Published : 30 Dec 2019 07:00 AM
Last Updated : 30 Dec 2019 07:00 AM

திரை விமர்சனம்- சில்லுக் கருப்பட்டி

நான்கு தனித்தனிக் கதைகள் இணைந்த தொகுப்புத் திரைப்படம். முதல் கதை யான ‘பிங்க் பேக்’, குப்பை பொறுக் கும் சிறுவன் மாஞ்சாவின் வாழ்க் கையுடன் பணக்காரச் சிறுமியை இணைக்கிறது. 2-வது கதையான ‘காக்கா கடி’, புற்றுநோய் பாதித்த முகிலன் என்ற மென்பொருள் துறை இளைஞனுக்கும், நவயுக ஆடைகளை வடிவமைக்கும் மது என்ற யுவதிக்கும் இடையில் மலரும் பிரியத்தை பேசுகிறது. ‘டர்ட்டில்ஸ்’ எனும் 3-வது கதை, திருமணமே செய்துகொள்ளாமல் முதுமை அடைந்துவிட்ட யசோதாவுக்கும், 30 ஆண்டுகளுக்கு மேல் குடும்பம் நடத்திய பின்னர் மனைவியை இழந்த நவநீதன் என்ற முதியவருக் கும் இடையிலான அன்பைச் சொல்கிறது. பள்ளி செல்லும் 3 சிறார்களின் பெற்றோரான நடுத்தர வயது தம்பதி, இயந்திரத்தனமாக கடந்துவிட்ட அவர்களது 12 ஆண்டுகாலத் திருமண வாழ்க்கையில் ஏற்படும் உரசலையும், அதைத் தொடர்ந்து அவர்கள் மீண்டும் உணரும் காமம் தாண்டிய காதலையும் முன்வைக்கிறது இறுதிக் கதை ‘ஹே அம்மு’.

4 கதைகளும் முன்வைக்கும் காதலையே இணைப்புப் பால மாக்கி, ஒரு முழுநீள திரைப்படத் துக்கான உணர்வைத் தருவதில் வெற்றிபெற்றிருக்கிறது திரைக் கதை. பாலு மகேந்திராவின் ‘கதை நேரம்’ குறும்படங்களில் நிரம்பி வழியும் மெல்லுணர்வை 4 அத்தி யாயங்களிலும் படரவிட்டிருக்கி றார் இயக்குநர் ஹலிதா ஷமீம்.

குப்பை பொறுக்கும் சிறுவன் டேஷ் கதாபாத்திரம் உயிர்ப்புடன் இருக்கிறது. ஆனால், மாஞ்சா கதா பாத்திரம் தட்டையாக வடிவமைக் கப்பட்டுள்ளது. வைர மோதிரம், ஏழைச் சிறுவன், அவனது நேர்மை, பணக்காரச் சிறுமி, அவளது புரிதல் என்னும் வழியில் நீதி போதனை யாக மாறும் முதல் கதையின் பய ணம், வர்க்க வேறுபாடுகளைக் கடந்து முகிழ்க்கும் தோழமையை ‘சிண்ட்ரெல்லா’ கதைக்குரிய சினிமா அழகியலுடன் சித்தரிக்கி றது.

சொல்லக் கூச்சப்படும் இடத்தில் புற்றுநோய் பாதித்த முகிலனுக்கும் அவனது திறமையால் ஈர்க்கப் படும் மதுவுக்கும் ‘ஷேர் டாக்ஸி’ பயணத்தில் தொடர்ந்து நிகழும் சந்திப்புகளும், காதலும் சினிமாத் தனமானவை. முடிந்தவரை புற்று நோய் சோகத்தை தவிர்த்தது ஆறு தல். இந்த அத்தியாயம் பார்த்திப னின் ‘பொண்டாட்டி தேவை’ படத்தை நினைவூட்டுகிறது.

மனைவியை இழந்த நவநீத னுக்கும், யசோதாவுக்குமான சந் திப்பும், உரையாடலும் ஒருவகை யில் ஓர் ‘அந்தி மந்தாரை’. திரு மணத்தை மறுத்தவராக இல்லா மல், திருமணம் ஆகாதவராக யசோதாவை சித்தரித்திருப்பது பழமை. அவர்கள் இடையே ஏற்படும் அணுக்கமும் அன்பும் புதுமை.

தனபால் - அமுதினி இடையி லான திருமண உறவை சொல்லும் கதை உற்சாகமாக கையாளப்பட் டுள்ளது. தம்பதிக்குள் எழும் விரிசல் புதிது இல்லை என்றபோதும், புத்துணர்வுடன் ஈர்க்கிறது.

பிரச்சார பீரங்கியாகப் புகழ் பெற்றுவிட்ட சமுத்திரகனியை அந்த பிம்பத்தில் இருந்து வெளியே இழுத்துப்போட்டு, மிகை உணர் வில் இருந்து மெல்லுணர்வுக்கு கனியும் கதாபாத்திரத்தில் நடமாட விட்டிருக்கிறார் இயக்குநர். அவரது ஜோடியாக நடித்துள்ள சுனைனா வின் நடிப்பு மிக இயல்பு. அத்து டன் ‘பெண்ணுக்கு காமத்தில் இருக்கும் சம உரிமை’யைக் கோரி, சுயமரியாதையை மீட்டுக் கொள்ளும் கதாபாத்திரமாக அவரை சித்தரித்திருப்பது பெண் ணுலகு அறிந்த ஒரு பெண் இயக் குநருக்கே உரித்தான பார்வை.

எல்லாக் கதைகளிலும் அற உணர்வு முன்னிலைப்படுத்தப்பட் டுள்ளது. சினிமாவில் அற உணர்வு சொல்லப்படலாம். ஆனால், அதற் காகவே படம் எடுத்தது போன்ற உணர்வை 4 கதைகளும் தருவதை இயக்குநர் தவிர்த்திருக்கலாம்.

4 கதைகளிலும், சிறிது பிசகினா லும் தவறான கண்ணோட்டத்தை தந்துவிடும் கதாபாத்திரங்களை ஏற்றுள்ள சமுத்திரகனி, சுனைனா, மணிகண்டன், லீலா சாம்ஸன், நிவேதிதா சதீஷ், க்ரவ்மகா ஸ்ரீராம், சாரா அர்ஜுன், ராகுல் ஆகிய அனைத்து நடிகர்களுமே கண்ணியமான உணர்வைத் தரும் இயல்பான நடிப்பை வெளிப் படுத்தி அவற்றுள் கச்சிதமாகப் பொருந்தியும் இருக்கிறார்கள்.

ஷேர் டாக்ஸிகளில் ஒரே நபர் கள் தொடர்ந்து பயணம் செய்வது சாத்தியமா; அலெக்ஸா போன்ற ஒரு செயற்கை நுண்ணுணர்வு கருவி, மாபெரும் தேவதூதன் போல செயல்பட முடியுமா போன்ற கேள்விகள் இருந்தாலும் கதைக ளின் ஓட்டம் அவற்றை மறக்கச் செய்துவிடுகிறது.

பிரதீப் குமாரின் பின்னணி இசை படத்தின் மெல்லுணர்வுடன் இணைந்து பயணிக்கிறது. அபி நந்தன் ராமானுஜம், மனோஜ் பரமஹம்சா, விஜய் கார்த்திக் கண்ணன், யாமினி ஞானமூர்த்தி என கதைக்கு ஒருவர் வீதம் 4 பேர் ஒளிப்பதிவு செய்துள்ளனர். ஆனால் ஒரே ஒளிப்பதிவாளரின் படமாக்கம் போன்ற உணர்வைத் தரும் படப்பிடிப்பு, முழுநீள படத்துக் கான உணர்வைத் தக்கவைத்துக் கொள்ள உதவுகிறது.

பதின்ம வயது, பதின்மம் கடந்த இளமை, குடும்பத்துக்காக தேயும் நடுத்தர வயது, பற்றிக்கொள்ளப் பிடிமானம் தேடும் முதுமை என மனித வாழ்வின் 4 படிநிலைகளிலும் ஊடாடும் காதலை, அது கோரும் புரிதலை, அதன் கண்ணியத்தை நேர்மையுடன் உணர்த்திச் சென்ற வகையில், இது சுவைத்து முடித்த பின்னரும் நாவில் இனிப்புத் தங்கியிருக்கும் மனதுக்கு நெருக்கமான கருப்பட்டி!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x