Published : 30 Dec 2019 03:01 PM
Last Updated : 30 Dec 2019 03:01 PM

இளையராஜாவை மிஞ்சி ஒரு இசைக் கலைஞன் பிறந்து வருவது கஷ்டம்: பாரதிராஜா புகழாரம்

இன்றளவும் இனியும் இளையராஜாவை மிஞ்சி ஒரு இசைக் கலைஞன் பிறந்து வருவது கஷ்டம் என்று 'தமிழரசன்' இசை வெளியீட்டு விழாவில் பாரதிராஜா பேசினார்.

பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, ரம்யா நம்பீசன், சுரேஷ் கோபி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'தமிழரசன்'. ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று (டிசம்பர் 29) நடைபெற்றது.

இதில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன், இயக்குநர் பாரதிராஜா, ராதாரவி உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டார்கள்.

இந்த விழாவில் இயக்குநர் பாரதிராஜா பேசும் போது, "விஜய் ஆண்டனி ஒரு ஆச்சரியமான முகம். நேரில் ரொம்ப சாதாரணமாக இருப்பார். ஆனால் படத்தில் வேற மாதிரி இருக்கிறார். விமானத்தில் பார்த்தபோது, நல்ல இசையமைப்பாளர் ஏன் நடிகன் ஆனார் என யோசித்தேன். விஜய் ஆண்டனிக்கு நல்ல மனது இருக்கிறது.

இளையராஜாவுடன் முரண்பாடு ஏற்பட்டு, நிறைய இசையமைப்பாளர்களுடன் பணிபுரிந்துவிட்டேன். இன்றளவும் இனியும் அவரை மிஞ்சி ஒரு இசைக் கலைஞன் பிறந்து வருவது கஷ்டம். பாடல்கள் கூட பாடிவிடலாம். ஆனால், பின்னணி இசை என்பது ஒரு படத்துக்கு உயிர் நாடி. என்னுடைய படங்கள் பேசுகிறது என்றால், அது இளையராஜாவின் இசையால் மட்டுமே பேசும். எந்த இடத்தில் எந்த இசை இருக்க வேண்டும், எந்த அளவுக்குச் சப்தம் இருக்க வேண்டும் எனத் தீர்மானிக்கிற ஒரே ஆள் அவர்.

படத்தில் ஒன்றுமே இல்லாமல் எடுத்துக் கொடுத்தால் கூட பின்னணி இசையின் மூலம் உயிர் வர வைத்துவிடுவார். அவர் தமிழகத்துக்குக் கிடைத்தது மிகப்பெரிய விஷயம். எனக்கும் அவருக்கும் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், அவருக்கு இணையான இசைக் கலைஞனைக் கண்டுபிடிப்பது கஷ்டம்.

இன்றைக்கு இளைஞர்கள் மிகத் திறமையானவர்களாகத் திரையுலகிற்குள் வருகிறார்கள். அதிலும் 10 - 15 பேருடைய திறமை வியக்க வைக்கிறது. அனைவருமே நல்ல படங்கள் கொடுக்கிறார்கள். ஆனால், அதில் கொஞ்சம் வன்முறையைக் குறைத்துவிடுங்கள். அது சிறுவர்களைப் பாதிக்கும். உண்மையில் சிறுவர்களை சினிமா பாதிக்கிறது" என்று பேசினார் இயக்குநர் பாரதிராஜா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x