Published : 01 Jan 2020 05:33 PM
Last Updated : 01 Jan 2020 05:33 PM

விடைபெறும் 2019: வசூல் ரீதியில் வெற்றி பெற்ற படங்கள்

2019-ம் ஆண்டில் 209 படங்கள் வெளியாகியிருந்தாலும், சில படங்களே தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் என அனைவருக்கும் லாபம் அளித்தன. வழக்கம் போல், இந்த ஆண்டும் பெரிய நடிகர்களின் படங்களை விட சில சிறிய படங்கள் நல்ல லாபம் அளித்ததாக விநியோகஸ்தர்கள் தெரிவிக்கிறார்கள்.

அவற்றின் பட்டியல் மற்றும் விவரம் இதோ:

(இந்தப் பட்டியல் முழுக்க விநியோகஸ்தர்கள் தரப்பில் பேசி வழங்கப்பட்டதாகும்)

பேட்ட

ரஜினி - கார்த்திக் சுப்புராஜ் - சன் பிக்சர்ஸ் என்ற கூட்டணியில் வெளியான படம். பாடல்கள், டீஸர், ட்ரெய்லர் என பெரும் எதிர்பார்ப்புடன் வெளியானது. சன் பிக்சர்ஸ் நேரடியாகவே ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் மூலம் வெளியிட்டது. இந்தப் படத்தோடு வெளியான 'விஸ்வாசம்' தமிழகத்தில் வசூல் ரீதியாக முதன்மை பெற்றாலும், உலக அளவில் நான்தான் நம்பர் ஓன் என்று மீண்டும் நிரூபித்தார் ரஜினி.

விஸ்வாசம்

அஜித் - சிவா கூட்டணியில் உருவான 4-வது படம். சத்யஜோதி நிறுவனம் தயாரித்த இந்தப் படத்தின் தமிழக உரிமையை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் வாங்கி வெளியிட்டது. முதலிலேயே போடப்பட்ட திரையரங்குகள் ஒப்பந்தம், பிரம்மாண்ட விளம்பரப்படுத்துதல் எனப் பட்டையைக் கிளப்பியது கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ். அதையும் தாண்டி கடைக்கோடி கிராமம் வரை 'கண்ணான கண்ணே' பாடல் ஹிட். குடும்பம் குடும்பமாக மக்கள் திரையரங்குகளுக்குப் படையெடுத்ததால், வசூல் பெரும் சாதனையை நிகழ்த்தியது. இந்தப் படத்தை வாங்கிய தொகையைத் தாண்டி பலரும் வசூல் வந்தது. அந்தத் தொகை பங்கினை இன்னும் தயாரிப்பாளருக்கு அளிக்காதது தொடர்பான சர்ச்சை இப்போது வரை நடந்து கொண்டிருக்கிறது. அந்தளவுக்கு இந்தப் படம் ஹிட்.

தில்லுக்கு துட்டு 2

நாயகனாக தனக்கு சில படங்கள் ஹிட்டாக அமையவில்லையே என்ற வருத்தத்தில் இருந்த சந்தானம், மீண்டும் தன் நண்பர் இயக்குநர் ராம்பாலாவுடன் இணைந்த படம் 'தில்லுக்கு துட்டு 2'. குறைந்த பொருட்செலவில் எடுக்கப்பட்டு, சரியான முறையில் விநியோகம் செய்யப்பட்டதால் நல்ல லாபம் கிடைத்தது என்கிறார்கள் விநியோகஸ்தர்கள்.

எல்.கே.ஜி

அரசியலுக்கு வருகிறார் ஆர்.ஜே.பாலாஜி என்ற விளம்பரம் மூலம் இந்தப் படம் தொடங்கப்பட்டது. அதற்குப் பிறகு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் கிரிக்கெட் வர்ணனைக்கு இடையே அறிமுகப்படுத்தப்பட்டது. சரியாகத் திட்டமிடப்பட்டுக் குறைந்த முதலீட்டில் எடுக்கப்பட்டது. சமகால அரசியலைப் பகடி செய்து வெளியான இந்தப் படம் பலராலும் பாராட்டப்பட்டது. வசூல் ரீதியாக அனைத்துத் தரப்புக்கும் நல்ல லாபத்தைக் கொடுத்தது

நட்பே துணை

'மீசைய முறுக்கு' வெற்றிக்குப் பிறகு ஹிப் ஹாப் ஆதி நாயகனாக நடித்த படம் 'நட்பே துணை'. இளைஞர்கள் மத்தியில் ட்ரெண்டிங்கான பாடல்கள், வசனம் என நல்ல எதிர்பார்ப்பு உண்டானது. அதற்குச் சிறந்த உதாரணம் இந்தப் படத்தின் அனைத்து உரிமைகளையும் ஒட்டுமொத்தமாக ஸ்கிரீன் சீன் நிறுவனம் கைப்பற்றியது. எதிர்பார்த்ததை விட நல்ல லாபத்தையும் கொடுத்தது.

காஞ்சனா 3

'காஞ்சனா' படங்களின் வரிசையில் அடுத்த பாகம். ட்ரெய்லர், போஸ்டர் எல்லாம் பெரிதாக இணையத்தில் ட்ரெண்டாகவில்லை என்றாலும் படமோ மாபெரும் வசூல் சாதனையை நிகழ்த்தியது. விநியோகஸ்தர்கள் பலருக்குமே இது ஆச்சரியத்தை அளித்தது. முதல் 2 பாகங்களின் வெற்றி, இந்தப் பாகத்துக்கான வெற்றிக்குக் காரணம். முன்னணி நடிகர்களின் படங்களுக்கு நிகரான வசூல் இந்தப் படம். ஆனாலும், நேரடி வெளியீடு என்பதால் இந்தப் படத்தின் வசூல் என்ன என்பதைக் கணிக்க முடியாது என்கிறார்கள்.

கொலைகாரன்

த்ரில்லர் வகை படங்கள் எப்போதுமே சரியான முறையில் சொல்லப்பட்டால் வரவேற்பைப் பெறும் என்பதற்கு இந்தப் படம் ஒரு உதாரணம். 'பாபநாசம்' பாணியில் கதைக்களம் என்றாலும், சரியான கதாபாத்திரங்கள் தேர்வு, பொருட்செலவு, விளம்பரம், விநியோகம் என வெற்றி வரிசையில் விஜய் ஆண்டனியின் 'கொலைகாரன்' தன்னை நிலை நிறுத்திக் கொண்டது.

கோமாளி

வித்தியாசமான போஸ்டர் டிசைன் மூலம் முதல் எதிர்பார்ப்பு உண்டானது. பின்பு பாடல்கள் வரவேற்பு, ட்ரெய்லரில் ஏற்பட்ட வசனத்தால் சர்ச்சை என அனைத்துமே இந்தப் படத்துக்கு உதவியது. படத்தின் காட்சியமைப்புகள், வசனங்கள் என சமகாலத்தில் எப்படியிருக்கிறோம் என்பதை மையப்படுத்தியே இருந்ததால் மக்களிடையே பெரும் வரவேற்பு. அதிலும், இந்தக் கதை என்னோடது என வழக்குப் போட்டுக் கூடுதல் விளம்பரத்தையும் அளிக்கத் தவறவில்லை. ஜெயம் ரவியின் படங்களில் அதிக வசூலை ஈட்டிய படம் என்ற சாதனையைப் புரிந்தது இந்த 'கோமாளி'

நம்ம வீட்டுப் பிள்ளை

'மெரினா', 'கேடி பில்லா கில்லாடி ரங்கா' படத்துக்குப் பிறகு சிவகார்த்திகேயன் - பாண்டிராஜ் இணைந்து பண்ணிய படம். 'கடைக்குட்டி சிங்கம்' வெற்றியால் அதே பாணியில் ஒரு படத்தை உருவாக்கினார்கள். இந்தப் படம் 'கடைக்குட்டி சிங்கம்' அளவுக்குப் பிரம்மாண்ட வெற்றி இல்லாவிட்டாலும், வெற்றி பெற்றது. 'Mr.லோக்கல்' தோல்வியால் துவண்டிருந்த சிவகார்த்திகேயனுக்கு தெம்பை அளித்தது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனத்தின் மூலம் வெளியிட்டதால், இதன் வசூல் நிலவரங்கள் யாருக்கும் தெரியவில்லை.

அசுரன்

வெற்றிமாறன் - தனுஷ் இணை எப்போதுமே ஏமாற்றாது என மீண்டும் நிரூபித்த படம். வெக்கை நாவலை அடிப்படையாக வைத்து தன் பாணியில் திரைக்கதை அமைத்திருந்தார் வெற்றிமாறன். சாதிப் பிரச்சினை பல தலைமுறைகளைத் தாண்டி இன்னமும் எப்படி பெரிய பிரச்சினையாக இருக்கிறது என்பதை அழுத்தமாகப் பதிவு செய்திருந்தார். தனுஷ், மஞ்சு வாரியர், பசுபதி, கென் கருணாஸ், டிஜே என நடிகர்களும் வெற்றிமாறனின் கதைக்குப் பெரியளவில் கை கொடுத்தார்கள். இசை ரசிகர்கள் மத்தியில் மீண்டும் வந்துட்டேன் என ஜிவி பிரகாஷ் நிரூபித்தார். வசூல் ரீதியில் தனுஷின் படங்கள் வரிசையிலிருந்த அனைத்து சாதனைகளையும் முறியடித்தது. இப்போது வரை சில திரையரங்குகளில் திரையிடப்பட்டு வருவதே இந்தப் படத்தின் வெற்றிக்கு ஒரு சாட்சி.

கைதி

'பிகில்' போட்டியா என்று நினைத்த அனைவரையும் விசிலடிக்க வைத்த படம். நாயகி இல்லை, பாடல் இல்லை என்றாலும் திரைக்கதையால் பார்வையாளர்களைக் கட்டிப் போட்டார் லோகேஷ் கனகராஜ். கார்த்தியின் அசாத்தியமான நடிப்பு, தீனாவின் சின்னச் சின்ன காமெடி என மக்கள் கொண்டாடித் தீர்த்தார்கள். பொருட்செலவும் குறைவு, சரியான முறையில் விநியோகம் என்பதால் பெருமளவு லாபத்தை அள்ளிக் கொடுத்தது. நேரடி வெளியீடு என்பதால் எந்தளவுக்கு வெற்றி என்பது தயாரிப்பாளருக்கே வெளிச்சம்.

ஏ1

'தில்லுக்கு துட்டு 2' வெற்றிக்குப் பிறகு சந்தானம் நடிப்பில் வெளியான படம். லோக்கல் பையனுக்கு, அக்ரஹாரத்துப் பெண்ணுக்கும் நடக்கிற கலாய்ச்சலான லவ் ஸ்டோரி தான் சார் படம். சந்தானத்தின் கவுன்ட்டர் வசனங்கள் அனைத்துக்குமே வரவேற்பு கிடைத்தாலும், படத்தின் குறைந்த பட்ஜெட், சரியான முறையில் விநியோகம் இந்தப் படத்தின் வெற்றியை உறுதி செய்தது.

தடம்

வசூல் ரீதியில் ஹிட்டுக்காக ஏங்கிய மகிழ் திருமேனியின் ஆசையை நிறைவேற்றிய படம். ஒரே கொலைக்குக் கைதாகிற ஓர் உரு இரட்டையர்கள், இருவரில் யார் கொலை செய்தார்கள், யார் மீது யார் பழி போடுகிறார்கள் என்பதை நல்ல த்ரில்லராக சொன்ன படம். போட்ட முதலுக்கு மோசமில்லாத வசூலித்த படங்களின் வரிசையில் 'தடம்' தனியிடம் பிடித்தது.

மான்ஸ்டர்

வீட்டிற்குள் ஒரு எலி நுழைந்து செய்யும் சேட்டைகளே படம். ட்ரெய்லர் வெளியானபோது, ஏதோ ஹாலிவுட் படத்தோட காப்பி எனத் தகவல்கள் பரவினாலும், உங்கள் நினைப்பே தப்புடா என்று படம் சொன்னது. எஸ்.ஜே.சூர்யா இந்தப் படத்துக்குச் சரியான தேர்வு. ரொம்ப சுவாரசியமான நகரும் திரைக்கதை. குழந்தைகள் தொடங்கி பெரியவர்கள் வரை ரசிக்க வைத்த படம். இப்போது இணையத்தில் யார் வீட்டிலாவது எலி தொந்தரவு இருந்தால், உடனடி போட்டோ எடுத்து 'மான்ஸ்டர்' என்று ட்வீட் செய்ய வைத்த வகையில் இந்தப் படம் மிகப் பெரிய வெற்றி. அதேபோல், விநியோகஸ்தர்களுக்கும் இந்தப் படம் நல்ல லாபத்தை அளித்துள்ளது. நேரடி வெளியீடு என்பதால் எந்த அளவுக்கு வெற்றி என்பதை விநியோகஸ்தர்களால் சொல்ல முடியவில்லை.

நெஞ்சமுண்டு நேர்மையுண்டு

ப்ளாக் சீப் யூடியூப் பக்கத்திலிருந்து கார்த்திக் வேணுகோபாலன் இயக்குநராகவும், டிவியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்த ரியோ நாயகனாகவும் அறிமுகமான படம். குறைந்த முதலீடு, யூடியூப் பிரபலங்கள் அனைவரும் படத்தில் என இருந்ததால் படம் விநியோகஸ்தர்கள் மத்தியில் போட்ட முதலீட்டில் மோசமில்லை என்ற லிஸ்ட்டில் உள்ளது.

நேர்கொண்ட பார்வை

'பிங்க்' ரீமேக்கில் அஜித் என்பதே அனைவருக்கும் ஆச்சரியம் அளித்தது. இந்தக் கதைக்களத்துக்கு தமிழில் எப்படி வரவேற்பு கிடைக்கும் என்ற யோசித்தபோது, படமோ பெண்கள் மத்தியில் அஜித்துக்கு நல்ல பெயரைச் சம்பாதித்துக் கொடுத்தது. அதிலும், ரசிகர்களுக்குத் தேவையான சண்டையையும், பன்ச் வசனங்களையும் சேர்த்தே பரிமாறினார் இயக்குநர் ஹெச்.வினோத். இந்தப் படம் விநியோகஸ்தர்கள் மத்தியில் முதலீட்டுக்கு மோசமில்லை என்ற பட்டியலில் உள்ளது.

பிகில்

விஜய் - அட்லி இணைந்த 3-வது படம். கதை சர்ச்சை ஆரம்பத்திலிருந்தே இந்தப் படத்தைத் துரத்தியது. பெரும் பொருட்செலவு, பெண்கள் கால்பந்து விளையாட்டே மையம் என எதிர்பார்ப்பு அதிகரித்தது. அதிலும் இரண்டு விஜய் என ஃபர்ஸ்ட் லுக் வெளியான போது விநியோகஸ்தர்கள் பெரிதும் நம்பினார்கள். ஆனால், படத்தின் அநியாயப் பொருட் செலவுக்கு விநியோகஸ்தர்கள் மத்தியில் முதலீட்டுக்கு மோசமில்லை லிஸ்ட் தான் என்கிறார்கள். ஏனென்றால் இந்தப் படத்துக்கு முதலீடு செய்தபோது, கண்டிப்பாக நமக்கு இவ்வளவு பணம் எப்படி திரும்ப வரும் இதற்கு 'பாகுபலி 2' அளவுக்கு வசூல் பண்ண வேண்டுமே என்று எண்ணினார்கள். அந்த நம்பிக்கையை எல்லாம் தகர்ந்தெறிந்து போட்ட முதலீட்டைத் திரும்பக் கொடுத்து நம்பிக்கை அளித்தது. அதுவே இந்தப் படத்துக்கு மிகப்பெரிய வெற்றி என்கிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x