Published : 28 Dec 2019 08:55 PM
Last Updated : 28 Dec 2019 08:55 PM

பெண் குழந்தைக்குத் தாயானார் 'விஜய் டிவி' புகழ் அறந்தாங்கி நிஷா

விஜய் தொலைக்காட்சியில் பல்வேறு காமெடி நிகழ்ச்சிகளில் பிரபலமான அறந்தாங்கி நிஷாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தனது காமெடியால் அனைவரையும் சிரிக்க வைத்து வந்தார் 'அறந்தாங்கி' நிஷா. 'கலக்க போவது யாரு' நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானதால், தொடர்ச்சியாக அவருக்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள அனுமதி அளித்தது விஜய் தொலைக்காட்சி.

தொலைக்காட்சி மூலம் பிரபலமானதால், பல்வேறு படங்களில் சிறுசிறு கதாபாத்திரங்களிலும் நடித்து வந்தார். சில காலமாக விஜய் தொலைக்காட்சியில் எந்தவொரு நிகழ்ச்சியிலுமே தலைகாட்டாமல் இருந்தார். டிசம்பர் 11-ம் தேதி அவருக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. அதன் புகைப்படத்தைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார். இதனால், அவருக்குப் பலரும் வாழ்த்து தெரிவித்து வந்தார்கள்.

தற்போது தனக்குப் பெண் குழந்தை பிறந்திருப்பதாகவும், அக்குழந்தைக்கு 'சாஃபா ரியாஸ்' எனப் பெயரிட்டு இருப்பதாகவும் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்துள்ளார் அறந்தாங்கி நிஷா. அவருக்குப் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

அறந்தாங்கி நிஷாவின் கணவர் பெயர் ரியாஸ். இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் இருக்கிறான். இரண்டாவதாகப் பெண் குழந்தைக்குத் தாயாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x