Published : 27 Dec 2019 09:14 PM
Last Updated : 27 Dec 2019 09:14 PM

’இந்தியன் 2’ படப்பிடிப்பின் திட்டங்கள்: முழுமையான அப்டேட்

ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் 'இந்தியன் 2' படப்பிடிப்பு திட்டங்கள் என்ன என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் கமல், சித்தார்த், காஜல் அகர்வால், பாபி சிம்ஹா, விவேக், ப்ரியா பவானி ஷங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'இந்தியன் 2'. லைகா நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார். ரத்னவேலு ஒளிப்பதிவாளராக பணிபுரிந்து வருகிறார்.

சென்னையில் தொடங்கப்பட்ட இந்தப் படத்தின் படப்பிடிப்பு வடமாநில படப்பிடிப்பை முடித்துவிட்டு, தற்போது மீண்டும் சென்னையில் படப்பிடிப்பு நடத்தி வருகிறது. இதனிடையே கமலுக்குக் காலில் அறுவை சிகிச்சை செய்திருப்பதால், எப்போது 'இந்தியன் 2' படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்பது தெரியாமல் இருந்தது.

இதுகுறித்து விசாரித்த போது, பாபி சிம்ஹா - விவேக் சம்பந்தப்பட்ட காட்சிகளை தற்போது படமாக்கி வருகிறார் ஷங்கர். இதன் படப்பிடிப்பில் பிப்ரவரியிலிருந்து கமல் கலந்து கொள்ள முடிவு செய்துள்ளார். கமல் இல்லாவிட்டாலும், அவர் இல்லாத காட்சிகளை முடிக்கலாம் என்று திட்டமிட்டுப் படப்பிடிப்பு நடத்தி வருகிறார் கமல்.

கமல் - காஜல் அகர்வால் சம்பந்தப்பட்ட காட்சிகளுக்காக, சென்னையிலுள்ள ஈ.வி.பியில் பிரம்மாண்டமான அரங்குகள் தயாராகி வருகிறது. அங்கு ஜனவரியில் கமலின்றி காஜல் அகர்வாலை வைத்து சில காட்சிகளைப் படமாக்க முடிவு செய்துள்ளார் ஷங்கர். இந்த அரங்கில் 'இந்தியன் 2' படத்தில் கமல் இளமையாகத் தோன்றவுள்ள காட்சிகளை படமாக்குகிறது படக்குழு.

இந்தப் படப்பிடிப்பை முடித்துவிட்டு, வெளிநாடு செல்லவுள்ளனர். அங்கு 'இந்தியன்' படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியிலிருந்து கமல் என்ன செய்கிறார், எதனால் இந்தியா திரும்புகிறார் உள்ளிட்ட முக்கியக் காட்சிகளைப் படமாக்குகிறார்கள். அதில் ஒரு பாடல் அடங்கும் என்கிறார்கள்.

இந்தக் காட்சிகள் போக மீதமுள்ள காட்சிகள் அனைத்துமே சென்னையிலேயே அரங்குகள் அமைத்து படமாக்குகிறார்கள். ஜூன் மாதத்துக்குள் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடித்து இறுதிக்கட்டப் பணிகளைத் தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x