Published : 28 Dec 2019 09:59 AM
Last Updated : 28 Dec 2019 09:59 AM

நடிகர் கெவின் ஸ்பேஸி மீது #மீடூ குற்றச்சாட்டு வைத்த எழுத்தாளர் தற்கொலை

ஆரி பென் - கெவின் ஸ்பேஸி

நார்வேயை சேர்ந்த எழுத்தாளரும், நார்வே நாட்டின் இளவரசி மார்த்தா லூயியின் முன்னாள் கணவருமான ஆரி பென் டிசம்பர் 25 அன்று தற்கொலை செய்து கொண்டார். இவர் பிரபல ஹாலிவுட் நடிகர் கெவின் ஸ்பேஸி மீது மீடூ குற்றச்சாட்டை வைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது 47 வயதாகும் ஆரி பென் தனது வீட்டு அறையில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். நார்வேயின் அரச குடும்பம் பென்னின் மறைவுக்கு இரங்கல்கள் தெரிவித்துள்ளது. 2007ஆம் ஆண்டு நடந்த ஒரு பொது நிகழ்ச்சியில் நடிகர் கெவின் ஸ்பேஸியுடன் தான் பேசிக்கொண்டிருந்த போது அவர் தன்னிடம் தவறான முறையில் நடந்து கொண்டார் என ஆரி பென் குற்றம்சாட்டியிருந்தார். கெவின் ஸ்பேஸி அந்த சமயத்தில் இந்த குற்றச்சாட்டுக்கு எந்த விதமான பதிலையும் கூறவில்லை.

ஆனால் லிண்டா கல்கின் மற்றும் ஜான் டோ என ஏற்கனவே ஸ்பேஸி மீது பாலியல் குற்றச்சாட்டு வைத்தவர்களில் இரண்டு பேர் இந்த வருடம் மரணித்துள்ளனர். இன்னும் பல ஆண்கள் ஸ்பேஸி மீது இப்படியான பாலியல் குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளனர். ஸ்பேஸி மீது ஸ்காட்லாந்து காவல்துறையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தக் குற்றாச்சாட்டுகளைத் தொடர்ந்து 'ஹவுஸ் ஆஃப் கார்ட்ஸ்' என்ற வெப் சீரிஸிலிருந்து கெவின் ஸ்பேஸி நீக்கப்பட்டார். அவருக்குக் அளிக்கப்படவிருந்த எம்மி விருதும் திரும்பப் பெறப்பட்டது.

ஆனால் அந்த வெப் சீரிஸில் அவர் நடித்த ஃப்ராங்க் அண்டர்வுட் என்ற கதாபாத்திரமாகத் தோன்றி, டிசம்பர் 24 அன்று யூடியூபில் ஒரு கிறிஸ்துமஸ் வாழ்த்து வீடியோவை ஸ்பேஸி பதிவேற்றியுள்ளார். அதில் எதிரிகளை அன்பால் கொல்ல வேண்டும் என்று அவர் பேசியுள்ளார். ஸ்பேஸியின் இந்த வீடியோ குறித்தும், அடுத்த நாளே தற்கொலை செய்துகொண்ட ஆரி பென் குறித்தும் சமூக வலைதளங்களில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x