர்.


‘பையனோட போட்டோ கொடுத்தீங்க. பொண்ணோட போட்டோ இந்தாங்க’ என்று பூர்ணம் விஸ்வநாதன் சொல்ல, ‘எங்க வீட்ல தேதி காட்ற காலண்டர் இருக்கு. அதுல மகாலட்சுமி படம் மாதிரி இருக்கு. பொண்ணு இப்படித்தாண்டா இருக்கும்னு நான் பையனுக்குக் காட்டிக்கிறேன்’ என வி.கே.ராமசாமி சொல்லுவார்.


பேசும் திறன் இழந்து ஆஸ்பத்திரியில் இருக்கும் ரேவதியைப் பார்க்க, வி.கே.ராமசாமி வருவார். ‘எங்க வீட்ல நிறைய சாமிங்க இருக்கு. ஆனா எந்த சாமியும் பேசுறதே இல்லம்மா. அதேபோல நீ எங்க வீட்டுக்கு வந்துரு. உனக்குப் பேச்சு இல்லேன்னா என்னம்மா?’ என்று நெகிழவைப்பார். இப்படி படம் நெடுக, வசனத்தாலும் மனதை நிறைத்துவிடுவார் பாண்டியராஜன்.


‘ஆண்பாவம்’ படத்தின் முக்கியமான நாயகன்... இளையராஜா. எல்லாப் பாடல்களையும் ஹிட்டாக்கிக் கொடுத்தார் என்பது சாதாரணம். ஒவ்வொரு பாடலையும் ஒவ்வொருவிதமாக்கி, அதில் பல நகாசுகளைப் பண்ணியிருப்பார் என்பதே அசாதாரணம்.
இவற்றையெல்லாம் விட முக்கியமாக, பின்னணி இசையில் வித்தை காட்டியிருப்பார் இளையராஜா. தமிழ் சினிமாவின் ஆகச்சிறந்த இசை என்று சொல்லும் படங்களில், ‘ஆண்பாவம்’ படத்துக்கு தனியிடம் உண்டு.


அப்போதெல்லாம், பாரதிராஜாவிடம் இருந்தும் பாக்யராஜிடம் இருந்தும் உதவி இயக்குநர்கள், இயக்குநர்களாக வருகிறாரென்றால், அவர்களுக்கும் அவர்களின் படங்களுக்கும் எதிர்பார்ப்பு எகிறிவிடும். முதல் படம் ‘கன்னிராசி’க்குப் பிறகு பாண்டியராஜனின் இரண்டாவது படமாக வந்தது ‘ஆண்பாவம்’. பொதுவாகவே, இயக்குநரின் முதல் படம் ஹிட்டாகும். இரண்டாவது படம் அப்படியே மாறி, தோல்விப்படமாகவே கூட அமையும். ஆனால், ‘கன்னிராசி’முதல்பட வெற்றிக்குப் பின்னர், இரண்டாவது படமாக ’ஆண்பாவம்’ வந்தது. மும்மடங்கு வெற்றியைத் தந்தது.


இந்தப் படம் அப்போது அடைந்த வெற்றி, இன்று வரை பேசப்படுகிறது. அந்த அளவுக்கு ‘ஆண்பாவம்’ படமும் கூட, இன்றைக்கும் பேசப்படுகிற படமாக இருக்கிறது. மறக்கமுடியாத படமாக இருக்கிறது.


1985-ம் ஆண்டு, டிசம்பர் மாதம் மாதம் 27-ம் தேதி வெளியானது ‘ஆண்பாவம்’ திரைப்படம். படம் வெளியாகி, 35 வருடங்களாகிவிட்டன. காலத்தால் அழியாத படம் என்று சில படங்களைச் சொல்லுவோம். அந்த வரிசையில், ‘ஆண்பாவம்’ எவர்க்ரீன் இனிமையான படம்!
பாண்டியராஜனுக்கும் அவரின் டீமிற்கும் ஸ்பெஷல் பூங்கொத்துகள்!

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

இன்றைக்கும் மறக்கமுடியாத  ’ஆண்பாவம்’  - ’ஆண்பாவம்’ வெளியாகி 35 வருடங்கள்!ஆண்பாவம்பாண்டியராஜன்சீதாரேவதிபாண்டியன்வி.கே.ராமசாமிஇளையராஜாஅலமு மூவிஸ்ஆண்பாவம் 35 வருடங்கள்கொல்லங்குடி கருப்பாயி

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author