Published : 28 Dec 2019 02:59 PM
Last Updated : 28 Dec 2019 02:59 PM

திரை விமர்சனம்- Spies In Disguise 

உலகின் தலைசிறந்த உளவாளியான லான்ஸ் ஸ்டெர்லிங் தனது ஆற்றல்களால் எத்தகைய குற்றங்களையும் தடுக்கக் கூடியவன். அவனது உதவியாளனாக இருக்கும் வால்டர் என்ற இளைஞனுக்கு வன்முறையின் மீது நம்பிக்கை கிடையாது. சிறுவயது முதலே அன்பின் மூலமே உலகை வசப்படுத்த முடியும் என்ற எண்ணம் கொண்ட அவனுக்கு நேரெதிராக இருப்பவன் லான்ஸ்.

ஒரு மிகப்பெரிய அச்சுறுத்தலை தடுக்கும் வேலையில் லான்ஸ் ஈடுபடும்போது வால்டர் செய்யும் ஒரு சிறிய தவறால் வில்லன் தப்பித்து விடுகிறான். இதனால் வால்டரின் வேலை பறிபோகிறது. செய்யாத குற்றத்துக்காக லான்ஸை போலீஸ் துரத்துகிறது.

அவர்களிடமிருந்து தப்பிக்க வால்டரின் உதவியை நாடுகிறான் லான்ஸ். அவன் வீட்டுக்கு செல்லும் லான்ஸ் எதிர்பாராத விதமாக அங்கு வால்டர் சோதனைக்காக வைத்திருக்கும் ஒரு ரசாயனத்தை எடுத்து குடித்ததால் புறாவாக மாறுகிறான். தான் செய்யாத குற்றத்திலிருந்து லான்ஸ் தப்பித்தானா? மீண்டும் அவனால் மனித உருவுக்கு மாற முடிந்ததா? இதற்கான பதில்தான் 'ஸ்பைஸ் இன் டிஸ்கைஸ்’.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ’ப்ளூ ஸ்கை’ நிறுவனம் தயாரித்திருக்கும் அனிமேஷன் படம் இது. ஜெமினி மேன் என்ற தோல்விப்படத்துக்கு பிறகு வில் ஸ்மித்தும், ஸ்பைடர்மேன் ஃபார் ஃப்ரம் ஹோம் படத்தின் வெற்றிக்கு பிறகு டாம் ஹாலன்ட்டும் இணைந்திருக்கும் படமும் கூட.

ஆரம்பத்தில் சற்று தொய்வுடன் இருந்தாலும், வில் ஸ்மித் புறாவாக மாறிய பின்பு க்ளைமாக்ஸ் வரை எங்கும் நிற்காமல் ஜெட் வேகத்தில் பறக்கிறது திரைக்கதை. படத்தின் மிகப்பெரிய பலமே படம் முழுக்க தூவப்பட்டிருக்கும் நகைச்சுவைதான். வேகம் குறையும் இடங்களை எல்லாம் நகைச்சுவை வசனங்கள் தூக்கி நிறுத்துகிறது. இல்லாவிட்டால் பல இடங்களில் கொட்டாவி வந்திருக்கும். ஜேம்ஸ் பாண்ட் பட பாணியில் உருவாக்கப்பட்ட படமாக இருப்பினும், ஸ்பை த்ரில்லர் ஹாலிவுட் படங்களை கேலிக்குள்ளாக்கும் சுயபகடியும் ஆங்காங்கே உண்டு.

எளிதில் யூகிக்கக் கூடிய, அனிமேஷன் படங்களுக்கென்றே எழுதப்படும் அரதப் பழைய கதையானாலும் அதை சொன்னவிதத்தில் ஜெயிக்கிறார்கள் இயக்குநர்கள் ட்ராய் குயேன் மற்றும் நிக் ப்ரூனோ.

எதற்கும் வன்முறை தீர்வு கிடையாது என்பதை வலிந்து திணித்து பாடம் எடுக்காமல் குழந்தைகளுக்கு அவர்களின் பாணியிலேயே எடுத்துரைக்கிறது இப்படம். வருடக்கடைசியை குழந்தைகளோடு சிரித்து மகிழ சிறந்த பொழுதுபோக்காக வந்திருக்கிறது 'ஸ்பைஸ் இன் டிஸ்கைஸ்’.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x